மோடியின் நெருங்கிய நண்பர் அதானி ஆஸ்திரேலியாவில் அடிவாங்கும் கதை – முழுமையாக

ஆஸ்திரேலியாவில் உள்ள மத்திய குவீன்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள Galilee Basin என்கிற இடத்தில் சுமார் 1,10,456 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் “ஆறு” திறந்த வெளி மற்றும் “ஐந்து” ஆழ்கிணறு வகையிலான நிலக்கரி சுரங்கங்கள் அமையவிருக்கிறது.
சுரங்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிலப்பரப்பிற்குள் 52 கிலோமீட்டர் நீளமுள்ள “கார்மைக்கேல்” என்கிற ஆறு உருவாகி, பயணித்து கடலில் கலக்கிறது.

வருடத்திற்கு 4 கோடி டன் நிலக்கரி வீதம் அடுத்த அறுபது வருடத்திற்கு 240 கோடி டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்படும். சுரங்கம் செயல்பட தேவையான நிலக்கரி, உள்ளூர் தேவை போக மீதம் அருகிலுள்ள கடல் வழியே ஏற்றுமதி செய்யப்படும். “அதானி ஆஸ்திரேலியா” வெட்டி எடுக்கும் இந்த நிலக்கரி முழுவதையும் “அதானி இந்தியா” நல்ல விலை கொடுத்து வாங்கிக்கொள்ளும். சுரங்கத்திலிருந்து கடலில் நிற்கும் கப்பலுக்கு எடுத்துச்செல்ல 189 கிமீ நீளமுள்ள ரயில் பாதையை (POSCO) போஸ்கொ என்கிற தென்கொரிய நிறுவனம் அதானி நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் அமைத்துக்கொடுக்கும்.

இது செயல்பட தொடங்கினால் இதுவே ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கமாகவும், உலகின் மிகபெரிய சுரங்கங்களில் ஒன்றாகவும் திகழும். இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு 2170 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 1,41,000 கோடி ரூபாய்) ஆகும்.

சுரங்கம் செயல்பட தேவையான நீரை அருகிலுள்ள பெல்யாண்டொ ஆறிலிருந்து எடுத்துக்கொள்ள அதானி நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது.

இந்த சுரங்கம் அமைவதால் குறைந்த பட்சம் 10,000 ஆஸ்திரேலியர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். தவிர இதன் மூலம் குவீன்ஸ்லாந்து மாகாணத்துக்கு ஒவ்வொரு ஆண்டும், ஆண்டுக்கு 297 கோடி டாலர் வருமானம் கிடைக்கும் என்பதால் இந்த சுரங்க திட்டம் “ரொம்ப நல்ல திட்டம்” என அறிவித்துள்ளார்.

இந்த நல்ல திட்டத்தை செயல்படுத்தப்போவது நம்ம இந்தியாவை சேர்ந்த “அதானி” நிறுவனம்தான். 2010 ஆம் ஆண்டே இந்த சுரங்கம் நமக்கு வேண்டாம் என ஆஸ்திரேலிய அரசால் கைவிடப்பட்ட திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு கேட்டு வாங்கி கொடுத்தது நம்ம இந்நாள் பிரதமர்தான்.

சுரங்கம் அமைக்கப்படப் போகிற இடங்களை அளந்து, என்னென்ன செய்யப்போகிறோம் என திட்டமிட்டு, உள்ளூரில் கிளியரன்ஸ் வாங்கி ஆஸ்திரேலிய அரசிடம் திட்ட அறிக்கை கொடுக்க அதானி நிறுவனத்திற்கு 680 கோடி ரூபாய் கடனாக நம்ம ஏழைப்பங்காளன் பாரத ஸ்டேட் வங்கியால் கொடுக்கப்பட்டு, பைசா பாக்கியில்லாமல் செலவாகிவிட்டது. திட்டம் தொடங்கினால் மேலும் 5000 கோடி ரூபாய் தருவதற்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் அப்படியெல்லாம் எதுவுமில்லைனு வங்கி சேர்மன் சொல்லிட்டார். நம்புங்க ப்ளீஸ்..
மேலும் இந்த திட்டத்திற்கு ஆஸ்திரேலிய பெடரல் 500 கோடி டாலரும்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.32,500 கோடி) , குவீன்ஸ்லாந்து மாகாண அரசு 950 கோடி டாலரும்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.62,000 கோடி) கடனாக அளிக்கவிருக்கிறது.
ஆஸ்திரேலிய அரசு அங்கீகாரம் கொடுத்தாச்சு.. இந்திய அரசு பணம் தருது.., ஆஸ்திரேலிய அரசு பணம் தருது.. குவீன்ஸ்லாந்து அரசு பணம் தருது.. அப்புறமென்ன.., ஆரம்பிக்க வேண்டியதுதானே…

2015 ல் புதுசா பிரச்சினைகள் வர ஆரம்பிச்சிடுச்சு.

