அண்மையில் இணையவெளியெங்கும் உலவிக்கொண்டிருக்கும் படம் நடிகை சதாவுடையது. அது டார்ச்லைட் என்கிற படத்தில் சதாவின் தோற்றம்.
விஜய், பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவான ‘தமிழன்’ படத்தை இயக்கியவர் அப்துல் மஜீத். அதற்குப் பிறகு ‘கி.மு’, ‘துணிச்சல்’, ‘பைசா’, ‘தலகால் புரியல’ ஆகிய படங்களை இயக்கினார். தற்போது சதா நடிப்பில் உருவாகும் ‘டார்ச்லைட்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் ரித்விகா, இயக்குநர் ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘டார்ச்லைட்’ படத்தின் முதல்பார்வை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் பாலியல் தொழிலாளி தோற்றத்தில் சதா இருப்பதால் பரபரப்பாகி பெரிய அளவில் பேசப்படுகிறது.
‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் வந்தவர் சதா. ‘அந்நியன்’, ‘திருப்பதி’, ‘உன்னாலே உன்னாலே’ ஆகிய படங்களின் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றார். அதற்குப் பிறகு சரியான வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிப் படங்களில் நடித்து வந்தார். வடிவேலு நாயகனாக நடித்த ‘எலி’ படத்தில் அவருக்கு ஜோடியாக சதா நடித்தார்.
இப்போது ‘டார்ச்லைட்’ படத்தில் பாலியல் தொழிலாளியாக சதா நடித்து வருகிறார். நடிப்புக்கு வாய்ப்புள்ள இப்படம் அவருக்கும் இயக்குநர் அப்துல்மஜீத்துக்கும் நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.