தமிழ்த்தேசியப் பாவலன் பாரதிதாசன் பிறந்த நாள் 29.4.1891

திராவிட இயக்கங்களால் இன்றளவும் கொண்டாடப்படுபவர் பாரதிதாசன். அவர் தன்வாழ்நாளின் இறுதிப்பகுதியில் ஒரு தமிழ்த்தேசியராக வாழ்ந்து மறைந்தார் என்னும் உண்மையை திராவிட இயக்கங்கள் ஒத்துக் கொள்வதில்லை. அவர் தொடக்கத்தில் ஒரு ஆத்திகராக, ஒரு இந்தியராக வளர்ந்து வந்தார். தந்தை பெரியாரை ஏற்றுக் கொண்ட பிறகு ஒரு நாத்திகராக, ஒரு திராவிடராக அவர் தன்னை மாற்றிக் கொண்டார். இதனையே கிளிப்பிள்ளையைப் போல திரும்பத் திரும்ப கூறி வருவது திராவிட இயக்கத்தவரின் வாடிக்கை.

இது உண்மை தான். ஆனால் முழு உண்மையல்ல. பாரதி தாசன் ஒரு நாத்திகராக வாழ்ந்தார் என்பது உண்மை. அவர் திராவிடராக வாழ்ந்தார் என்பது பொய். அதற்கு நிறையச் சான்றுகள் நம்மால் தரமுடியும்.

1952இல் பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதியில் “சிறுத்தையே வெளியில் வா” என்ற புகழ்பெற்ற பாடல் உண்டு. அதன் இறுதிப்பகுதியில்
“வாழ்க இளைஞனே, வாழ்க நின் கூட்டம் வாழ்க திராவிட நாடு வாழ்க நின் வையத்து மாப்புகழ் நன்றே…”
என்று பாடல் வரிகள் இருக்கும்.

1958இல் நாம் தமிழர் இயக்கம் தோற்றுவித்த ஆதித்தனார் அவர்கள் பாரதிதாசன் பாடல்களை “தாயின் மேல் ஆணை” என்ற தலைப்பில் தொகுத்து வெளியிட்டார். அதில் மேற்கண்ட பாடலில் உள்ள திராவிட நாடு என்பது ‘செந்தமிழ் நாடு’ என்று மாற்றப்பட்டது.

“வாழ்க இளைஞனே, வாழ்க நின் கூட்டம் வாழ்க செந்தமிழ் நாடு வாழ்க நின் வையத்து மாப்புகழ் நன்றே…”

அதேபோல், குடும்ப விளக்கு முதற்பதிப்பு 1950 மார்ச்சில் வெளியிடப்பட்டது. அதில் ‘மக்கட்பேறு’ என்ற தலைப்பில் பாடல் பின் வருமாறு:
“அமிழ்து சரியாய் ஆறாண் டடைந்தாள்
தமிழ்தரும் தனித்தமிழ் பள்ளி சென்றே
அதோ வருகின்றாள் அங்கைச் சுவடியோடு
வேடன் நகைமுத்து வீட்டில் அப்போதில்
இளஞ்சேரனை நீ யார் என்று கேட்டுப்
பதிலை எதிர் பார்த்திருந்தார்- அவனோ
தன்மார்பு காட்டி நான் தம்பி என்றான்
“திராவிடன் என்று நீ செப்படா தம்பி”
என்றே இயம்பி அமிழ்து வந்தாள்
வாழிய திராவிட மக்கள்!
வாழிய நற்றமிழ் வையகம் இனிதே!”

குடும்ப விளக்கு நூலின் 2ஆம் பதிப்பு 1960லும் 3ஆம் பதிப்பு 1963லும் வந்தது. இவ்விரு பதிப்பிலும் மேற்படி பாடலில் வரும் திராவிடன் என்பது தமிழன் என்றும் திராவிட மக்கள் என்பது தமிழ்மக்கள் என்றும் மாற்றப்பட்டது.
“….தமிழன் என்று நீ செப்படா தம்பி”
என்றே இயம்பி அமிழ்து வந்தாள்
வாழிய தமிழ் மக்கள்!
வாழிய நற்றமிழ் வையகம் இனிதே!”

தந்தை பெரியாரிடம் பெருமதிப்பு கொண்டிருந்த போதிலும் பெரியாரின் தமிழ்மொழி எதிர்ப்பு, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், ஆங்கிலமொழி ஆதரவு ஆகியவற்றில் கடும் எதிர்ப்பைக் காட்டவும் பாரதி தாசன் தயங்க வில்லை.

தமிழிலக்கியங்களெல்லாம் வெறும் குப்பைகள் என்று பெரியார் கூறினார். அப்போது, “நூலைப்படி-சங்கத்தமிழ் நூலைப்படி! -முறைப்படி நூலைப் படி! -சங்கத்தமிழ் நூலைப்படி!
காலையில் படி, கடும்பகலில் படி,
மாலை இரவு, பொருள்படும்படி!” என்று பெரியாருக்கு உறைக்கும்படி கூறினார்.

