காவல்துறையின் கடும்நெருக்கடிகளை மீறி நடந்த ஆவணப்பட நிகழ்வு

இயக்குநர் குறிஞ்சிவேந்தன்

இரண்டாம் உலகப் போரின் போது தாய்லாந்து – பர்மா இடையிலான ரயில்பாதை அமைப்பிற்காக ஜப்பான் அரசினால் அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களைப் பற்றிய மறைக்கப்பட்ட வரலாற்றினை ஆவணப்படுத்தும் ”சயாம்-பர்மா மரண ரயில் பாதை” ஆவணப்படம் சென்னையில் 27-8-2016 அன்று நிமிர் சார்பாக வெளியிடப்பட்டு திரையிடப்பட்டது. இந்த நிகழ்விற்கான ஒத்துழைப்பினை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் புலம்பெயர் ஆய்வு மையம் வழங்கியது. இந்த ஆவணப்படத்தினை தனது 10 வருட ஆய்வுப் பணியின் உழைப்பின் மூலமாக பேராசிரியர் குறிஞ்சிவேந்தன் இயக்கியுள்ளார்.

பர்மா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தியா ஆகிய 5 நாடுகளில் படப்பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணப்படம். இப்படத்திற்கான ஆதாரங்கள்/தகவல்கள் ஆகியவை கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா,சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் ஆவணக் காப்பகங்கள் மற்றும் நூலகங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன. ஒரே நாளில் சயாம் மற்றும் பர்மா ஆகிய இருமுனைகளில் தொடங்கப்பட்ட இந்த இரயில்பாதை என்னும் துயரக்கதையின் பக்கங்கள் கனமானவை. ஏறத்தாழ 72 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இக்கொடியச்சம்பவத்தில் 1,00,000 தமிழர்கள் உள்ளிட்ட 1,50,000 ஆசியத்தொழிலாளர்கள் தம் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். கண்ணீரைப் பெருக வைக்கும் இச்சம்பவம் குறித்து 1 1/4 மணி நேர ஆவணப்படமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்பட உருவாக்கத்திற்காக உழைத்த அனைவருக்கும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இறுதியாக ஆவணப்படத்தின் இயக்குனர் குறிஞ்சிவேந்தன் ஏற்புரை வழங்கினார்.

சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது பெற்ற இந்த ஆவணப்படம் தற்போது தமிழகத்தில் முதல் முறையாக வெளியிடப்பட்டது. எடிட்டர் லெனின், திரைப்பட இயக்குனர் மகிழ் திருமேனி, விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் தோழர் குடந்தை அரசன், தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தோழர் கி.வே.பொன்னையன், தமிழக மக்கள் முன்னணியின் தோழர் அரங்க குணசேகரன், ஓவியர் வீரசந்தானம், பேராசிரியர் அண்ணாமலை, நிமிர் தோழர்கள் லெனா குமார் மற்றும் அருள் முருகன் ஆகியோர் ஆவணப்படம் குறித்து உரையாற்றினர்.

தமிழர் விடியல் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தமிழர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு இயக்கத்தினர், பேராசிரியகள், ஊடகவியலாளர்கள், திரைத்துறையினர், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் என ஏராளமானோர் பங்கு பெற்றனர்.

இந்நிகழ்வுக்கு தமிழகக் காவல்துறை பல நெருக்கடிகளைக் கொடுத்ததாம். அதுபற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,,,

நிகழ்வு தொடங்குவதற்கு முன்பே காலையிலிருந்தே காவல் துறையினர் திரையிடலை தடுப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டனர்.மாலை 6:10 மணிவரை திரையிட அனுமதிக்காமல் காவல்துறை தடுத்தது. சென்சார் வாங்கியாகிவிட்டதா, உளவுத்துறைக்கு சொல்லியாகிவிட்டதா என்று காலை முதல் நெருக்கடி

இதை விட அரங்க உரிமையாளருக்கு நெருக்கடி என்பதை தனது யுக்தியாக வைத்திருக்கிறார்கள்.

மே17 இயக்கம் போன்ற தடை செய்யப்பட்ட அமைப்பு நடத்துவதாகவும், அதனால் அனுமதி மறுப்பதாகவும் காவல்துறை அதிகாரி சொல்லி இருக்கிறார். இதே போன்று மின்சார ஆவணப்பட திரையிடலின் போது தேர்தல் அதிகாரியிடமும் காவல்துறை சொன்னதை, நாம் நேரில் கேட்டோம். நாம் இருப்பது அறியாமல் அவர் சொன்னதை கேட்க நேர்ந்தது. இதே போன்ற கருத்தினை மதுரையிலும், பிற இடங்களிலும் சொல்லி வருகிறது.

கடந்த முறை “மின்சாரம்குறித்தான “ஆவணப்பட வெளியீடின் போதும் இதே நெருக்கடி கொடுக்கப்பட்டது. ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படத்தையும் இதே போன்று தடுத்தார்கள்… எஸ்.வீ.ஆர் குறித்த ஆவணப்படமும் இப்படி நிறுத்தப்பட்டதாக கோவை.இராமகிருட்டிணன் அவர்கள் சொன்னார்.

காலை முதல் மாலை வரை ஆவணப்பட இயக்குனரும் ஆய்வாளரும், பேராசிரியர்களும் காவல் நிலையத்தில் காக்க வைக்கப்பட்டனர். ஒரு ஆய்வறிஞருக்கு கொடுக்க வேண்டிய குறைந்த பட்ச மரியாதை கூட கொடுக்காமல் அலைக்கழிக்கப்பட்டார்.

அரசு செய்திருக்க வேண்டிய பணியை செய்த ஒரு அறிஞருக்கு கிடைத்த அவமரியாதையே இது.
இறுதியாக பல்வேறு அலைக்கழிப்புகளுக்குப் பின்னர் காவல்துறையின் தடுப்பு முயற்சிகளைக் கடந்து திரையிடல் நடைபெற்றது

என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Response