“மலேசியா போகாதது மயிருக்கு சமம். ஆனா ஏன்டா டிக்கெட் இருக்குன்னு சொன்னீங்க” – பார்த்திபனின் கடுங்கோபம் எதனால்?

திரைத்துறையின் முன்னணிக்கலைஞர்கலளில் ஒருவரான நடிகர், இயக்குனர் பார்த்திபன் கடுங்கோபத்திற்கு ஆளாகி தன் முகநூல் பக்கத்தி ஒரு பதிவை எழுதியிருக்கிறார். சனவரி 10 அன்று மலேசியாவில் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட விருதுகள் வழங்கும் விழாவுக்கு அவரை அழைத்துவிட்டு அதன்பின் அவருக்கு அவமரியாதை  செய்திருக்கின்றனர்.  அதனால் அவருக்குக் கடும் மன உளைச்சல். இதற்குக் காரணமானவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள். கடும் கோபத்தில் அவர் எழுதிய பதிவில் நிறைய ஆங்கிலச் சொற்கள்.  அவருடைய கோபத்தை அப்படியே அவருடைய மொழியிலேயே கொடுக்கவேண்டும் என்று நினைத்ததால் அப்படியே கொடுத்திருக்கிறோம்.  இனி அவருடைய சொற்கள்……

2015-ன் முதல் நாளில் முடிவெடுத்தேன்..

“எதுவென்றாலும் அது வென்றாலும் நின்றாலும் அதை புட்டத்தில் ஓட்டிகிட்ட மண்ணா தட்டிவிட்டுட்டு சட்டப்பண்ணாம போய்கிட்டே இரு. அதை விட்டுப்புட்டு அதை மனசுவரைக்கும் இட்டுக்கிட்டுபோய் முட்டிகிட்டு கண்ணீர் துப்பாதே!” என்று.

இன்று மலேசியாவில் நடைபெறும் ‘SICA’ விருதுக்கு சென்ற மாதம் ஒரு press meet.

நான் வந்தே தீரவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று விரும்பினார்கள்.

நான் தான் ‘spokes person’ ஆச்சே!

pass portல் பெயர் திருத்தத்திற்கு கொடுத்திருந்ததால் நானே மூன்று நாட்கள் முனைந்து, அலைந்து அதை ‘சிசேரியனில்’ பெற்று அவர்களிடம் கொடுத்தேன், விசா வாங்க!

‘தோ வந்துருச்சி’ என Airport conveyor belt வரை அனுப்பி திருப்பிவைத்தார்கள்.

அதுவும் ஒரு மூன்று நாட்கள்.

விசா வாங்க வக்கில்லாதவர்கள் மோசடியாக ஒரு பொய் வேறு என்னை சொல்லச் சொன்னார்கள். திரு. K.B சாரின் உடல்நிலை பாதிப்பை பயன்படுத்தி “அதனால் வர, நான் ஒரு நாள் தாமதம். நாளை வருவேன்.” என்று.

மாட்டவே மாட்டேன் என்ற என்னிடம் மலேசியாவில் இருந்து மன்றாடினார்கள். அன்று மாலை அங்கு press meet.

“மானம் போயிடும்… please.. காலில் விழுந்து..” என்றெல்லாம் பெரிய வார்த்தைகளை பயன்படுத்தி.

சத்தியம் என்பது உண்மை சொல்வதல்ல. யாருக்கும் தீங்கு செய்யாதிருத்தல் என எங்கோ படித்திருக்கிறேன்.

விருகம்பாக்கம் Fame திரையரங்கில் ‘EXODUS’ பார்த்துக்கொண்டிருந்த நான், பாத்ரூமுக்கு போய் குறும்படம் எடுத்து அனுப்பி வைத்தேன்.

பார்க்கவும்.. https://www.facebook.com/video.php?v=911349815576383

மறுநாளும் மலேசியா போகா திருநாளே.
காரணம் விசா!