2014 ல் இந்த திட்டத்திற்கு ஆஸ்திரேலிய அரசு முழு அங்கீகாரம் கொடுத்திருந்தாலும் இந்த திட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளன. அவற்றில் குவீன்ஸ்லாந்து மாகாண அரசும் ஒன்று. (உடனே நம்ம மாநில அரசு கெயில் மற்றும் கிரேட் ஈஸ்டர்ன் எனெர்ஜி கார்ப்ரேஷனுக்கு சிவப்பு கம்பளம் விரித்ததையெல்லாம் நினைச்சுக்க கூடாது. அப்புறம் அடிமனசு வரை வலிக்கும்.)

2014 வரைக்கும் எதிர் கட்சியா இருந்த ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சி (ALP) தான் இந்த சுரங்கம் அமைவதை கடுமையா விமர்சனம் செஞ்சிகிட்டு இருந்தாங்க. 2015 தேர்தலில் இவங்க வெற்றி பெற்று ஆளும் கட்சியா ஆனவுடன் முதல் வேலையா சுரங்கத்தையும் கடலையும் இணைக்கிற ரயில் பாதை திட்டத்திற்கு பணம் கொடுக்க மறுத்திட்டாங்க.. அதனால் ஆஸ்திரேலியாவில் உள்ள வெளிநாட்டு வங்கிகளிடம் அதானி நிறுவனம் கடன் வாங்க வேண்டி வந்திருச்சு.
தவிர குவீன்ஸ்லாந்து மாகாணம் தொடர்ந்துள்ள வழக்கில் என்னென்ன சொல்றாங்கன்னா..:

(1) இது அளவில் மிகப்பெரிய சுரங்கம். இது செயல்பட அருகிலுள்ள பெல்யாண்டொ ஆறிலிருந்து நாளொன்றுக்கு 3 கோடியே 50 லட்சம் லிட்டர் நீரை எடுத்து செலவிடும். அதில் வெறும் 6% நீர் மட்டுமே மறுசுழற்சிக்கு வரும். மீதம் 94% நீர் அனைத்தும் எந்த பயன்பாடும் இன்றி வீணாகும்.

(2) ஐந்து ஆண்டுகளில் இந்த சுரங்கம் 29,700 கோடி லிட்டர் நீரை பூமிக்கு அடியிலிருந்து வெளியேற்றும்.

(3) நிலக்கரி எடுக்கும்போது மீத்தேன், ஏராளமான நச்சு வாயுக்கள், தூசிகள் வெளிவரும். இதனால் சுரங்கத்திற்கு அருகில் உள்ள ஊர்களில் சுற்று சூழல் பாதிக்கப்படும். அங்குள்ளவர்களுக்கு நுரையீரல் நோய்கள் வரும்.

(4) நிலக்கரி படிமத்துடன் யுரேனியம், தோரியம் போன்ற கதிவீச்சு தனிமங்கள் சேர்ந்தே வெளிவரும். இவை எரிக்கப்பட்ட சாம்பலில் கூட கதிரியக்கத்தை கொண்டிருக்கும். இவை அடுத்த இருபது வருடத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 20 மில்லி சீவேர்ட் அளவிற்கு கதிர்வீச்சை ஏற்படுத்தும். உலகில் தற்போதுள்ள அணு உலைகளை விட அதிக அளவில் நிலக்கரியை எரிக்கும் அனல் மின் நிலையங்களே அதிக கதிர்வீச்சை ஏற்படுத்தி வருகிறது என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும்.

(5) கார்மைக்கேல் ஆறு, சுரங்கங்களுக்கு இடையூறாக இருப்பதால் அதனை திசை திருப்பி அமைக்கப்படும். மேலும் அதன் மீது ஏராளமான பாலங்கள், வெள்ள வடிகால்கள் அமைக்கப்படும்.

