
‘நாளைய இயக்குநர்’ சீசன் 5- ன் வெற்றியாளர் மார்டின் இயக்கும் படம் தான் ‘மாணிக்’.. ரஜினி நடித்த பாட்ஷா படம் மூலம் பிரபலமான ஒரு பெயர் இது.. இந்தப்படத்தில் மா.கா.பா.ஆனந்த் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக சூஷா குமார் நடிக்கிறார். இரண்டாவது ஹீரோவாக வத்சன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
படம் குறித்து இயக்குநர் மார்டின் கூறுகையில், “ஆசிரமத்தில் வளர்ந்த ஹீரோ மா.கா.பா.ஆனந்த் மற்றும் இரண்டாவது ஹீரோ வத்சன் இருவரும் ஒரு விஷயத்தில் பெரிய அளவில் சாதிக்க ஆசிரமத்தில் இருந்து கிளம்புகிறார்கள், அப்படி அவர்கள் சாதிக்க நினைத்தது என்ன, அந்த சாதனை முயற்சியில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இறுதியில் நினைத்ததை சாதித்தார்களா இல்லையா என்பதை பேண்டசியாக சொல்லியிருக்கிறோம். அவர்களின் சாதனை பயணம் எந்த விஷயத்திற்காக என்பது சஸ்பென்ஸ்.” என்றார்.
காமெடி கலந்த பேண்டசி படமாக உருவாகும் ‘மாணிக்’ படத்தின் பஸ்ட் லுக் டீசர் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. அதை தொடர்ந்து பாடல்கள் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ள தயாரிப்பு தரப்பு, படத்தை செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் வெளியிட முடிவு செய்துள்ளது.
