தமிழுக்கு நான் மண்டியிடுவேனே தவிர, மன்னிப்பு கேட்டு இராசாசியிடம் மண்டியிட மாட்டேன்


முதல் இந்திஎதிர்ப்புப் போரில் உயிர் நீத்த முதல் ஈகி நடராசன் நினைவு நாள்
15.1.1939
1938ஆம் ஆண்டு இராசாசி அரசு கட்டாயப் பாடமாக பள்ளிகளில் இந்தியை திணிக்க முற்பட்ட போது தமிழர்கள் அதனை எதிர்த்துப் போரிட்டனர். அப்போது தமிழ் காக்கும் அறப்போரில் ஒரு இருபது வயது கொண்ட இளைஞன் நடராசன் என்பவன் முதன் முதலாகப் பலியானான். 1919ஆம் ஆண்டு சென்னை பெரம்பூரில் பிறந்த இவன் வீட்டிற்கு ஒரே மகன். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவனது தந்தையின் பெயர் இலட்சுமணன்.
இந்தித் திணிக்கப்படுவதைக் கண்டு கோபம் கொண்ட நடராசன் சென்னை இந்து தியாலசிகல் பள்ளியின் முன்பு நடந்த மறியல் போரில் பங்கேற்று 5.12.1938 அன்று கைது செய்யப்பட்டான். நீதிமன்றம் இவனுக்கு ஆறுமாதம் சிறைத் தண்டனையும், ஐம்பது ரூபாய் தண்டனையும் வழங்கியது. நடராசன் சிறை வாழ்வை மகிழ்வோடு ஏற்றான். அந்த மகிழ்ச்சி நீண்டநாள் நிலைக்க வில்லை. கடும் வயிற்று வலி காரணமாக சென்னை பொது மருத்துவமனையில் 30.12.1938ஆம் நாளில் சேர்க்கப்பட்டான்.
மருத்துவ சிகிச்சையில் உடல்நலம் முன்னேற்றமில்லை. இராசாசி அரசு மனிதாபிமானத்தோடு விடுதலை செய்ய மறுத்தது. நடராசன் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் விடுதலை செய்வதாக நிபந்தனை விதித்தது. உடல் நலிவோடு வாடிய நிலையிலும் தமிழுக்கு நான் மண்டியிடுவேனே தவிர, ஒருபோதும் மன்னிப்பு கேட்டு இராசாசியிடம் மண்டியிட மாட்டேன் என்று திட்டவட்டமாக அறிவித்தான்.
தான் நேசித்த தமிழ்மொழிக்கு துரோகம் செய்ய விரும்பாத அந்த வீரத்தமிழ் மகன் 15.1.1939இல் மரணத்தை தழுவினான்.
நடராசன் இயற்கையாக மரணமடைந்ததாக தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அப்போது, “இராசாசி நடராசன் படிப்பு வாசனை அற்றவர், அதனால் தான் மறியலில் ஈடுபட்டார், அவரைப் போல படிப்பறிவில்லாத அப்பாவிகளை இந்தி எதிர்ப்பாளர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்” என்று மரணத்தை இழிவாகப் பேசினார்.
உடனே, நடராசன் தந்தையார் ஒரு கண்டன அறிக்கை விடுத்தார். அதில் “மன்னிப்பு கடிதம் கொடுக்க மறுத்த நடராசன் கோழையாக வாழ்வதை விட வீரனாக சாவதையே விரும்புவதாக கூறினான். அதன்படி வீரமரணம் எய்து விட்டான்” என்று குறிப்பிட்டிருந்தார். நடராசனின் இறுதி ஊர்வலத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அவனுக்குப் பின்னர் தாலமுத்து என்பவன் உயிர் துறந்தான். இந்த மொழிப்போர் ஈகியர்களின் நினைவைப் போற்றும் விதமாக சென்னை எழும்பூரில் உள்ள அரசு கட்டிடம் ஒன்றுக்கு ‘தாலமுத்து- நடராசன்’ பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. இதில் தவறொன்று நடந்துள்ளது. முதலில் உயிர் துறந்த நடராசன் பெயர் முதலில் எழுதப்பட்டு இரண்டாவதாக தாலமுத்து பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும். எந்த ஒரு போராட்டத்திலும் முதலில் உயிர் துறந்தவரைப் போற்றும் மரபு உள்ளது. இதனடிப்படையில் நடராசன் பெயர் முதலாவதாக எழுதப்பட்டு நிகழ்ந்த தவறு சரி செய்யப்பட வேண்டும். இது தமிழக அரசுக்கு நாம் விடுக்கும் வேண்டுகோளாகும்.
நடராசன் உயர்த்திப் பிடித்த இந்தி எதிர்ப்பு உணர்வை தமிழகத்தில் மங்காமல் காத்திட இந்நாளில் உறுதிமொழி ஏற்போம்!

தமிழ்வீரன் நடராசன்:
-பாரதி தாசன்
இந்திஎதிர்ப் புப்போரில் சிறைக்குச் சென்றான்
இளங்காளை நடராசன் சென்னை வாசி
அந்தமுறும் இலக்குமணன் அம்மாக் கண்ணாம்
அருந்தமிழர் பெற்றெடுத்த மருந்து போல்வான்!
இடரான இந்திமொழி வீழ்க வீழ்க
என்றுரைத்தான் தமிழரிடம் தமிழ்நாட்டின்கண்!
அடாதசெயல் இது என்றார் இந்தி சர்க்கார்.
அழகியோன் தான்தன்னைச் சிறையில் கண்டான்
வஞ்சமிலாத் தமிழரெலாம் நடரா சன்பேர்
வாழ்த்திக்கொண் டிருந்தார்கள் சிலநா ளின்பின்
வெஞ்சுரம்தான் கண்டதுவாம் அதுநாள் தோறும்
மேலோங்க லாயிற்றாம் மெலிவுற் றானாம்
தனக்கென்று வாழாத தமிழா என்று
தமிழரெலாம் அவன்பேரைப் பாடா நின்றார்!
தனிப்புகழ்சேர் நடராசன் தன்னைப் பெற்றோர்
தமிழுக்குப் பெற்றோம்என் றகம்ம கிழ்ந்தார்
தன்னலத்தை எண்ணிஎண்ணித் தமிழர் நாட்டைத்
தரைமட்டம் ஆக்குகின்றார் அவர்போல் இன்றி
இன்தமிழில் கல்விகற்றான் நடரா சச்சேய்
எழில்பெற்றான் புகழ்பெற்றான் எல்லாம் பெற்றான்.
பாவேந்தர் பாரதிதாசன். (பாவேந்தம் -18 பக்கம் 174.)
(இன்று 15.1.1939 இல் முதல் இந்தி எதிர்ப்புப் போரில் களப்பலியான முதல் ஈகி நடராசன் நினைவு நாள்)

Leave a Response