தில்லியில் போராடும் தமிழக விவசாயிகள் பற்றி அவதூறு பரப்பும் பாஜக நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச்சங்கம் கடும் கண்டனம் இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்….
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாய பெருமக்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உரிய வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி கடந்த 15நாட்களாக டெல்லியில் நமது தமிழகத்தின் விவசாய பெருமக்கள் காந்தி கண்ட அகிம்சை வழியில் தங்களை வருத்திக் கொண்டு அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக விவசாய பெருமக்களின் நியாயமான இந்த அறவழி போராட்டத்திற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாய பெருமக்களும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருவதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரிடையாக டெல்லி சென்று அங்கே அறவழியில் போராடிக் கொண்டிருக்கும் நமது தமிழக விவசாய பெருமக்களுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் நமது தமிழக விவசாய பெருமக்களின் நியாயமான அறப்போராட்டத்திற்கு பெருகி வரும் ஆதரவை கண்டு பொறுக்க முடியாத மத்தியில் ஆளுகின்ற பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள் விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. அய்யாக்கண்ணு அவர்கள் “100ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார், ஆற்று மணலை மாட்டு வண்டியில் திருடி வந்து கொள்ளை லாபத்திற்கு மணல் வணிகம் செய்கிறார், ஆற்றில் இருந்து மணல் அள்ளி வரும் மாட்டு வண்டிகளை மடக்கி அவர்களிடம் மிரட்டி பணம் வசூலிக்கிறார், அவருடைய இரண்டு மகன்கள் மூலம் கந்துவட்டி தொழில் செய்கிறார், வங்கியில் கடன் வாங்கி கடனை திருப்பி செலுத்தவே மாட்டார்” என ஊர்மக்கள் சொன்னது போன்று அவதூறு கருத்துக்களை அள்ளி தெளித்து வருகிறார்கள். குறிப்பாக பாஜக நிர்வாகி திரு. கே.டி.ராகவன் அவர்கள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் நேற்று (28.03.2017) இரவு சுமார் 10.36மணியளவில் மேற்கண்ட அவதூறு கருத்துக்களை பதிவாக பதிவிட்டுள்ளார்.
நமக்கெல்லாம் சோறு போட்ட விவசாயிகள் ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடந்தேறி வரும் சூழ்நிலையில் அவர்களை மத்திய, மாநில அரசுகளோடு சேர்ந்து இயற்கையும் ஏமாற்றி விட, விவசாயமும் செய்ய முடியாமல் அல்லல்பட்டு வருகின்றனர். எனவே தங்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 15நாட்களாக டெல்லியில் அறவழியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாய சங்க நிர்வாகிகள் மீது அவதூறு கருத்துக்களை பரப்பி விட்டு, அவர்களுக்கு மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி, நெருக்கடியை கொடுத்து போராட்டத்தை கலைக்கப் பார்க்கும் இந்த தரங்கெட்ட செயலுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு உடனடியாக அந்த அவதூறு கருத்துக்களை சம்பந்தப்பட்டவர்கள் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.