அனைவருக்கும் கல்வி கொடுக்கும் நல்லரசாவது எப்போது? – உலக எழுத்தறிவு நாளை முன்வைத்து மோடி அரசுக்குக் கேள்வி


இன்று (செப் 8) உலக எழுத்தறிவு நாள். இதையொட்டி கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பைச் சேர்ந்த சு.மூர்த்தி எழுதியுள்ள பதிவில்,

நமது அவலத்தைக் கண்டு சராசரி மனித அறிவு வாய்க்கப்பெற்றவர்கள் கூட கோபப்படவேண்டும். கோபப்பட முடியாதவர்கள் சராசரி மனித அறிவளவிற்காவது தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும். .
இன்னும் நாட்டில் உள்ள மக்களில் 25 விழுக்காட்டினருக்கு கையெழுத்துப் போடத் தெரியாது. எந்தப் பேருந்து எந்த ஊருக்குப் போகும் என்று பேருந்து நிலையத்தில் அடுத்தவரைக் கேட்டுத்தான் தெரிந்துகொள்ளவேண்டும்.
நான் ஆறாம் வகுப்புப் படிக்கும் போது எங்கள் ஊரில் இருந்த அய்யம்பாளையத்து அத்தைக்கு, திருமணமாகி வெளியூரில் இருக்கும் மகளிடம் (சரசுவிடம்) இருந்து தபால் (கடிதம்) வரும். அந்தக் கடிதத்தை படித்துக் காட்டிவிட்டு நான் தான் பதில் கடிதம் எழுதிக் கொடுப்பேன். எங்கள் குடியிருப்புப் பகுதியில் ஆறேழு குடும்பங்களில் இருந்தவர்களில் என்னைத்தவிர யாருக்கும் கடிதம் எழுதத் தெரியாது.
எங்கள் ஊரில் (சென்னிமலை அருகே பசுவபட்டி) 1945 ஆம் ஆண்டிலேயே (விடுதலைக்கு முன்பே) இலண்டன் மிசனரி தொடக்கப் பள்ளியை வெள்ளைக்கார புண்ணியவான் யாரோ தொடங்கி வைத்திருக்கிறார். பசுவபட்டி ஊர்க்காரர்களில் ஒருவர் கூட கிறித்துவராக இல்லாத நிலையிலும் கூட அங்கே இலண்டன் மிசனரிப் பள்ளி தொடங்கப்பட்டது வியப்பாகத்தான் இருக்கிறது. பின்னர் தான் அது பஞ்சாயத்துப் பள்ளியாக மாறி இன்று அரசு மேல்நிலைப் பள்ளியாக வளர்ந்துள்ளது.
நல்லவேளை இப்போது அலைபேசி வந்துவிட்டதால் யாரும் யாருக்கும் கடிதம் எழுதவேண்டியதில்லை. ஆனால் அலைபேசி இல்லாமல் இருந்திருந்தால் இன்றைக்கும் ஊரில் இருக்கும் 10 இல் மூன்று பேருக்கு நாம் தான் கடிதங்களை வாசித்தும் எழுதியும் கொடுத்துக்கொண்டிருப்போம்.
ஆனால் இங்குதான் மூன்று வயதுக் குழந்தைக்கு எல்கேஜி படிப்பு படிப்பதற்கே பத்தாயிரம் ரூபாய் முதல் மூன்று இலட்சம் ரூபாய் வரை பணம் கட்டவேண்டிய தனியார் கல்வி வியாபாரக் கடைகளும் உள்ளன. A, B. C, D யும் CAT, DOG, படிக்கவும் எழுதவும் இவ்வளவு விலையா? என்று கேட்கக் கூடாது. இந்தக் கடையில் தான் உலகிலேயே விலை உயர்ந்த முழுப்பாத செருப்பும், புத்தகமும், சீருடையும் கழுத்துக் கட்டுத் துணியும் கிடைக்கிறதே!
நாம் வல்லராசாகப் போகிறோம் இல்லையா? அது சரிதான் நாம் எப்பொழுது அனைவருக்கும் கல்வி கொடுத்த நல்ல அரசு ஆவது.? இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் நீங்கள் தேசவிரோதிகள் என்று சொல்லுவார்கள்.
ஆனால், அதற்கும் வழியில்லை என்றுதான் தெரிகிறது.
புதியக் கல்விக் கொள்கை வரைவுக்கான உள்ளீடுகளில் மாணவர்கள் குறைவாகப் படிக்கும் பள்ளிகளை மூடுவோம், 5 ஆம் வகுப்புக்கு மேல் சில குழந்தைகளை FAIL ஆக்கி விட்டுக்குத் துரத்துவோம் அனைவருக்கும் அரசின் பொறுப்பில் செலவில் கல்வி வழங்கும் பொதுப்பள்ளி முறைக்கு கல்லறை கட்டுவோம் என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள்.
உலக எழுத்தறிவு நாளுக்கு நம்ம தலைமை அமைச்சர் என்ன உரை நிகழ்த்துவார் என்பதைக் தெரிந்துகொண்டு பிறகு பேசுவோமா?

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response