உங்கள் பட்டாம்பூச்சிகள் சிறை பிடிக்கப்படுவார்கள் – புதியகல்விக்கொள்கையை முன்வைத்து நெஞ்சைப் பதற வைக்கும் கட்டுரை


2016 ஜூன் மாதக்கடைசியில், இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தனது வலைதளத்தில் ஓர் ஆவணத்தை ஆங்கில மொழியில் வெளியிட்டு 30 நாள்களுக்குள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது.

இந்த ஆவணம் யாரால், எதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது என்பதைக்கூட வெளிப் படுத்தாமலும், இவ்வாவணத்தில் உள்ள கொள்கை முன்மொழிவுகள் (Policy Initiatives) வரைவு கல்விக் கொள்கையை உருவாக்க சில உள்ளீடுகளாக (Some Inputs for Draft National Education Policy – 2016) கொள்ளப்படும் என்பதும் எந்தவித ஜனநாயக நடைமுறைக்கும் ஏற்புடையது அல்ல என்று தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

இதுபற்றி இதழாளர் ப.கலாநிதி எழுதியுள்ள கட்டுரை…

‘2016ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கைக்கான சில உள்ளீடுகள்’ என்ற தலைப்பில், மத்திய அரசு ஓர் ஆவணத்தை வெளியிட்டுள்ளது. இதில் சிலப்பல மாற்றங்களைச் செய்து, இன்னும் சில ஆண்டுகளில் இதை மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டுவரக்கூடும்.

இந்த புதிய கல்விக் கொள்கைக்கு நாட்டில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த வரைவு கல்விக் கொள்கைக்கு எதிராகப் பல கல்வியாளர்கள் களமிறங்கி, கருத்தரங்குகள், கூட்டங்கள் மூலம் கருத்துப் பரவலைச் செய்து வருகிறார்கள்.

இவர்கள் யாரும் வேறு வேலை இல்லாமல், இப்பிரச்னையைக் கையில் எடுக்கவில்லை. இப்போது குழந்தைகளாக இருக்கும், இன்னும் 15 ஆண்டுகளில் இளைஞர்களாகப் போகும் பிள்ளைகள் அனைவருக்காகவும்தான் இவர்கள் களமிறங்கி இருக்கிறார்கள்.

பெற்றோராகிய நீங்கள், இப்பிரச்னையைக் குறித்து குறைந்தபட்சம் தெரிந்து கொள்ளவாவது வேண்டும். நானறிந்த பள்ளிக்கூட ஆசிரியர்கள் (அரசு / தனியார்), பெற்றோர்கள் என ஒருசிலரோடு புதிய கல்விக் கொள்கை குறித்து உரையாட முற்பட்டேன். பலருக்கும் அதிலிருக்கும் அடிப்படைப் பிரச்னை புரியவில்லை. ஒரு சிலருக்கு இப்படி ஒரு கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளதுகூடத் தெரியவில்லை.

எனக்குத் தெரியும், உங்களில் பலர் தனியார் பள்ளிகளின் அடிமைகள். உங்களால் உங்கள் பிள்ளைகளுக்கு எப்படி தலை வாருவது என்பதில்கூட முடிவு செய்ய முடியாது என்பது எனக்குத் தெரியும். பெற்றோர் – ஆசிரியர் கழக சந்திப்புகளில் நீங்கள் வீட்டிலிருந்து காதுகளை மட்டுமே எடுத்துச் செல்கிறீர்கள் என்பதும், அங்கு உங்களால் எந்தவிதமான எதிர் கருத்துகளையும் சிந்திக்ககூட முடியாது என்பதும் எனக்குத் தெரியும்.
உங்கள் பிள்ளைகளுக்கு மதிய உணவு கொடுக்கவும், பள்ளி முடிந்து வீட்டிற்கு அழைத்து வரவும், சிறைச்சாலையில் மனுபோட்டுவிட்டு கைதிகளைப் பார்க்கக் காத்திருப்பதுபோல காத்திருப்பவர்கள் நீங்கள் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்.

ஆனால்,
இப்போதாவது உங்கள் பிள்ளைகளின் கல்வி குறித்து நீங்கள் சிந்திக்காவிட்டால், அவர்களின் எதிர்காலம் மிகவும் மோசமானதாக மாறிவிடும்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால் மூன்று முறையும், சுதந்திரம் அடைந்த பிறகு ஐந்து முறையும் வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டு, கல்விக் கொள்கைகள் மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் மிக மோசமான கல்விச் சீர்திருத்தத்தை 1986ம் ஆண்டு ராஜிவ் காந்தியின் அரசு கொண்டுவந்தது. அதன் விளைவுகளைத்தான் இப்போதைய தலைமுறை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

அதன்பிறகு 2009ம் ஆண்டு அமைக்கப்பட்ட யஷ்பால் குழு, ஏற்கனவே இருந்த கல்விச் சீரழிவுகளை ஓரளவிற்குச் சரிசெய்வதற்காக முயற்சி செய்தது. அதற்குள்ளாக நிலைமை கையை மீறிப் போய்விட்டது.
இப்போதுள்ள தலைமுறைக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரியாது என்பதுதான் அந்தக் கல்விச் சீர்திருத்தத்தின் முதல் ‘சாதனை’. ஆங்கில வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழில் மட்டுமல்ல; ஆங்கிலத்திலும் புலமை கிடையாது.

