தமிழகத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை அரசு நடத்தாதது ஏன்? – சீமான் விளக்கம்

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வலியுறுத்தி விவசாய ஒருங்கிணைப்பு அமைப்புகள், அரசியல் கட்சிகள் தமிழகம் முழுவதும் தொடர்வண்டி மறியல் நடத்துகின்றனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் அக்டோபர் 18 அன்று. சென்னை சென்டிரலில் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்துவதற்காக, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்றனர். அங்கு 9–வது நடைமேடையில் புறப்படத் தயாராக இருந்த வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் வண்டியை மறித்தனர். தண்டவாளத்தில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தின்போது சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் இசைந்தநிலையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு இந்த விவகாரத்தில் பின்வாங்கிவிட்டது. இது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பச்சைத்துரோகம்.

கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தலில் பா.ஜ.க.வும், காங்கிரசும் வலிமையாக உள்ளது. எனவே அந்த மாநில தேர்தலில் நல்ல நிலையை அடையும் நோக்கிலும், அற்ப அரசியல் லாபத்துக்காகவும் இரு கட்சிகளும் மாறி மாறி தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருகின்றன.

2007–ம் ஆண்டு முதல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ளன. அப்போது மத்தியில் வலுவான நிலையில் இருந்த காங்கிரசும் சரி, அக்கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த தி.மு.க.வும் சரி இதற்கான முயற்சியில் சிறிதளவும் ஈடுபடவில்லை. ஆனால் தற்போது காவிரி மேலாண்மை வாரியத்துக்காக அக்கட்சிகள் போராட்டத்தில் குதித்திருப்பது சுய அரசியலுக்காக தான்.

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ளார். அவர் நன்றாக இருந்திருந்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வீரியமான முயற்சி நடந்திருக்கும். அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்தபோது தமிழகத்தில் சட்டப்போராட்டம் நன்றாக நடந்தது. பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு தமிழகத்துக்கான தண்ணீர் கர்நாடகத்தில் இருந்து கிடைத்தது. தற்போதைய நிலையில் இதற்கான நிரந்தர தீர்வு காண நாம் போராடி வருகிறோம். எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் பல்வேறு வழிகளில் நாம் தமிழர் போராட்டம் எதிரொலிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து சீமானிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்னும் கூட்டப்படவில்லையே?

பதில்:– முதல்–அமைச்சர் ஜெயலலிதா நன்றாக இருந்திருந்தால் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைத்திருக்கும். ஆனால் தற்போதைய நிலையில் அதை யார் கையில் எடுப்பது? என்பது குழப்பம் தான்.

கேள்வி:– அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கும் என்று பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் கூறி வருகிறார்களே?

பதில்:– தற்போதைய விவசாயிகள் பிரச்சினையை கருத்தில் கொள்ளாத பா.ஜ.க. அரசு, ஜல்லிக்கட்டு பற்றி பேசி கவனத்தை திசை திருப்ப பார்க்கிறது. இப்போது இதை பேசவேண்டிய அவசியம் என்ன? ஏற்கனவே இது தொடர்பாக தமிழக முதல்–அமைச்சர் 2 முறை கடிதம் எழுதியும், பிரதமர் மோடியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இந்த வருடம் நடக்கும் என்று வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

கேள்வி:– நடைபெற உள்ள இடைத்தேர்தலில் நாம் தமிழர் நிலைப்பாடு என்ன?

பதில்:– அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நெல்லித்தோப்பு தொகுதியில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Leave a Response