
இசை நிகழ்ச்சிகள் என்றாலே செவிகளுக்கு விருந்துதான்.. அதுவும் இளையராஜா பாடல்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.. அதிலும் இளையராஜாவே அந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறார் என்றால் தேனில் ஊற வைத்த பலாச்சுளையை சாப்பிடுவது போலத்தான்.. அதைத்தான் அமெரிக்காவில் இருக்கும் இசைப்பிரியர்கள் இப்போது அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்..
ஆம்.. தற்போது அமெரிக்காவில் சுற்றுப் பணயம் செய்து இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார் இசைஞானி இளையராஜா. இதற்கான ஏற்பாடுகளை அமெரிக்காவில் உள்ள கலாலயா நிறுவனம் செய்துள்ளது. நேற்று முன்தினமும், நேற்றும் கலிபோர்னியாவில் இசை நிகழ்ச்சி நடத்தினார். முதல் நாள் தெலுங்கிலும் மறுநாள் தமிழிலும் இசை நிகழ்ச்சி நடந்தது.
வருகிற 17ஆம் தேதி டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் நகரிலும், 18ஆம் தேதி ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள அட்லாண்டா நகரிலும் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். அதன்பிறகு 24ஆம் தேதி நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள நியூயார்க்கிலும், 25ஆம் தேதி வாஷிங்டனிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்த இருக்கிறார் இளையராஜா.


