கும்பகோணத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி உழவர்பாதுகாப்பு மாநாடு நடத்துகிறது நாம்தமிழர்கட்சி. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள குறிப்பில்,,,,
தமிழனின் வாழ்வாதார பிரச்சனையில் நெடுவாசல் களம் 100 நாட்களைத் தாண்டியும், கதிராமங்கள களம் 100 நாட்களை நெருங்கியும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.
நமது பாரம்பரிய நெற்களஞ்சியத்தை காப்பாற்றப் போராடிக்கொண்டே “காவிரி டெல்ட்டா பகுதிகளை “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக” அறிவிக்கக் கோரிக்கை வைத்தோம். ஆனால் அந்தக் கோரிக்கை நிலுவையில் இருக்கும் போதே காவிரி டெல்ட்டா பகுதிகளை “பெட்ரோலிய எரிபொருள் முதலீட்டுக்கான சிறப்பு மண்டலமாக” மத்திய அரசு அறிவித்து கையெழுத்து இடுகிறது.
உணவு, குடிநீர், உறைவிடம் என அனைத்தையும் பாதுகாக்க தஞ்சைமண்டலம் மட்டுமல்ல, தமிழகமே போராட வேண்டிய அவசியம் இருக்கிறது.
இந்த நிலையில்தான் இந்த “உழவர் பாதுகாப்பு மாநாடு” ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இது வழக்கமாக அண்ணன் சீமான் பங்குபெறும் கூட்டமாக ஆகக்கூடாது என்பதனால் இதை மாநாடு அளவிற்கு நடத்தவேண்டும் என்ற அவசியத்தில் வேலைகள் நடந்துகொண்டு இருக்கிறது. இது நாம்தமிழர் கட்சிக்கான அரசியல் கூட்டம் அல்ல, மாறாக இந்த இனத்திற்கான அவசியக்கூட்டம்.
இந்த மாநாட்டில் கூடுகின்ற, நாம் கூட்டுகின்ற கூட்டமானது நாளை நாம்தமிழர் கட்சியின் ஓட்டுக்கான கூட்டம் இல்லை, ONGC நிறுவனத்திற்கு வைக்கப்போகின்ற வேட்டுக்கான கூட்டமாக இருக்கவேண்டும். இங்கு கூடுகின்ற கூட்டம், இன்று குழாய்கள் பதிக்கப்பட்ட இடங்களில் இருந்து அவைகளை அகற்றுவதற்கும், நாளை வேறு எந்த இடங்களிலும் குழாய்கள் பதிக்கப் படாமல் தடுப்பதற்கும் உதவியாக இருக்கும். இந்தக் கூட்டம் சிறப்பாக முடிய, பெருந்திரள் மக்கள் நடுவே இந்தக் கூட்டம் கருத்தியல் புரட்சியாக மாற அனைவரும் குடந்தையில் கூடுவோம்.
மாநாட்டின் துவக்கத்தில் கருத்தரங்கு இருக்கின்றது, அறிவுசார் பெருமக்கள் கருத்தரங்கில் கருத்துரை வழங்க இருக்கிறார்கள். இந்த வேளாண்மையின் மீது தொடுக்கப்படும் அரசியல் போர்களைப் புரிந்துகொள்ள அவசியம் கருத்தரங்கிற்கு வாரீர்.
அன்பு உறவுகளே அவசியம் கூடுவோம் குடந்தையில். பெருந்திரள் மக்களை குடந்தையில் நிரப்பி, உழவின் நோக்கத்தை புனிதப்படுத்துவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.