அனிதா இறுதிநிகழ்வுக்கு விஜயகாந்த் போனது வெறும் விளம்பரத்திற்கா? -நீதிமன்றத்தடையால் கொதிக்கும் மக்கள்

நீட் தேர்வால் மருத்துவ இடம் கிடைக்காமல் அரியலூர் மாணவி அனிதா கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனால் அனிதா மரணத்திற்கு நீதி கோரியும், நீட் தேர்வுக்கு நிரந்தர நீக்கம் கோரியும் பள்ளி மாணவர்கள்,கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்தப் போராட்டங்களை எதிர்த்து தேமுதிக நிர்வாகியான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல வகுப்புப் புறக்கணிப்பு, சாலை மறியல் போன்ற எந்தப் போராட்டங்களிலும் ஈடுபடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

“கடையடைப்பு, சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபடுவது உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதாகும். எனவே, தமிழக அரசு சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். பொது மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு பிரச்னைகளைக் கையாள வேண்டும். போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இதையடுத்து, வழக்கு விசாரணை வருகின்ற 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு தமிழகத்தில் க்டும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அதே அளவு விஜயகாந்த் கட்சி மீதும் கோபம் கொள்கிறார்கள். நீட்டுக்கு எதிரான போராட்டங்களுக்குத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றம் சென்ற வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, தேமுதிகவைச் சேர்ந்தவர் என்பது விஜயகாந்துக்குத் தெரியுமா? நீட் விசயத்தில் தேமுதிகவின் நிலை என்ன? மாணவி அனிதாவின் இறுதி நிகழ்வு நடக்குமிடத்துக்கு விஜயகாந்த் போனது வெறும் விளம்பரத்துக்கா? எனப்பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியில் எழத்தொடங்கிவிட்டன.

Leave a Response