ஐ நா செயலாளர் பான் கி மூன் இலங்கை பயணம் – தமிழ், சிங்களம், ஆங்கிலத்தில் அறிவிப்புகள்

ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் 3 நாட்கள் பயணமாக ஆகஸ்ட் 31 அன்று இலங்கை தலைநகர் கொழும்பு சென்றார். பான் கீ மூன் இன்று யாழ்ப்பாணம் செல்கிறார்.

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோரையும் இவர் அங்கு சந்திக்கின்றார்.

நண்பகல் 12 மணிக்கு பொது நூலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும், பிற்பகல் 1 மணிக்கு ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயையும், அதன் பின்னர் வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனையும் சந்திக்கவுள்ளார்.

இந்தச் சந்திப்புக்களைத் தொடர்ந்து வலி.வடக்குப் பகுதியிலுள்ள நலன்புரி நிலையங்களுக்குச் சென்று இடம்பெயர்ந்த மக்களையும் மீள்குடியேறிய மக்களையும் சந்தித்து அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறியவுள்ளார்.

பான் கீ மூனுடனான சந்திப்பில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் கூட்டமைப்பினர் விளக்கிக் கூறவிருப்பதுடன், அரசியலமைப்புத் திருத்த செயற்பாடுகள் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை இலங்கை வந்தடைந்த ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன், அன்று இரவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்திருந்தார்.

அதன் பின்னர் நேற்று வியாழக்கிழமை முற்பகல் காலிக்குச் சென்ற அவர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார். காலியில் சர்வமதத் தலைவர்கள் குழுவையும் அவர் சந்தித்திருந்தார்.

நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பு இடம்பெற்றது.

இன்று காலை சபாநாயகரை சந்தித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்த செய்தியை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் தனது டுவிட்டர் வலைதளத்தில் தமிழ் மொழியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பயணம் தொடர்பான செய்திகளை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஐநா டிவிட்டர் தளம் அறிவித்துக் கொண்டிருக்கிறது.

Leave a Response