தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பற்றிய திரைப்படம்

ஆஸ்திரேலியாவில், ஈழன் இளங்கோவின் இயக்கத்தில் உருவான, ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ திரைப்படம் வெளியாக உள்ளது.

நீண்ட காலமாகக் காத்திருந்த இத்திரைப்படத்தின், இசை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை 25 ஆம் திகதி, மாசி மாதம் 2018 அன்று ஆஸ்திரேலியாவில், பெண்டில்ஹில்லில் உள்ள யாழ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ ஒரு நடப்பியலுக்கு மாறுபட்ட தன்மையுடைய கதை பாணியில் அமைக்கப்பட்ட, இலங்கை அரச படையினரால் துன்புறுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட தமிழர்களினதும், அகதிகளாய் அயல் நாடுகளில் தமிழர் படும் அவலங்களையும், உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு உருவான படம்.

பாதிப் படம் தமிழில் துணையுரையுடன் ஆங்கிலத்திலும், மீதி ஆங்கில துணையுரையுடன் தமிழிலும் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் துணைக் கதைகள், குறும்படங்களாக பல சர்வதேச விருதுகளை தட்டிச்சென்ற கதைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம், 2009ல் இலங்கை அரச படையினரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட தலைவர் பிரபாகரனின் புதல்வன் பாலச்சந்திரனுக்கும், பாடகியும் உடகவியளாளரும், நடிகையுமான சகோதரி இசைப்ரியாவுக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, அவர்களின் இழப்பை கருவாக கொண்டு உருவான கதைதான் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’.

பாலச்சந்திரனின் வேடத்தில் இயக்குநர் ஈழன் இளங்கோவின் மகன் சத்யா இளங்கோ நடித்துள்ளார். ஈழத்தில் நடந்த கற்பழிப்பு கட்சிகளோ, கொலை கட்சிகளோ துன்புறுத்தல் கட்சிகளோ இத்திரைப்படத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இருப்பினும், அதைவிட ஆழமான உணர்வுகளையும் வலியையும் அடக்கியுள்ளது இத்திரைப்படம்.

ஆஸ்திரேலியாவிலும் , பிரான்ஸ் நாட்டிலும் படமாக்கப்பட்ட இப்படத்தின் தொழில்நுட்ப வேலைப்பாடுகள் தமிழ் நாட்டு திரைக் கலைஞர்களால் செய்யப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்திற்கு சென்னையில் பிரபலமான சதிஷ் வர்ஷன் இசையமைத்துள்ளார். சதீஷ் வர்ஷனின் குரலில் இரு பாடல்களும், தேசிய விருது பெற்ற பிரபல பாடகி சுர்முகியின் குரலின் ஒரு பாடலும் அமைந்துள்ளது.

இத்திரைப்படத்தில், ஆஸ்திரேலிய தமிழ், ஆங்கில நடிகர்களுடன் பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழ் நடிகர்களும், அவர்களோடு ஐம்பது வருட திரையுலக அனுபவமுள்ள ஈழத்து பிரபல நடிகர் ஏ.ரகுநாதன் அவர்களும் நடித்துள்ளார்.

‘சாட்சிகள் சொர்கத்தில்’ ஒவ்வொரு தமிழனும் பார்க்கவேண்டிய திரைப்படம். பார்ப்பது மட்டும் அல்ல, இத்திரைப்படத்தை வேற்றுமொழி இனத்தவருக்கும் எடுத்துச்செல்ல வேண்டும். மொழி, உரையாடல், கதை அனைத்தும் அதற்கேற்பவே அமைக்கப்பட்டுள்ளது. திரையுலக வரலாற்றில், முக்கியமாக, ஈழத்தமிழரின் திரையுலக வரலாற்றில், இப்படம் வேறு ஒரு பரிமாணம் எடுத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

ஈழத் தமிழர்களின் வலிகள் இதுவரை கூறப்படாத வேறொரு வடிவில், வேறொரு அணுகுமுறையில், வேறொரு பரிமாணத்தில் கூறப்பட்டிருக்கிறது. வேற்றுமொழி பேசுபவர்களுக்குக்கூட ஈழத் தமிழரின் வலிகள் இலகுவாய் புரியும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தை வெற்றியடைய செய்வது ஒவ்வொரு தமிழனுடைய கடமை என்று உரிமையுடன் கூறலாம்.

Leave a Response