ஆங்கில வழியில் படிக்கும் அல்லது படித்த உங்களின் வளர்ந்த பிள்ளையிடம், நீங்கள் ஊருக்குப் போயிருப்பதாய் நினைத்துக் கொண்டு உங்களுக்கு ஒரு கடிதம் எழுதச் சொல்லுங்கள். அந்தக் கடிதம் ஆங்கிலத்தில் உணர்வுப்பூர்வமாக இரண்டு பக்கங்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். இதை நீங்கள் செய்து பார்த்தால், உங்களுடைய பிள்ளை அதுநாள் வரை கற்று வைத்திருக்கும் ஆங்கிலத்தின் நிலைமை உங்களுக்குப் புரியும்.
‘தேசிய நீரோட்டத்தில்’ கலப்பதாகச் சொல்லிக் கொண்டு இந்தி படிக்கவைக்கப்பட்ட மாணவர்களின் இந்திப் புலமையையும் நான் நன்கறிவேன். அதுகுறித்துச் சொல்லவே வேண்டாம். அவ்வளவு மோசமாக இருக்கிறது ஆங்கிலப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் இந்தியின் நிலைமை.

இந்த நிலையில்தான், டி.எஸ்.ஆர். சுப்ரமணியம் குழுவின் பரிந்துரையின்படி, மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிவித்திருக்கிறது. இதுவரை கல்வியில் நாடு கண்ட ஏற்றத்தாழ்வுகளை புதிய கல்விக் கொள்கை கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. அதைவிட முக்கியமானது, அக்கொள்கை வரைவு பல்வேறு அபாயங்களைத் தாங்கி நிற்கிறது என்பதுதான். அதில் மூன்று அம்சங்களை மட்டும் உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
1) கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருந்து, மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்படும். அப்படிச் செய்யும்போது, கல்வியில் மாநில அரசின் கட்டுப்பாடு எதுவும் இருக்காது. அப்படிச் செய்தால், எல்லா பள்ளிகளுமே கேந்திரிய வித்யாலயாக்களைப் போல சிறப்பாக மாறிவிடும் என நீங்கள் நினைக்கலாம்.
ஆனால், பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு மேல்நிலைக் கல்விக்குச் செல்லும் உங்கள் பிள்ளைகளுக்கு வீரசாவர்க்கரையும், கோல்வால்கரையும் நன்கு தெரிந்திருக்கும். ஆனால், காயிதே மில்லத்தையும், ம.பொ.சியையும், மறைமலையடிகளையும் மட்டுமல்ல, தந்தை பெரியாரையும் அறிஞர் அண்ணாவையும்கூட அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.
உங்களின் வரலாற்றை உங்களிடமிருந்து பிடுங்கிவிட்டால் போதும்; உங்களிடமிருந்து எதையும் பிடுங்க முடியும்.
2) மதிய உணவுத் திட்டத்தை தனியார் வசம் ஒப்படைப்பது. சர்வதேச அளவில் உணவு அரசியலை அறிந்தவர்களுக்கு இத்திட்டத்தின் பின்னணியில் இருக்கும் ‘தொலைநோக்கு’ புரியும். எதிர்காலத்தில் எந்த மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருளையும் உங்கள் பிள்ளைகளின் உணவுத் தட்டில் சேர்த்துவிட முடியும்.
3) கட்டாயத் தேர்ச்சி முறை, 3ம் வகுப்போடு நிறுத்தப்படும். இதனால் 4ஆம் வகுப்பு முதலே மாணவர்கள் மத்தியில் மதிப்பெண் போட்டியும், இலக்குகளும் இயல்பாக உருவாகும். விளையாட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறையும். பட்டாம்பூச்சிகள் சிறைபிடிக்கப்படுவார்கள்.
ஆகவே, இப்போதாவது விழித்துக் கொள்ளுங்கள்.

காலங்கள் எல்லாம் கடந்தபிறகும் எது எஞ்சி நிற்கிறதோ அதுதான் வாழ்க்கை; கற்றவை எல்லாம் மறந்தபின்னும், எது எஞ்சி இருக்கிறதோ அதுதான் கல்வி.
உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கல்விக் கோமான்களிடம் ஒப்படைத்தது போதும். நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்.

Leave a Response