ஈழப் பிரச்சினையில் இந்திய அரசு செய்யும் தொடர் துரோகங்கள் –
பேராசிரியர். மு. நாகநாதன்
தந்தை செல்வநாயகம் என்று எல்லோராலும் இன்றும் போற்றப்படுகிற அறநெறியாளர். 1950 களில் இலங்கை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளை அண்மையில் படித்தேன். ஆணித்தரமான வாதங்கள். மண்ணின் ஆதி குடிகளாகிய தமிழர்கள் எல்லா நிலைகளிலும் புறக்கணிப்படுவதையும், அரசின் சார்பில் தமிழர்களுக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் மீறப்படுவதை நயம்பட பல சான்றுகளுடன் சுட்டியுள்ளார்.
தமிழக மண்ணிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தங்கள், அமைத்த அமைதிக் களங்கள் எல்லாம் தூள் தூளாகப் போயின. 1958 ஆண்டில் சுடும் வெய்யிலில் அன்றைய மவுன்ட் சாலையில் அறிஞர் அண்ணா தலைமையில் ஒரு பெரும் கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது. சிறுவனாக இருந்த நான் 3 மைல்கள் ஊர்வலத்தில் ஓடிய காரணத்தினால் மூன்று லிட்டர்களுக்கு மேல் தண்ணிர் குடித்தேன்
60 ஆண்டுகளுக்குப் பிறகு எனது இரண்டாவது மகன் மருத்துவர் எழிலன் 2009 ஆண்டில் முள்ளிவாய்க்கால் தமிழர் இன அழிப்பு , கொடிய போர்முனை தாக்குதலின் போது தமிழ்நாட்டின் நகர்- ஊர் பகுதிகளுக்குத் தனது இளம் தோழர்களோடு ஊர்திப் பரப்புரை, விழிப்புணர்ச்சிப் பயணத்தின் போது, அக்குழுவினர் குடித்த தண்ணீரின் அளவை நினைத்துப் பார்த்தேன். இந்தியா என்று நாம் நம்பி ஏற்றுக் கொண்டிருக்கும் நாடு எத்தனை ஆண்டுகளுக்கு நமக்குத் தண்ணீர் காட்டுமோ? என்றைக்கு இளைஞர்கள் பொங்கி எழுவார்களோ?
இன்று காலை ஆங்கில இந்து நாளேட்டில் இரண்டு தலையங்கங்கள் எழுதப்பட்டுள்ளன. ஒன்று மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படும் அரிய தாவர-மூலிகை, உயிர் பன்மங்களைக் காக்கும் திட்டங்களைக் கிடப்பில் போடும் ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்துள்ளது. இதையெல்லாம் புறந்தள்ளி இயற்கை வளங்களை அழித்து, சுற்றுச்சூழல் விதிகளையும், அரசின் எச்சரிக்கையும் மீறி ஆதி யோகிச் சிலையைத் திறக்கும் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை வளங்கள் பற்றி என்ன கவலை இருக்கப் போகிறது?
மற்றொன்று, ஈழத்தமிழர் பிரச்சினை. இலங்கையில் இன்றும் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. தமிழர்கள் அமைதியாக வாழ முடியவில்லை, விரைந்து ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எடுப்பதில்தான் இலங்கையின் எதிர்காலம் உள்ளதாக இந்து சுட்டியுள்ளது.
இப்பிரச்சினையில் இந்தியாவின் கடமை தான் என்ன? இந்துவின் இந்த மவுனத்திற்குப் பல காரணங்கள் உள்ளன. பிரபாகரனை அழித்துவிட்டால் எல்லா தீர்வுகளும் வந்துவிடும் என்று களத்தில் ராஜபக்சேவிற்கு ஆதரவு தெரிவித்த லங்க இரத்தினங்கள் இப்பொழுது இதுபோன்று எழுதித்தானே தங்களின் ஊடக நடுநிலைமையைக் காப்பாற்றிக் கொள்ளமுடியும்.
சென்ற வாரம் இந்தியாவின் அயல்துறை செயலர் இலங்கை சென்றார். ராஜீவ்-ஜெயவர்த்தன -இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள தமிழர்களின் தாயகப் பகுதிகளான வடக்கு-கிழக்கு இணைப்பு இப்போது தேவையில்லை என்றார். உயிரோடு தமிழர்களைப் புதைக்கும் வல்லமையில் நாங்கள் காங்கிரசை விட விஞ்சியவர்கள் பா. ஜ. க என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டார் ஜெய் ராம் சங்கர்.
பரிதாபத்திற்கு உரியவர் இலங்கை நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் நமது சம்பந்தனார். டெல்லியை நம்பி ஏமாந்தார்.
இலங்கை அரசின் ஆளும் கட்சித் தமிழர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை என்று சம்பந்தனார் இன்று புலம்கிறார். இலங்கை போர் குற்ற விசாரணைக்கு வெளிநாட்டவர் தேவை இல்லை என அறிவித்துவிட்டார் இலங்கையின் ஆளும் கட்சி தலைவர்.
அறிஞர் அண்ணா 1967 இல் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, பிரிவினையைக் கைவிட்டுவிட்டேன் , ஆனால் பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே உள்ளன என்றார். தற்போது தமிழ்நாட்டு பிரச்சினைகளிலும், ஈழத் தமிழர் பிரச்சினைகளிலும் டெல்லி ஏகாதிபத்தியம் வெளிப்படையாக துரோகம் செய்கிறது. பிரிவினைக்கான காரணங்களை மோடிக்கு அரசு வலிமைப்படுத்துகிறதா?