234 தொகுதிகளிலும் போட்டியிடும் முதல் தமிழ்த் தேசிய இன கட்சியாக நாம் தமிழர் கட்சி-சீமான் பெருமிதம்

20.12.2014 அன்று சென்னையில் நடந்த நாம்தமிழர்கட்சி பொதுக்குழுவில் 2016 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்துப் போட்டியிடுவதென தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.  அத்தீர்மானத்தில்……

எவ்வளவு நீண்ட நெடிய பயணமும் ஒரு காலடி தடத்தில்தான் தொடங்குகிறது. அந்த வகையில் மாற்று அரசியலை முன்னெடுக்க வேண்டிய தேவைக்கும் கட்டாயத்துக்கும் நாம் ஆளாகி இருக்கிறோம். தேசியத்துக்கு தேசியமோ, திராவிடத்துக்குத் திராவிடமோ நிச்சயம் மாற்றாகாது. ”எதிர்வரும்  2016… படைப்போம் புதிய அரசியல் வரலாறு” என்கிற முழக்கத்துடன் வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி களமிறங்க முடிவெடுத்திருக்கிறது. எந்த அரசியல் கட்சியோடும் கூட்டில்லாது எமது மக்களோடு சேர்ந்து எமது மக்களுக்காக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும், மற்றும்  புதுச்சேரி, காரைக்காலிலும் நாம் தமிழர் கட்சித் தனித்துப் போட்டியிட முடிவெடுத்திருப்பதை மிக மகிழ்வோடு இந்தப் பொதுக்குழுவில் அறிவிக்கிறது. தமிழ்த் தேசிய இன அரசியலை மையப்படுத்தி எத்தனையோ கட்சிகளும் இயக்கங்களும் இத்தனை வருட காலங்களில் தொடங்கி நடத்தப்பட்டிருந்தாலும், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போகும் முதல் தமிழ்த் தேசிய இன  கட்சியாக நம்முடைய நாம் தமிழர் கட்சி தனிப்பெருமை கொள்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் என அனைத்து இடங்களிலும் நம் கட்சி வேட்பாளர்கள் தமிழ்த் தேசிய இன  அரசியலுக்கான விதையாகக் களம் காணுவார்கள்.

எதிர்வரும் 2015 மே 18 அன்று தமிழர் இன எழுச்சி அரசியல் மாநாட்டை நாம் தமிழர் கட்சி நடத்த இருக்கிறது. இதுகாலம் வரை சாதிக்காக, மதத்துக்காக, இந்திய தேசிய அரசியலுக்காக, திராவிட அரசியலுக்காகத் திரண்ட தமிழன், முதன் முறையாகத் தமிழுக்காகவும் தமிழர்க்காகவும் திரள வேண்டிய இன எழுச்சி அரசியல் மாநாடு இது. தமிழ்த் தேசிய எழுச்சியை உலகுக்கு உணர்த்தும்நாளாக – தமிழர் மறுமலர்ச்சித் திருவிழாவின் பந்தல்காலாக நம்முடைய மாநாடு அமைய வேண்டும். நம் கட்சியின் பொறுப்பாளர்களும் தொண்டர்களும் தங்களின் உற்றார், உறவினர், நண்பர்கள், குடும்பத்தினர் என அனைவரையுமே நம் இன எழுச்சி மாநாட்டுக்கு அழைத்து வர வேண்டும். இல்லத்தின் நிகழ்வைப்போல், கோயில் திருவிழாவைப்போல் நம் இனத்தின் திருவிழாவுக்கு எல்லோரும் கூட வேண்டும். மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மொத்தமாக நான்கு மணி நேரம் நடக்க இருக்கும் நம் இன எழுச்சி அரசியல் மாநாட்டில் தமிழ்த் தேசியப் பிள்ளைகள் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். இனத்துக்காக நான்கு மணி நேரத்தை ஒதுக்க ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளைகளும் தயாராக வேண்டும். 2015 மே 18-ம் தேதியை நாட்காட்டியில் இன எழுச்சி நாளாகக் குறித்து வைத்துக்கொண்டு, நாம் அனைவரும் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தத் திட்டமிட வேண்டும். இது, நாம் தமிழர் கட்சியினருக்கான அறிவிப்போ அறைகூவலோ இல்லை. இனத்தின் எழுச்சிக்கு படை திரட்டி வரச்சொல்லும் உத்தரவு.

கட்சிக் கட்டமைப்பு, இன எழுச்சி அரசியல் மாநாடு, சட்டமன்றத் தேர்தல் என 2016 வரையிலான நம் செயல் திட்டங்களுக்குப்’புலிப்பாய்ச்சல்’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. ‘புலிப்பாய்ச்சல்’ என்பது,  கூட வருவோரைக் கூட்டிக்கொண்டு ஓடுவது, விலகி நின்றால் விட்டுவிட்டு செல்வது, தடையாக இடையூறாக எவர் வந்தாலும் அவர்களை ஏறி அடித்துவிட்டு செல்வது. பெரிய அளவிலான ஊடகச் சக்திகளோ, விளம்பர வசதிகளோ, பண இருப்புகளோஇல்லாமல் உண்மையும் நேர்மையுமாக மட்டுமே இயங்க இருக்கும் நாம் அனைவரும், நமது உயிருக்கினிய மேதகு பிரபாகரன் பிள்ளைகள் என்பதை 2016-ல் நிச்சயம் நிரூபிக்க வேண்டும். தமிழ்த் தேசிய அரசியலின் முதல் தளிராக குறிப்பிடத்தக்க வெற்றியையும், சொல்லிச் சிலிர்க்கத்தக்க பேராதரவையும் நம் கட்சி நிச்சயம் வரும் தேர்தலில் பெறும். அத்தகைய புரட்சிக்கான புறப்பாடாக மக்களைத் திரட்டவும், ஒருங்கிணைக்கவும், மாற்றத்தைத் தூண்டவும் நாம் ஒவ்வொருவரும் தயாராக வேண்டும்

Leave a Response