பாஜக தொகுதியைக் கைப்பற்றியது காங்கிரஸ் – பாஜகவின் சரிவு தொடங்கிவிட்டதா?

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் பாராளுமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுனில் ஜாஹர் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வந்தார்.

முதல்சுற்று வாக்கு எண்ணிக்கையில் 14 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்ற அவர் எல்லாச் சுற்று எண்ணிக்கையிலும் முன்னிலை வகித்தார். பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட சலேரியா இரண்டாவது இடத்திலும், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மூன்றாம் இடத்திலும் தொடர்ந்தனர்.

இறுதி முடிவுகளில் சுனில் ஜாஹர் 1,92,219 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் சலேரியாவை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் பா.ஜ.க வசம் இருந்த இந்தத் தொகுதி காங்கிரசுக்கு மாறியுள்ளது. இந்த வெற்றிக்கு அம்மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் காரணம் என சுனில் ஜாஹர் தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்றுள்ள சுனிலுக்கு அம்ரீந்தர் சிங், நவ்ஜோத்சிங் சித்து உள்ளிடோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பாஜகவின் வசம் இருந்த ஒரு பாராளுமன்றத் தொகுதி, அக்கட்சி மத்திய ஆட்சியில் இருக்கும்போதே கைவிட்டுப் போயிருக்கிறது. இதனால் பாஜகவின் சரிவு தொடங்கிவிட்டதென்று அரசியல்பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Response