(6) சுரங்கத்திலிருந்து கடலில் நிற்கும் கப்பலுக்கு நேரடியாக நிலக்கரியை ஏற்ற நிலத்தில் சீரமைத்தது போக கடலிலும் வழித்தடம் அமைக்க வேண்டும். அதற்காக கடலில் சிறிது தூரம் கடல் நீருக்கு அடியிலுள்ள மணலை தோண்டி எடுக்க வேண்டும். இது கடலுக்கு அடியில் அங்கெ வளர்ந்துள்ள கடல்புல்லை அழிக்கும். அதனால் அதோடு தொடர்புள்ள கடல்வாழ் உயிரினங்களும் அழியும்.
இதில் தோண்டி எடுக்கப்படும் மணலை கடலின் வேறு பகுதியில் கொட்டினாலும் கடல்புல் அழியும். வெளியே எங்கும் கொட்டினாலும் நிலமும் சூழலும் பாதிக்கப்படும்.

(7) திட்டமிடப்பட்ட இடத்தில் அதானி நிறுவனத்தால் வருடத்திற்கு 6 கோடி டன் வீதம் நிர்ணயிக்கப்பட்ட 60 ஆண்டுகளில் 360 கோடி டன் நிலக்கரியை எடுக்க முடியும். ஆனால் அது கணக்கை குறைத்து காண்பிக்கிறது.

(8) கடந்த காலங்களில் நிலக்கரிக்கு ஏற்பட்டுள்ள விலை சரிவை கணக்கில் எடுத்துக்கொண்டால் தற்போது அதானி நிறுவனம் திட்ட அறிக்கை கொடுத்தது போல நிலக்கரி டன் ஒன்றிற்கு 140 டாலர் கொடுக்காது. மேலும் வருங்காலத்தில் எல்லோரும் நிலக்கரியின் தேவையை குறைப்பார்கள். அதனால் விலை டன் 60 டாலருக்கும் கீழ் குறைய வாய்ப்புள்ளது. 110 டாலருக்கும் கீழ் விலை குறைந்தால் திட்டமிட்ட லாபத்தை எட்ட முடியாது.

(9) சுரங்கத்தால் அருகிலுள்ள ஊர்களில் நிலத்தடி நீர்மட்டம் 60 முதல் 160 அடி ஆழம் வரை இறங்கலாம் என அதானி நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் 1000 அடி வரை நீர் மட்டம் குறையும் ஆபத்து உள்ளது.

(10) சுரங்கம் அமையவிருக்கும் வனப்பகுதி, அழியும் தருவாயில் உள்ள மெழுகு பனை உட்பட ஏராளமான மரங்களை கொண்டது. அவற்றை அழிப்பதன் மூலம் கோலா கரடி, யக்கா ஸ்கிங் எனப்படும் உடும்பு, சில அரியவகை பாம்புகள் உட்பட அழியும் தருவாயில் உள்ள பல வன உயிரினங்கள் அழியும்.

(11) அதானி நிறுவனம் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பை தரும் என்பதும் நம்ப முடியாத ஒன்று. இவர்களால் வெறும் 1,500 பணிகளை மட்டுமே ஏற்படுத்த முடியும். ஏனெனில் 400 டன் கையாளக்கூடிய 45 தானியங்கி டிரக்குகளை பயன்படுத்துவார்கள். தவிர சுரங்கத்திலிருந்து கப்பல் வரை அனைத்தும் முழுமையான தானியங்கி அமைப்புகளாகும்.

தமிழர்களுக்கு சாக்கு போக்கு சொல்ற மாதிரியே அங்கேயும் நீதிமன்றத்தில் கடந்த ரெண்டு வருசமா “நீங்க சொல்றதெல்லாம் இருக்கு. ஆனா நீங்க சொல்ற அளவுக்கு இல்லைனு” சமாளிச்சிகிட்டு வராங்க..

கடுப்பாகி உள்நாட்டு மக்கள் சமீபத்துல அதானியை எதிர்த்து போராட்டத்திலும் இறங்கிட்டாங்க..
நம்மளை மாதிரியே மீம்செல்லாம் போடுறாங்க..

இங்க உக்கார்ந்துக்கிட்டு நம்ம பக்தாஸ் அவங்களையும் ஆன்டி இந்தியன்னு சொல்லப்போறாங்க..
“டியர் பக்தாஸ்.. நீங்க எதுவுமே சொல்லலேன்னாலும் அவங்க ஆன்டி இந்தியன்தான். ஏன்னா அவங்க ஆஸ்திரேலியன்.

– செந்தில்.வி

Leave a Response