ஒரு வாரம் என் வயதில் உறிஞ்சிவிட்டார்கள்.

“விழாவை சிறப்பாக செய்யலாம். உங்களுக்கு விருது உண்டு. அவசியம் வரவேண்டும்” என்றார்கள். டிக்கெட்டை எனக்கு முன்கூட்டியே தரவேண்டும் என கட்டளையிட்டேன். ‘ஆஹா பேஷா’ என்றார்கள்.

நான் விழாக்களில் பேச நிறைய பணம் வாங்குகிறேன். என் மனிதநேய மன்றத்திற்கு பொருள் சேர்க்க. டிசம்பரில் இரண்டு நிகழ்ச்சி, ஜனவரி 10 அன்று மட்டும் இரண்டு நிகழ்ச்சி மற்றும் 12ஆம் தேதி வேலூர் VITயில் ஒரு நிகழ்ச்சி.

இப்படி 5 நிகழ்ச்சிகளை ரத்து செய்து (பெறும் பெரும்பணம் தியாகம் செய்து) பைசா வாங்காமல் இவர்கள் நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டேன்.

நடுவில் டப்பிங் பேச கூப்பிட்டார்கள். கமல் சாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது A.V.யில் நான் பேச.

போய் பார்த்தால் மூணேமுக்கால் பக்கத்திற்கு முற்றிலும் சுவாரசியமில்லாத “பீகாரில் வெள்ளம் – ஹெலிகாப்டரில் இருந்து உணவு பொட்டலங்கள் வழங்கினார்கள்” என்பது போல இருந்தது.

இப்படி பேசினா, கமல் சார் என்னை divorce பண்ணிடுவார். நானே தயார் செய்து பேசுறேன் பேர்வழி என்று மூன்று நாட்களாக tripodல் உட்கார்ந்துகொண்டு எழுதினேன்.

9ம் தேதி 00.30 A.Mக்கு விமானம். திரும்புதல் 11ம் தேதி இரவு. இது ஏற்பாடு.

பத்து நாட்களாக நானும் என் உதவியாளர்களும் SICA காரர்கள் சீக்காளிகள் ஆகும் அளவிற்கு, அவர்களின் காதுகள் புண்ணாகி ரத்தம் வடியும்படியாக டிக்கெட் கேட்டு சொரிந்தே விட்டோம்.

7ஆம் தேதி இரவு 7 மணிக்கு தீடிரென போன் செய்து, “இன்னிக்கு night உங்க டிக்கெட்” என்றான் தீபக்.

“எனக்கும் பொட்டி படுக்கை, புள்ளக்குட்டிங்க எல்லாம் இருக்கு. எந்த ஏற்பாடும் செய்யலை. So சொன்னமாதிரி நாளைக்கே போறேன்.” என்றேன்.

தோ! mailல வருது.. மயில்ல வருது. 10 A.M, 3.30 P.M, 5.30 P.M.. இப்படி என் உதவியாளரை வரசொல்லி காக்க வைத்து.. நான் Ringgits மாற்றி, International Roaming activate செய்து தயாராயிருக்க 7 மணி வரை பொய் பேசியவர்கள் முகத்திரை கிழிந்தது.

அன்றைய தேதியில் என் பெயரில் டிக்கெட்டே இல்லை. பிரச்சினை டிக்கெட் இல்லாதது அல்ல. டிக்கெட் உறுதியாக இருப்பதாக கூறிய அவர்களின் கேடு கெட்ட செயல்.

கெட்ட கெட்ட வார்த்தைகள் மூர்க்கமாய் என் மூளையை முட்ட, எந்த வேகத்தில் கார் என்னை ஒட்டியது என்பது தெரியாமல் Vijaya Park-In ஹோட்டலுக்குள் நுழைந்தேன்.

என் அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய ஒளிப்பதிவாளர்கள் அங்கிருந்தனர். ஆனால் நான் எங்கு இருக்கிறேன் என்பது மட்டும் எனக்குத் தெரியவில்லை.

