தமிழர் விரோத பாஜக, காங்கிரசுடன் அதிமுக, திமுக கூட்டணி வைக்காமல் இருக்குமா? – சீமான் கேள்வி

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுத்த மோடி அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே அக்டோபர் எட்டாம்நாள் மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். இதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும்,மோடி அரசைக் கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு தென்னரசன், வியனரசு மற்றும் கடல் தீபன், ஆட்சிமொழி பாசறை மறத்தமிழ்வேந்தன், திருச்சி மண்டல பொறுப்பாளர்கள் நல்லதுரை மற்றும் பிரபு, மேலும் பேராவூரணி திலீபன், மணிசெந்தில், மு.வாசு, இராஜேந்திரன், சஞ்சீவிநாதன், செந்தில்நாதன், செந்தில்குமார், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களும், விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பொதுமக்களும் உணர்வெழுச்சியோடு பெருந்திரளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:-

பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு குறிப்பிட்ட காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு மறுத்தது. இது தமிழர்களுக்கு மத்திய அரசு செய்த பச்சைத் துரோகம்.

கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பேச்சுக்கு எப்போதும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

வாக்குகளுக்காக நிற்கிற கட்சிகளாக தற்போது பா. ஜனதாவும், காங்கிரசும் உள்ளது. கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது, பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைமையும் குரல் கொடுக்கவில்லை. அப்படியானால் கர்நாடக மக்களின் நலன்சார்ந்து மத்திய அரசு இயங்குகிறதா?. மோடியும், காங்கிரஸ் தலைமையும் கர்நாடகத்திற்கு சாதகமாக செயல்படுகிறார்கள். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

காவிரித் தண்ணீரை தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டும். அப்படித் தர மறுத்தால் தமிழ்த்தேசியம் பேச வேண்டிய நிலை வரும். தமிழகத்தில் உள்ள வளங்கள் அனைத்தும் தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்று கூற வேண்டிய நிலை ஏற்படும்.

காவிரி விவகாரத்துக்காக தமிழக எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும் என்பது தேவையற்றது. தமிழர் நலன் சாராத பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்ற முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். இதேபோல் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் சொல்வார்களா?

தமிழகத்துக்கு தற்காலிக முதல்-அமைச்சரை நியமிக்க வேண்டுமா? என்பதை அ.தி.மு.க.தான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response