தலைவர் பிரபாகரனைப் போல் தலைமைத்துவ பண்புகள் வேண்டும் – மாணவர்களுக்கு தமிழ் அமைச்சர் அறிவுரை

தமிழ் மாகாணத்தில் இடம்பெற்ற கூட்டுறவு சித்திர போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியில், வடமாகாண விவசாயம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நிகழ்வில் கலந்து கொண்டு ஐங்கரநேசன் உரையாற்றுகையில்,

இன்று பாடசாலை மாணவர்கள் தலைமைத்துவ பண்புகள் என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். தலைமைத்துவ பண்புகளை வளர்ப்பதற்கு இவ்வாறு கூட்டுறவு செயற்பாடுகள் இன்றியமையாத ஒன்றாகி உள்ளது, முன்னைய நாட்களில் குடும்பங்கள் கூட்டுறவில் அதிகம் அக்கறை செலுத்தி வந்தனர்.

ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. கூட்டுறவிற்கு நேரம் இல்லாதவாறு மக்கள் செயற்பட வேண்டிய காலமாகிவிட்டது,
மாணவர்கள் தலைமைத்துவ பண்புகளை சிறு வயதிலேயே வளர்த்து கொள்வதற்கு இவ்வாறு கூட்டுறவு என்பது மிக முக்கியமானதொன்றாகி உள்ளது தலைமைத்துவம் என்பது இன்று எம்முன்னால் உள்ள அரசியல் தகைமைகளை போன்று வளர்த்து கொள்ள வேண்டிய ஒரு பண்பாகும். இன்று எம்மத்தியில் பல அரசியல் கட்சிகள், தலைமைகள் உள்ளனர். ஆனால் அவர்கள் தேர்தல் காலங்களில் மாத்திரமே பேசப்படுகின்றனர்.

நேற்றைய தினம் ஓய்வு பெற்ற இராணுவ தளபதி ஒருவர் குறிப்பிட்டிருந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஐங்கரநேசன், குறித்த இராணுவ தளபதி பிரபாகரன் பற்றி பல விடயங்களை குறிப்பிட்டிருந்தார்.

யுத்தத்தின் போது பத்தாயிரத்திற்கும் அதிகமான புகைப்படங்களை தாம் கைப்பற்றியதாகவும், அதில் ஒரு படத்திலேனும் பிரபாகரன் மது அருந்தும் காட்சிகளோ அல்லது தலைமைத்துவத்திற்கு மாறான காட்சிகளோ காணப்படவில்லை.
பிரபாகரன் ஒழுக்கமான தலைமையாகவே இருந்தார் என அவர் குறிப்பிட்டதாக ஐங்கரநேசன் தெரிவித்தார். அது மட்டுமன்றி விடுதலைப் புலிகளில் பெண்களுக்கு என ஒரு அணி இருந்ததாகவும், குறித்த அணி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒழுக்கமாகவே காணப்பட்டதாகவும் இராணுவ தளபதி குறிப்பிட்டதாக ஐங்கரநேசன் தெரிவித்தார்.

இதே போன்று இன்று எம்மத்தியில் முதலமைச்சர் நல்லதொரு தலைமையை கொண்டுள்ளதாகவும், தவறுகளிற்கு நேரே பேசக்கூடிய நல்ல பண்பு மிக்கவராக அவர் திகழ்வதாகவும் ஐங்கரநேசன் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறு தலைமைத்துவ பண்புகளை கொண்டவர்களாக வளர்வதற்கு மாணவ பிராயத்திலேயே கூட்டுறவினை வளர்த்தெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இன்று பாடசாலைகளில் குறைந்த அளவிலேயே கூட்டுறவு அமைப்புக்கள் இயங்கி வருவதாகவும், அவற்றை அதிகரித்து பாடசாலைகளில் கூட்டுறவினை மேம்படுத்த மாணவர்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Response