மெர்சல் படத்தை பாஜக எதிர்க்கக் காரணம் இதுதான் – திருமாவளவன் புதுக்கருத்து

விஜய் நடித்த மெர்சல் படத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் பாஜக தவிர்த்த மற்ற கட்சிகள் எல்லாம் மெர்சல் படத்துக்கும் நடிகர் விஜய்க்கும் ஆதரவாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

பாஜ கட்சியினர், ரஜினி,கமல் ஆகியோர் மசியவில்லை என்ற நிலையில் விஜய்யை குறி வைக்கிறார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது,

ஜி.எஸ்.டி.யை பா.ஜனதாவின் மூத்த தலைவர்களான சுப்பிரமணியசாமி, யஷ்வந்த் சின்கா ஆகியோர் மிகக் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள்.

இந்தியப் பொருளாதாரமே அகல பாதாளத்திற்குச் சரிந்து விட்டது என்று யஷ்வந்த்சின்கா கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அவர்களைக் கண்டிக்காத பா.ஜ.க. தலைவர்கள் நடிகர் விஜய் மீது பாய்வது ஏன் என்று தெரியவில்லை. இது அரசியல் உள் நோக்கம் கொண்டதாகத்தான் தெரிகிறது.

ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்களை பா.ஜ.க. பக்கம் இழுக்க முயற்சிக்கிறார்கள் என்று பொதுமக்கள் இடையே பேச்சு உள்ளது. அவர்கள் மசியவில்லை என்ற நிலையில் நடிகர் விஜய்யை குறி வைக்கிறார்கள் என்று கருதுகிறேன். இது ஒரு அரசியல் விமர்சனம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இக்கருத்து பாஜகவுக்கு மேலும் பலவீனத்தை ஏற்படுத்துவதாக உள்ளதென அரசியல் பார்வையாளர்கள் சொல்கின்றனர்.

Leave a Response