முதன்முறையாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்த தமிழர் மாரியப்பன்

31-வது ஒலிம்பிக் போட்டிகள் அண்மையில் முடிவடைந்த நிலையில் தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் நடைபெற்று வருகின்றன. இன்று (செப்டம்பர் 10) சனிக்கிழமை காலை நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார்.

இந்தப் பிரிவில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய போட்டியாளர் வருண் சிங் பாட்டி வெண்கலம் வென்றுள்ளார்.

தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேல் தாண்டிய உயரம் 1.89 மீட்டர் ஆகும். அவரை எதிர்த்து போட்டியிட்ட சக போட்டியாளர் வருண் சிங் பாட்டி தாண்டிய உயரம் 1.86 மீட்டர் ஆகும்.

அமெரிக்காவை சேர்ந்த சாம் க்ரிவ் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

மாரியப்பன் தங்கவேல், சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் தங்கவேல்- சரோஜா. செங்கல் சூளை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.

21 வயதான மாரியப்பன் சேலம் தனியார் கல்லூரியில் இளங்கலை நிர்வாகவியல் மூன்றாமாண்டு (பிபிஏ) படித்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதரி, இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.

மாரியப்பன் ஐந்து வயது இருக்கும்போது, வீட்டின் அருகேயுள்ள கோயில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பேருந்து மோதியதில் அவரது வலது கால் கட்டை விரலை தவிர மற்ற கால் பகுதிகள் சிதைந்து, ஊனமானார். விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ள மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார்.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்துகொண்ட அவர், 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் முதல் தங்கப்பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது வெற்றியைக் கேள்விபட்ட ஊர்மக்கள் இன்று அதிகாலை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.பிரதமர் நரேந்திரமோடி ட்விட்டரில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Leave a Response