“மலேசியாவுக்கு போகாதது மயிருக்கு சமம். ஆனா ஏன்டா டிக்கெட் இன்னிக்கு இருக்குன்னு சொன்னீங்க” என்று உச்ச ஸ்தாயியில் கேட்பவர்கள் உச்சா போகும் வேகத்தில் கத்தினேன். தீபக் என்பவன் ‘காணவில்லை’ போஸ்டரை ஓட்டிவிட்டு ஓடிவிட்டான்.

K.S.செல்வராஜ் என்ற ஒளிப்பதிவாளர் தன் மகள் திருமணத்தை வைத்துக்கொண்டு இதற்கும் அலைந்து கொண்டிருந்தார். அவர்தான் என்னை சம்மதிக்க வைத்தவர். அவரை போனில் விடுவிடுவென விட்டு விளாசினேன்.

‘குப்பை மேட்டில் குண்டுமணி’ என்ற பெயரில் விருது கொடுத்தாலும், இதயம் நீட்டி வாங்கி மகிழ்பவன். அப்படிப்பட்ட நான் ‘SICA’ எனும் South Indian Cinematographers Association என்ற ஒளிப்பதிவு கலைஞர்கள் பெயரில் வழங்கப்படும் மதிப்புமிக்க விருதை நான் பெறமுடியாமல் போனதை விட organize செய்தவர்களின் தகுதியற்ற, தன்மையற்ற, உண்மையற்ற, ஒழுங்கற்ற செயல்பாடுகளால் வந்த அவமானம் என்னை எல்லாவற்றையும் தூக்கியெறிந்து பேசவைத்தது.

திரு.பாரதிராஜாவிடம் நிலைமை சொன்னேன். அவரும் வெகுண்டு “மன்னித்துவிட்டு மறுநாள் flightல் வா” என்றார்.

நான் மறுத்துவிட்டேன்.

ஏனெனில்,
என் கோபமும், கூச்சலும் அந்த விருதை வாங்க உச்சக்குரலில் எடுத்த பிச்சை என்றாகிவிடும். எனவே..

இவ்வளவு கோபத்தை காட்டியதில்லை எப்போதும் நான்.

மதுரையை எரித்தது பரத்தையின் கோபம் அல்ல.
கற்பு என்பது ஒரு விஷயத்தின் வீரியத்திற்குள் தன்னை முழுமையான ஈடுபாட்டோடு அடைகாத்துக் கொள்வது. அது உடைபடும்போது தான் அது Dec 26, 2004 ஆனது.

இந்த ஒரு நிகழ்ச்சிக்காக பல லட்சம் பொருள் நஷ்டம் எனக்கு.

மன உளைச்சலின் நஷ்ட ஈடு கோடிக்கணக்கில்.

“தப்பு தான் திட்டாதீங்க.. வாழ்த்துங்க!” என்றார் K.S.
“வாழ்த்தினாலும் அது வாயாரத்தான் இருக்கும்” என்று போனை துண்டித்தேன்.

துண்டிக்க முடியவில்லை என் கோபத்தை.
துண்டு துண்டாக நான் பிளவுபட்டதை கோர்த்துக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கிறேன் இதை.

பிரச்சினைகளும், பிரியாணியும் சூடாக இருக்கும் போதுதான். ஆறிவிட்டால் சொரணையே இருக்காது.

எனவே இதை அதே பதமாய் பதிவு செய்கிறேன். இறக்கி வைத்தபின் இப்போது தோன்றுகிறது.

இதோ இங்கு அரங்கேற்றும் வருத்தமோ,
மலேசியாவில் மேடையேறும் விருதோ, ஒளிப்பதிவாளர்கள் சங்கம் வழங்கியதாக இல்லாமல் ‘வெளி’ பிரபஞ்ச மாயை எனும்
‘காட்சிப்பிழைதானோ?’

Leave a Response