உத்தரபிரதேசத்தில் பாஜக வெல்லக் காரணம் இதுதான் – ஓர் எச்சரிக்கைப் பதிவு


உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. அதில் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது.உத்தரபிரதேசத்தில் யாதவர் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் உயர் சாதி வகுப்பினரை முன்வைத்து பா.ஜனதா பிரசாரம் மேற் கொண்டது.

பிகார் தோல்வியிலிருந்து பாஜக செமத்தியாக பாடம் கற்றுக்கொண்டிருக்கிறது.
தேர்தல் நேரம் பார்த்து சண்டைப் போட்டுக்கொண்ட முலாயம் குடும்ப மடையர்களும், அந்த சண்டையை மட்டுமே தமக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்ள முஸ்லீம்களை இலக்குவைத்து இயங்கிய மாயாவதி கட்சியினரும் பாஜகவின் சாதி-வாக்கு அரசியலை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியவில்லை.

இந்த முறை யாதவ் அல்லாத வாக்குகளை மிகத்திறமையாக தன்வசப்படுத்தியிருக்கிறது பாஜக. இது பிஹார் பாடம். பிஹாரில் லாலூ கட்சியிடம் யாதவ்களும் முஸ்லீம்களும் நிதீஷ் குமார் தலைமையில் யாதவ் அல்லாதி ஓபிசியினரும் இருந்தார்கள். ஒரு காலத்தில் லாலூவுக்கு எதிராக நிதீஷ் குமார் பாஜகவின் பக்கமிருந்தார். பின்பு லாலூவும் நிதீஷும் ஒன்று சேர்ந்து மகாகத்பந்தனை அமைத்தபோது, அவர்களிடம் பாஜக மண்ணைக் கவ்வியது.

உபியிலும் கணிசமான யாதவ் அல்லாத ஓபிசியினர் இருக்கிறார்கள். இவர்கள் மத்தியில் சில சிறு சிறு கட்சியினர் வேலை செய்திருந்தும் முலாயம் குடும்ப ஆட்சியில் இவர்களுக்கு எந்த மதிப்பு இல்லை. இந்த யதார்த்தத்தை புரிந்துகொண்ட பாஜக சத்தம்போடாமல் யாதவ் அல்லாத ஓபிசியினரை முழுமையாக தன்வசம் கொண்டுவரத் திட்டம் தீட்டியது. அதில் முழுவெற்றியைக் இன்று கண்டிருக்கிறது.

முலாயம் குடும்ப சண்டை இல்லையென்றாலும் இதுவே நடந்திருக்கும். யாதவ்களின் கோட்டையான அவத் பிரதேசத்திலேயே இதுதான் நடந்திருக்கிறது. இப்போது உபியின் சூடான சாதிய முரண்பாடு யாதவ்களுக்கும் யாதவ் அல்லாத ஓபிசியினருக்கும் இடையிலானது.

இதுவே பாஜக வெல்லக் காரணம். இதனால் இந்திய ஒன்றியமெங்கும் இதுபோன்ற சாதிய முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி பாஜக குளிர் காய நினைக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Response