ரெமோ படத்தைத் தொடர்ந்து 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில்,சினேகா, பிரகாஷ்ராஜ்,விஜய்வசந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் மோகன்ராஜாவின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வேலைக்காரன்’.
அனிருத் இசையமைத்திருக்கும் இத்திரைப்படம் வரும் டிசம்பர் 22,2017 ஆம் தேதி வெளியாகிறது.
இப்படம் பற்றி இயக்குநர் மோகன்ராஜா பேசும்போது,
சிவகார்த்திகேயன் இல்லைனா இந்த படமே நடந்திருக்காது. ‘தனி ஒருவன்’ கொடுத்த அழுத்தத்தை நாம் செய்யப் போற படத்துலயும் கொடுக்கணும்னு கேட்டார்.
படத்துக்கு என்ன தேவையோ அதை தயங்காமல் பண்ணுங்கனு பெரிய தெம்பைக் கொடுத்தார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.
படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. வீம்புக்கு நடிகர்களை நடிக்க வைக்காமல் எல்லோருக்கும் நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறேன்.
ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் உழைப்பு அபரிமிதமானது. அவருடன் 3-வது படமும் இணைந்து பண்ணுவேன். அனிருத் பெரிய திறமையாளர். கதையை புரிஞ்சிக்கிட்டு சிறப்பான இசையைக் கொடுத்திருக்கிறார். நயன்தாரா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வரம். அவர் ஒரு படத்தில் இருந்தாலே அது மிகவும் சென்சிட்டிவான படமாகத்தான் இருக்கும், அந்த அளவுக்கு பக்குவமான நடிகையாகி இருக்கிறார். ஃபகத் பாசில், அரவிந்த்சாமி போன்ற மிகச் சிறந்த நடிகர்களை என் படங்களில் இயக்கியதில் நான் பெருமைப்படுகிறேன்.
1989-ல் ‘ஒரு தொட்டில் சபதம்’ படத்தில் இருந்து சினிமாவில் இருந்து வருகிறேன். நிறைய பேரிடம் ஆலோசித்துதான் படங்களை எடுத்து வருகிறேன். 14 உதவி இயக்குநர்கள், 2 ஆராய்ச்சி குழுக்கள், எழுத்தாளர்கள் சுபா ஆகியோருடன் நிறைய விவாதித்து அவர்களின் கருத்துகளையும் ஏற்றுக் கொண்டுதான் இரண்டு படங்களையும் உருவாக்கியிருக்கிறேன்.
இந்த ‘வேலைக்காரன்’ படத்தில் சமூகத்தில் கேட்க நினைத்த கேள்விகளைக் கேட்டிருக்கிறேன். 20 வருடங்களாக என் மனதுக்குள் இருந்த கேள்விகளைக் கேட்க, தகுதியை வளர்த்துக் கொண்டேன். ‘தனி ஒருவன்’ எனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. இந்தப் படத்தில் மக்கள் கேட்க நினைத்த கேள்விகளையும் சேர்த்து கேட்டிருக்கிறேன்.
பெரிய படங்களிலும் கருத்து சொல்ல முடியும், அதற்கான பெரிய மார்க்கெட்டை உருவாக்க முடியும் என்பதை இந்தப் படத்தில் முயற்சி செய்திருக்கிறோம்.
என்னை நம்பிக் கொடுத்த இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணத்துக்காக மட்டுமே படம் இயக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. படத்தில் தப்ப யாரும் விரும்பி பண்றதில்ல. ஜெயிக்கறதுக்காகத்தான் பண்றாங்க. நன்மை ஜெயிக்கும்னு நிரூபிச்சா நன்மையை விரும்பி பண்ணுவாங்கனு இந்தப் படத்தில் ஒரு வசனம் இருக்கு. அதுதான் உண்மை.
ஒரு நல்ல படம் வெளிவருவதில் நிறைய தடைகள் இருக்கின்றன. பரீட்சார்த்தமான படங்களின் பட்ஜெட் எப்போதும் 5 கோடிக்குள்தான் இருக்கும். ஆனால் இந்த படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது.
இங்கு நினைத்த படங்களை செய்ய யாருக்கும் உரிமை கிடைப்பதில்லை. தயாரிப்பாளர், ஹீரோ ஆகியோரை திருப்திப்படுத்தும் வகையிலான படங்களை எடுத்து, எங்களுக்கென்று ஒரு மேடையை அமைத்த பிறகுதான் நாம் நினைத்ததை எடுக்க முடியும்.
வேலைக்காரர்கள், முதலாளித்துவம் பற்றிய குறைகளை இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன். இந்த சமூகத்தில் உழைப்புக்கான ஊதியம் பெரும்பாலானோருக்கு கிடைப்பதில்லை. அதையும் சினிமா மூலம் சொல்ல முயற்சித்திருகிறேன்.
கேள்வி கேட்டு புரட்சி செய்த காலம் முடிந்து விட்டது. இப்போது பதில் சொல்லி புரட்சி செய்ய வேண்டிய காலம். இந்த படத்துக்கு பிறகு அதுதான் நடக்கும். சமூகத்தைப் பற்றி பேசும் படங்கள், நேர்மறையாக மட்டும்தான் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்.
இப்படம் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகிறது, குழந்தைகளும் விரும்பிப் பார்க்கிற படமாக இருக்கும் என்று நம்பிக்கையாகச் சொல்கிறேன் என்றார்.