எல்லாவற்றிற்கும் அம்மா என்று பெயர் வைப்பது கேவலம் – நடுநிலையாளர்கள் கண்டனம்


தமிழக சட்டசபையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா,ஆகஸ்ட் 29 அன்று 110-வது விதி யின் கீழ் அறிக்கை படித்தார். அதில்.

கிராம ஊராட்சிகளில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியோர்களுக்கு பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி சாதனங்கள், நடைபாதைகள், சிமெண்ட் பெஞ்சுகள், குடிநீர் வசதிகள், புல்தரை, பசுமைத் தோட்டம் மற்றும் கழிப்பறை, ஆகிய அம்சங்களுடன் கூடிய 500 ‘அம்மா பூங்காக்கள்’ 100 கோடி ரூபாய் மதிப் பீட்டில் இந்த ஆண்டு அமைக்கப்படும்.

ஊரகப் பகுதி இளைஞர்களுக்கு உடல் திறன் மற்றும் மனவளத்தினை மேம்படுத்த ஊரகப் பகுதிகளில், ‘அம்மா உடற்பயிற்சிக் கூடங்கள்’ அமைக்கப்படும்.ஒவ்வொன்றும் 10 லட்சம் ரூபாய் செலவில் 500 அம்மா உடற்பயிற்சிக் கூடங்கள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்கு தன் புகழ் பரப்பவேண்டியும், தம்மை நினைவுறுத்தும் வகையிலும் அம்மா என்கிற சொல்லைப் பயன்படுத்தி வருகிறார். இதற்கு நடுநிலையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.

தமிழ்ப்பண்பாட்டு நடுவத்தின் செயலர் இளையவேந்தன் இது தொடர்பாக எழுதியுள்ள பதிவில்,

அரசு செலவில் உருவாகும் பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு ‘அம்மா’ பெயர் – அம்மா அறிவிப்பு !
இதை விட அநீதியான செயல் வேறு ஒன்றும் இருக்க முடியாது. தமிழகத்தின் முன்னோர்கள், சான்றோர்கள் பெயர்களை சூட்ட முன்வராத இந்த அரசு அம்மாவிற்கு விளம்பரம் தேடித் தர இதுபோன்று செயல்களை செய்து வருவது கண்டிக்கத்தக்கது.
தமிழ் உணர்வும், தமிழ்நாட்டுப் பற்றும் மக்களிடையே குறைந்து வரும் காலத்தில் பூங்காக்கள் தமிழ் மனம் கமழ தமிழ்ச் சான்றோர்களின் பெயர்களை சூட்டி அனைத்து பூங்காக்களிலும் திருக்குறள், ஒளவையார் அறநெறிகள், நாலடியார், சங்க இலக்கியப்பாடல்கள் இடம் பெறச் செய்தால் நாளைய தமிழ் மக்களுக்கு அது நன்மை பயக்கும். இதை செய்வதை விட்டுவிட்டு எல்லாவற்றிக்கும் அம்மா பெயர் வைப்பது உலக அரங்கில் தமிழகத்தை அவமானப்படுத்துவதாகும்.
தமிழக அரசு இனியாவது இது போன்ற கேவலமான செயல்களை செய்யாது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் செயலை செய்ய முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

என்று சொல்லியிருக்கிறார்.

Leave a Response