ரஜினி, சிவகார்த்திகேயன் ஆகியோர் படங்களின் வெளியீடு தள்ளிப்போனது

ரெமோ படத்தைத் தயாரித்த 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் அடுத்த படம் வேலைக்காரன். மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா உட்பட பலர் நடிக்கும் இந்தப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருப்பதாகச் சொல்லப்பட்டிருந்தது. மே 1 ஆம் தேதி படத்தின் முதல்பார்வை வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்கள். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 21) மாலை ஆறரை மணியளவில் அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, விநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக அறிவித்தார். செப்டம்பர் மாதம் ஆயுதபூசை விடுமுறை நாட்களில் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. படத்தின் முதல்பார்வையை ஜூன் 5 ஆம் தேதி வெளியிடுவதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

இவ்வறிப்பு வந்து ஒன்றரை மணிநேரத்தில் இன்னொரு பெரிய படத்தின் வெளியீடு தள்ளிப்போனதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2 ஓ படம் 2017 தீபாவளி நாளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காகப் பரபரப்பாகப் படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 21) இரவு எட்டுமணியளவில் அப்படத்தின் நிர்வாகத்தயாரிப்பாளரான ராஜுமகாலிங்கம், 2ஓ படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக அறிவித்திருக்கிறார். அதன்படி அப்படம் 2018 ஜனவரியில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. படத்தின் தொழில்நுட்பப் பணிகளால் ஏற்படும் தாமதம் தான் அப்படத்தைத் தள்ளிப்போக வைத்திருக்கிறது.

Leave a Response