விளக்கேந்தி வீரரை வணங்கும் பண்பாடுள்ள நாம் இருளேந்தி அநீதியை அறிவிப்போம்

மே18.2009 இன் நினைவாக எழுத்தாளர் குணாகவியழகன் இருள் ஏந்துவோம் என்று தமிழ் மக்களை அழைக்கிறார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள குறிப்பு….

அன்பினிய தமிழ்மக்களே ! நாமும் இந்த உலகில் மற்றயவர்கள் போல சுதந்திரம் கொண்ட சக மக்கள் சமூகமாக, எமது பண்பாட்டைப் பாதுகாத்து வளர்க்கவும் பரிமாறவும் விரும்பும் மக்களாக , எமது மொழியைப் பேச விரும்பும் மக்களாக , எமது பூர்வீக நிலத்தில் நாமே வாழ்வதில் பெருமையுள்ள மக்களாக , எமது பொருளாதாரத்தை மேம்படுத்தி ஏனைய உலகச் சமூகங்களின் பொருளாதரத்தில் பங்களிக்க விரும்பும் மக்களாக இருக்கக்கேட்டோம்.

ஆனால் அதற்கு மறுக்கப் பட்டோம் மேலும் சிதைக்கப்பட்டோம் .எம்மைக் காக்கப் போராடினோம். போர் கண்ணீரைத் தந்தது எங்கள் குருதியை விலையாய்க் கேட்டது எங்கள் உயிரைப் பலியாய்க் கேட்டது . கொடுத்தோம். எமக்கு வேறு வழியில்லை . வேறு தெரிவை விதிக்கப்பட்ட வாழ்வும் எமக்குத் தரவில்லை.

கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு , குருதி கொட்டி குருதி கொட்டி , ஊனமுற்று ஊனமுற்று , உயிர் விதைத்து உயிர்விதைத்துப் போராடினோம்.

பல பத்தாண்டுகளாய் போராடினோம். முன்னேறினோம் . புயலில் சுழன்றாலும் தீயில் வெந்தாலும் மீண்டும் நிமிர்ந்து மீண்டும் உயிர்த்து முன்னேறினோம். எம்மை நாமே காத்துக்கொள்ள சக்திகொண்டு முன்னேறினோம்.

எமது வலிமையை அநீதியும் அதர்மமும் வஞ்சகமும் கொண்டு சிங்கள தேசம் உலக சக்திகளுடன் கூடி அழித்தது. எமது நீதிக்குரல்கள் கேக்காதவாறு தங்கள் காதுகளை இந்த உலகம் அடைத்துக் கொண்டது. தங்கள் அதர்மம் தெரியாதவாறு கண்களைப் பொத்திக் கொண்டது . அறத்தைப் பேச மறுத்து வாயைக் கட்டிக் கொண்டது. உலக நாடுகளின் நாடாளுமன்றங்கள் முன் தவமாய்க் கிடந்தோம். எங்கள் நியாயம் கேட்கப்படவில்லை . நீதி பேசப்படவில்லை. அதர்மம் பார்க்கப் படவில்லை. வல்லமையுள்ள உலகு வஞ்சகமாய் எம்மை கருவறுத்தது.

மே 18- தமிழினக் கருவருப்பின் அடையாள நாள். குருதி கொட்டி விடுதலைக்குக் காத்திருந்த காலப் பொழுதொன்று இருளிய நாள்.

இந்நாளை , இந்த நூற்றாண்டின் மனித நாகரிகத்தினது அவமான நாளாக உலகுக்கு உணர்த்துவோம். ஜனநாயக உலகு கொண்டுள்ள வஞ்சகத்தின் நாளாக உணர்த்துவோம். மனித அறத்தின் அழுக்கு நாளாக உணர்த்துவோம் . தர்மத்தின் நிந்தனை நாளாக உணர்த்துவோம். நீதியின் இழி நாளாக இந்நாளை உணர்த்துவோம்.

அதற்காக தமிழர் வாழும் இடமெங்கும் இரவு ஏழு மணியிலிருந்து -மேற்கு நாடுகளில் ஒன்பது முப்பதிலிருந்து முப்பது நிமிடங்கள் எங்கள் மின் விளக்குகளை அணைத்து எங்கள் சூழலைச் சுற்றி இருளாக்குவோம். இறந்த உயிர்களை நினைவுகூர சிறு கைவிளக்கேற்றி அந்த சிற்றொளியில் நம் தேவைகளை நிறைவு செய்து கடப்போம். அரசியல் கட்சிகளற்ற மக்கள் இயக்கமாக இதனை நிறைவேற்றுவோம்.

இந்தநாளை, மனித நாகரிகத்தின் , நீதியின் , அறத்தின் , ஜனநாயகத்தின் , தர்மத்தின் கரிய நாளாக , இருள் நாளாக உலகுக்கு அறிவிப்போம். இருளேந்தி அறிவிப்போம் . இருளால் சூழ்வோம் நகரங்களையும் எமைச் சுற்றிய உலகையும் .எம்மை இனக்கருவறுப்பு செய்த உலகுக்கு இந்நாளின் எம் செய்தியாகட்டும் அது .

உணரட்டும் உலகு . விளக்கேந்தி வீரரை வணங்கும் பண்பாடுள்ள நாங்கள் இருளேந்தி அநீதியை அறிவிப்போம்; இந்த உலகுக்கும் எம் சந்ததிக்கும்.

Leave a Response