கடலில் மூழ்குமா யாழ்ப்பாணம்? – சர்வதேச அமைப்பின் எச்சரிக்கையால் பதற்றம்

2040 ஆம் ஆண்டுவாக்கில் இலங்கையின் சில பகுதிகள் கடலில் மூழ்கிப் போகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசத்தின் கவனத்திற்கு உள்ளாகியுள்ள காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்ளும் சர்வதேச ஆய்வுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வறிக்கையில் யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகிய நகரங்கள் அதிகளவில் பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமகாலத்தில் பூமியில் ஏற்பட்டு வரும் அதிதீவிர உஷ்ணமாக காலநிலை காரணமாக, பனி மலைகள் வேகமாக உருகி வருகின்றன. இதன்மூலம் கடலின் நீர் மட்டம் வழமையை விடவும் வேகமாக அதிகரித்து வருகிறது.

2025 இல் கடல் மட்டம் அரை மீட்டர் உயரும் எனவும், 2050, 2075 என கடல் மட்டத்தில் ஏற்படப்போகும் அதிகரிப்பு காரணமாக பெரிய சிக்கல் நிலை ஏற்படும் எனவும் IPCC (Intergovernmental Panel on Climate Change) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் 40 விழுக்காடு மக்கள் கரையோரங்களில் வாழ்ந்து வருகின்றனர். காலநிலை மாற்றம் காரணமாக அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், பலத்த காற்று காரணமாக கடலில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்கள் காரணமாக கடல் நீர் வேகமாக தரையை நோக்கி நகர்வதற்கான சூழல் உருவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள தேவையான முன்நடவடிக்கைகள் துறைசார் தரப்பினர் மேற்கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இயற்கையால் ஏற்படும் பேராபத்து பற்றிய எச்சரிக்கைக்குப் பிறகாவது யாழ்ப்பாணத்தைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்கிற எதிர்பார்ப்புடனும் பதற்றத்துடனும் மக்கள் இருக்கிறார்கள்.

Leave a Response