1949ஆம் ஆண்டு பேராயக்கட்சி ஆட்சியின் போது கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களால் “எழுத்து சீர்திருத்தம்” எனும் பெயரில் தமிழ் மரபெழுத்துகளை ஒழிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1935ஆம் ஆண்டிலிருந்தே தந்தை பெரியாரும் இதனையே தொடர்ந்து வலியுறுத்தி எழுதி வந்தார். அதில் ஆங்கில எழுத்துகளை தமிழில் கலந்து எழுதியதோடு, தமிழுக்கு மாற்றாக ஆங்கிலமொழியை முன் நிறுத்தவும் துணிந்தார். இதைக் கண்டித்து பாரதிதாசன் எழுதினார்:
” …எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே!
மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே! இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே!

….எழுத்து திருத்தத்திலும் எண்ணத் திருத்தம் வேண்டும்
எழுத்துகளைச் சீர்திருத்தம் ஆர்வலர்க்கு ஒரு விண்ணப்பம்
எதற்காக இந்த வேகம்? பழுத்துக் கனிந்திட்ட மொழிக் கனிக்கு
பழம் அழுகச் செய்வதுவா உங்கள் திட்டம்

ஒழுக்கத்தில் ஓரழகு வேண்டுமாயின்
உயர் பெரியார் திருத்தத்தை ஏற்க மேலும்
கழுத்தறுப்பு வேலைதனைச் செய்வதெல்லாம்
காளைகளைக் காயடிக்கும் செயலை ஒக்கும்

மொழிக்குரிய உயர்கருத்தும் உலகலாகவும்
முன்னேறும் அறிவியலை வளர்க்கும் எண்ணம்
விழிக்கடையின் ஓரத்தும் வராத பேர்கள்
வெதும்புவதேன் எழுத்தினிலே சீர்திருத்தம்!

கொழித்த மொழி பிரஞ்சினிலே, ஆங்கிலத்தில்,
குறியீட்டைக் காட்டுகிற மொழி சீனத்தில்
தொழில்படுமா உங்கள் சீர்திருத்தம்?
தோள் விழுங்கிச் சுளைகளை ஏன் எறிகின்றீர் நீர்?

மக்களெல்லாம் தாய்மொழியைக் கற்பதற்கு
மடத்தனமாய்க் கற்பிக்கும் முறையை மாற்றிச்
சிக்கலின்றித் தெளிவாக உணருவதற்குச்
செம்மைநிலை காணாத ஆங்கிலத்தால்
தக்கவொரு தகுதியினைப் பெற்றார் போன்று
தமக்குள்தாம் பெரியார் என எண்ணிக்கொண்டு
தக்கைகளாய் தலைநிமிர்ந்து ஆடல் வேண்டா!
(பாவேந்தர் 1.02.1950)

மேற்கண்ட பாடலில் பாரதிதாசன் “எழுத்துச் சீர்திருத்தம்” வேண்டாமென்று வலியுறுத்தியும் தந்தை பெரியார் கேட்க வில்லை. எல்லாம் தெரிந்தவரைப் போலவே தன்னைக் காட்டிக் கொண்டார். பெரியார் தந்த புத்தி போதுமென்று இயக்கம் நடத்தும் வீரமணியும் திருந்திய பாடில்லை. அவர் நடத்தும் ‘விடுதலை’ ஏடு எழுத்து சீர்திருத்தம் எனும் பெயரில் தமிழ் எழுத்தில் கிரந்த எழுத்து குறியீடுகளை கலந்து கால் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. வீரமணிக்கு துணிவிருந்தால் விடுதலை ஏட்டில் முழுமையாக அந்த கிரந்த கலப்பு எழுத்தில் வெளியிட முடியுமா? வீரமணியால் கூட அதனை படிக்க முடியாது என்பது தான் எதார்த்த உண்மை!

புரட்சிக்கவிஞர் விரும்பிய தமிழ்வழிக்கல்வி தமிழ்நாட்டில் இல்லை, எல்லாம் ஆங்கிலமயமாகி வருகிறது. இதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் ஆங்கிலவழிக் கல்வி வணிகம் நடத்தும் வீரமணிக்கு தமிழ் எழுத்தில் கை வைக்கும் துணிச்சல் வந்ததெப்படி?

பாரதிதாசன் பிறந்த இந்நாளில் தமிழை அழித்திடும் ஆரியம்- திராவிடம் செவிப்பறை கிழியும் வரை, “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று” சங்கெடுத்து ஊதிடுவோம்!

 – கதிர்நிலவன்

 

Leave a Response