மோடியின் மோசமான பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்து ரிசர்வ்வங்கி முற்றுகை – நாம்தமிழர்கட்சி அறிவிப்பு

28-12-2016 புதன்கிழமை அன்று காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம் கட்சி தலைமையிடமான சென்னை இராவணன் குடிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களது முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இளைஞர் பாசறையின் மாநிலச் செயலாளர்கள் இயக்குநர் ஜெகதீசப்பாண்டியன், இயக்குநர் பாலமுரளிவர்மன்,வழக்கறிஞர் மணிசெந்தில், வழக்கறிஞர் இராசீவ்காந்தி,வழக்கறிஞர் விஜயராகவன், துருவன் செல்வமணி, இசை மதிவாணன், பேரா.அருளினியன், தமிழினியன், தமிழ்ச்செல்வன், மகேந்திரன், இ.ஆசைத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஒருமனதாக இயற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு.

1.மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளின் ஒரு அங்கமாக அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்கிற மத்திய அரசின் அறிவிப்பினால் நாடு மிக குழப்பமான பொருளாதார சீர்கேட்டினை அடைந்து வருகிறது. இவ்வறிவிப்பினால் ஏழை எளிய நடுத்தர மக்கள் வெகுவாகப் பாதிப்படைந்து வருகிறார்கள். மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து வரும் சனவரி 11ஆம் தேதி புதன்கிழமை காலை10 மணி அளவில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக சென்னை ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகத்தை முற்றுகை செய்து போராட்டம் நடத்துவது என இம்மாநிலக்குழு ஒருமனதாக தீர்மானிக்கிறது.

2. இளைஞர் பாசறை நடத்தும் வருகிற சனவரி 29ஆம் தேதி மாவீரன் முத்துக்குமார் நினைவேந்தல் கூட்டம் இம்முறை கன்னியாகுமரியில் நடத்துவது என்றும், அன்று காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் மாநில பொதுக்குழு கன்னியாகுமரியில் நடத்துவது என்றும், அன்று மாலை பொதுக்கூட்டத்தில் இளைஞர் பாசறையின் கொடி அறிவிப்பு, செயல்பாட்டு ஆவணம் ஆகியவற்றை வெளியிடுவது என்றும் இம்மாநிலக் குழு ஒருமனதாக தீர்மானிக்கிறது.

Leave a Response