காவிரி நீர் கிடைக்காததாலும் வரலாறு காணாத வறட்சியினாலும் தமிழக விவசாயம் அழிவின் விளிம்பிற்கே தள்ளப்பட்டிருக்கிறது!
இதைக் கண்டும் காணாதது போல் இருப்பது மத்திய அரசின் மாற்றான்தாய் மனப்பான்மையையே காட்டுவதாயிருக்கிறது!
ஆபத்து நேரத்தில் ஆதரவுக் கரம் நீட்டாமல் மவுனம் காப்பது பாஜக அரசின் பாரபட்ச போக்கையே உணர்த்துவதாயிருக்கிறது!
தமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணத்தில் நடந்துகொள்ளும் மோடி அரசைக் கண்டித்து, ஏப்ரல் 3ந் தேதியன்று தமிழகம் தழுவிய முழு வேலைநிறுத்தத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் அழைப்பு விடுக்கிறது.
தமிழக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்த முழு வேலைநிறுத்தத்திற்கு முழு மனதுடன் ஆதரவு நல்க வேண்டுகிறோம்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்காமல் இருக்கிறது மத்திய அரசு. கர்நாடகாவிற்கு ஆதரவாக, தமிழகத்திற்கு நிரந்தரமாக காவிரி நீரை மறுக்கும் உள்நோக்கம்தான் இதற்குக் காரணம்.
காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமல்ல காவிரி தீர்ப்பாயத்தையே காலி பண்ணும் நோக்கில் நாடு முழுவதிலுமுள்ள நதிகள் அனைத்தின் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்ப்பாயம் என தேசிய நதிகள் தீர்ப்பாயம் என்ற ஒன்றை அமைக்கும் வேலையிலும் இறங்கியிருக்கிறது மோடி அரசு.
அதோடு காவிரியின் குறுக்கே கர்நாடகா மேகதாது அணை கட்டுவதற்கும் உறுதுணை புரிகிறது மத்திய அரசு.
ஆக காவிரி நீர் தமிழகத்திற்கு இல்லை என்று ஆக்கிட கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது மோடி அரசு.
காவிரி நீரில்லாததாலும் பருவ மழை பொய்த்ததாலும் தமிழக விவசாயம் முற்றிலுமாகவே விழுந்துவிட்ட நிலைதான் இன்று. அந்த அதிர்ச்சியாலும் தற்கொலையாலும் பயிர்க்கடனைக் கேட்டு வங்கிகள் செய்த கெடுபிடியாலும் 400 விவசாயிகள் உயிரிழந்திருக்கின்றனர்.
இவர்களில் 17 பேர் குடும்பத்திற்குத்தான் தமிழக அரசின் இழப்பீடு கிடைத்தது.
வறட்சி நிவாரணமாக 39,565 கோடியும் வர்தா புயல் நிவாரணமாக 22,573 கோடியும் என மொத்தம் 62,138 கோடி கேட்டது தமிழக அரசு. மத்திய அரசு ஒதுக்கியதோ வறட்சிக்கு 1748 கோடி, வர்தாவுக்கு 266 கோடி என மொத்தம் 2014 கோடிதான்.
இதனால் பயிர்க்கடன் தள்ளுபடியும் இல்லை. புதிய கடனுக்கும் வழியில்லை. ஏக்கருக்கு 50 ஆயிரம் இழப்பீடும் இல்லை. விவசாயத் தொழிலாளிக்கும் 25 ஆயிரம் கிடைத்தபாடில்லை.
அதேநேரம் ஆந்திர, தெலுங்கானா, கர்நாடக விவசாயிகளுக்கு கேட்ட தொகையில் பேர் பாதி கிடைத்திருக்கிறது. உத்தரப்பிரதேசத்திற்கு விவசாயக் கடன் தள்ளுபடியை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடியே அறிவிக்கிறார்.
விவசாய நிலத்தை பாலைவனமாக்கும் எண்ணத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மீண்டும் கொண்டுவருகிறது மோடி அரசு. விவசாயிகள் போராடிக் கொண்டே இருக்க வேண்டும். அதன் மூலம் வேலை கெடும். வருமானமும் இல்லாமல் போகும். அந்த எண்ணம்தான்.
மீனவர்களையும் இதுபோல்தான் தொழில் செய்யவிடாமல் இம்சிக்கிறது. சுட்டுக் கொல்லப்பட்ட பிரிட்ஜோவுக்கு நீதி கிடைக்குமா, தெரியவில்லை. எந்தப் பிரச்சனைக்கும் உருப்படியான தீர்வு காண்பதில்லை. சும்மா போக்கு காட்டி பிரச்சனைகளைக் கடந்து செல்வதையே வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளது மோடி அரசு.
இப்படி சூது, வாது, வஞ்சகம் இவற்றின் முழுவடிவிலான ஒரு அரசாகத்தான் மத்திய பாஜக அரசு இருக்கிறது. தமிழர்களை இரண்டாம் தர, மூன்றாம் தரமாகக்கூட அல்ல, நாலாந்தரமானவர்களாகவே நடத்த நினைக்கிறது.
எனவே மோடி அரசின் விரும்பத்தகாத இந்தப் போக்குக்கு எதிராக தமிழர்கள் நாம் நமது கண்டனங்களைப் பதிவு செய்வோம்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திடுக என்போம்.
விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வாதாரங்களைக் காக்க நடவடிக்கை எடுத்திடுக என்போம்.
மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டத்தை ஆண்டு முழுவதும் அமல்படுத்தக் கேட்போம். அதன் நாள் ஊதியத்தையும் ரூ.500 ஆக உயர்த்தச் சொல்வோம்.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை விரட்டியடிப்போம். காவிரிப் படுகையை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்போம்.
தலைநகர் டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்துவோம்.
தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் செயலை ஒருபோதும் அனுமதியோம். ஒன்றுபட்டு நின்று அதற்காகப் போராடுவோம். உரிமைகளை நிலைநாட்டுவோம்.
இந்த முழக்கங்களோடு ஏப்ரல் 3ந் தேதி நடைபெறும் தமிழகம் தழுவிய முழு வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வோம் என்று பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் அழைப்பு விடுத்துள்ளனர். திடீரென ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்டிருக்கும் ரஜினிகாந்த் தமிழக விவசாயிகளுக்காகவும் தமிழக விவசாயத்துக்காகவும் நடைபெறவிருக்கும் வேலைநிறுத்தத்துக்கு ரஜினி ஆதரவு தருவாரா என்பது அனைவருடைய கேள்வியாக இருக்கிறது.