நீட் எதிர்ப்புப் போராட்டம் – தினகரனைத் தொடர்ந்து கிருஷ்ணப்பிரியாவும் இரத்து செய்தார்

நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய அரியலூர் மாணவி அனிதா மரணம் தமிழகத்தையே நிலைகுலைய வைத்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், அரசியல் கட்சியினர் என்று பலதரப்புகளில் இருந்தும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பரப்புரைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அரியலூர் சென்று இறுதியஞ்சலி செலுத்தினார்.
செப்டம்பர் 9-ம் தேதி (இன்று) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்தப் போராட்டத்தில் டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்றம் நீட் எதிர்ப்பு தொடர்பாக வெளியிட்ட கருத்துகளைத் தொடர்ந்து, நீட் எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது.இருப்பினும், நீதிமன்ற தீர்ப்பை மதித்து கழகத்தின் சார்பில் நாளை நடைபெற இருந்த நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று தினகரன் அறிவித்தார்.

அதேபோல சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் – இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா வும் நீட்டுக்கு எதிராகப் போராட்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

செப்டம்பர் 10 ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில்,மாலை 3 முதல் 5 வரை போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார். இப்போராட்டத்துக்குக் காவல் துறையின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இப்போராட்டத்தின் நோக்கம் நீட் எதிர்ப்பைப் பதிவு செய்வது மட்டுமே. நீதிமன்றத்தையோ, அரசாங்கங்களையோ, தனி நபர்களையோ அவமதிப்பதற்கு அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார்.

உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பின்பு அவரும் போராட்டத்தை இரத்து செய்துவிட்டார்.

உச்சநீதிமன்றத்தீர்ப்பின்படி நீட் எதிர்ப்பு அறவழிப் போராட்டம் இரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்துள்ளார்.

Leave a Response