குவைத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனே மீட்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

குவைத் நாட்டில் சிக்கித் தவித்து வரும் தமிழர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

குவைத் நாட்டிலுள்ள கராபி நேசனல் (KHARAFI NATIONAL) எனும் பிரபலக் கட்டுமான நிறுவனத்தில் கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்து வரும் ஏறக்குறைய 8,000 தொழிலாளர்களுக்குக் குடியுரிமைப் புதுப்பிக்கப்படாததால் அவர்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்து எவ்வித நிவாரணமும் கிடைக்கப்பெறாமல் நாடு திரும்பும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்களும் உள்ளனர். தங்களது பொருளாதாரத்தை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி பலருக்கு உடல்நிலையும் மிக மோசமாகப் பாதிப்படைந்திருக்கிறது. அவர்களில் ஒரு தொழிலாளி மரணித்தும் உள்ளார் என்பதிலிருந்து அவர்கள் எந்தளவுக்கு உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறியலாம்.

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஊதியம் பெறாத அத்தொழிலாளர்கள் அந்நிறுவனத்தின் பல்வேறு துறைகளைச் சார்ந்த மேலதிகாரிகளிடத்தில் முறையிட்டும், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் எத்தகைய பலனும் கிடைக்கப்பெறாததால் ஊதியமில்லாத அவ்வூழியர்கள் தங்களது குடும்பத்திற்கான மாதாந்திரச் செலவு உள்ளிட்ட பல்வேறு செலவினங்களுக்காக ஒரு ரூபாய் கூட ஊருக்கு அனுப்ப இயலாத துயர்மிகு சூழலில் தவித்து வருகின்றனர். தங்குவதற்கு இடமும், உண்ணுவதற்கு உணவும் அளித்து வந்த கராபி நேசனல் நிறுவனம் நாளடைவில் உணவு தயாரிக்கும் பணியாளர்களுக்கும் சம்பளம் தர மறுத்ததால் அவர்களும் போராட்டத்தில் இறங்க, உணவின்றித் தவித்து வந்த ஏறத்தாழ 2,000 தமிழர்களுக்கும், 5,000 க்கும் மேற்பட்ட மற்ற மாநிலத் தொழிலாளர்களுக்கும் குவைத் நாட்டில் செயல்படுகின்ற பல்வேறு அமைப்புகள் உணவளித்து வந்தன. தற்போது ஏழாண்டுகளுக்குப் பிறகு குவைத் நாட்டில் பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் குடியுரிமை, கடவுச்சீட்டு இல்லாதவர்கள் இதன் மூலம் தங்கள் நாட்டிற்குச் செல்ல முடியும் எனும் வாய்ப்பைப் பயன்படுத்தி எந்த ஒரு நிவாரணப் பணத்தையோ, சம்பளப் பாக்கியையோ, பிடித்தம் செய்த பணத்தையோ வழங்காமல் அவர்களைத் தாயகத்திற்கு அனுப்ப ஏற்பாடுகள் நடப்பதாகச் செய்திகள் வருகின்றன.

வேறு நிறுவனங்களுக்கு மாற்றக்கோரிய தொழிலாளர்களில் வெகு சிலருக்கு மட்டுமே அவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆதலால், பெரும்பாலான ஊழியர்கள் வேலையுமில்லாது, ஊருக்குத் திரும்ப வழியுமில்லாது தவித்து வருகிறார்கள். இந்திய வெளிவிவகாரத்துறை இணையமைச்சர்கள் திரு.அக்பர் மற்றும் திரு வீ.கே.சிங் ஆகியோர் குவைத் தொழிலாளர் நல அதிகாரிகளிடமும், கராபி நேசனல் நிறுவனத்தின் உரிமையாளரிடமும் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் இதுவரை எந்த ஒரு பலனும் தொழிலாளர்களுக்குக் கிடைக்கப் பெறவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை இந்தியத் தூதரகத்தின் மூலமாக வெளியிட்ட பின்னும் பாதிக்கப்பட்டவர்களுக்காக எந்த ஒரு நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொண்டு இந்திய அரசு குவைத் அரசாங்கத்திடமும், கிராபி நேஷனல் நிறுவனத்திடமும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் எனவும், பல வருடங்கள் கராபி நிறுவனத்தில் வேலை செய்த பொறியாளர்கள், அலுவலர்கள், அனைத்துக் கடைநிலை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கிடைக்கவேண்டிய இழப்பீட்டுத் தொகை, பணிமூப்புத் தொகை, பயணப் படி என அனைத்தும் கிடைக்க வழிவகைச் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். மேலும், இவ்விவகாரத்தில் மத்திய அரசிற்குத் தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுத்து அந்நிய தேசங்களில் அயராது உழைத்துத் தாயகத்திலுள்ள குடும்பங்களைக் காத்து வரும் மண்ணின் மக்களுக்கான உரிமைகள் யாவும் கிடைக்கப் பெறவும், கேரளாவைப் போன்று கடனுதவியும் மனநிலை, உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மூலமாக மருத்துவ உதவியும் கிடைக்க வழிவகைச் செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response