எமது காடுகள் மொட்டையடிக்கப்படுவதன் மர்மம் என்ன? – அடுக்கடுக்கான சான்றுகளுடன் தமிழின அழிப்பு அம்பலம்


போர் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்த பின்னரும் தமிழ் (வடகிழக்கு) மாகாணங்களில் இராணுவத்தினருக்கும், கடற்படையினருக்கும், விமானப்படையினருக்கும் என்ன வேலை? என ஆவேசத்துடன் கேள்வியெழுப்பியுள்ளார் வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன்.

அமரர் அ.அமிர்தலிங்கத்தின் 89 ஆவது பிறந்த நாள் நினைவுப்பேருரையும், நூல் வெளீயீடும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 27) பிற்பகல் யாழ். பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்ட தமிழ் (வடமாகாண) முதலமைச்சர் அங்கு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு பேசியுள்ளார்.

அவர் மேலும் பேசுகையில்,

எவ்வாறு சுனாமியின் போது பாரிய கடலலைகள் எமது இடங்களையும், மக்களையும், கபளீகரம் செய்தனவோ அதனை ஒத்த விதத்தில் எமது பாரம்பரிய நிலங்கள் பறி போகின்றன.

பல நூற்றாண்டு கால வாழ்க்கை முறைகள் சிதைவடைந்து வருகின்றன. ஒரு பக்கத்தால் சமாதானம் பேச, மறுபக்கத்தால் சதி வேலைகள் இடம்பெற்று வருவதை நாம் சுட்டிக் காட்டினால் எமக்குத் தீவிரவாதிகள் பட்டம் சூட்டுகிறார்கள்.

கடந்த 1972 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. முன்னைய அரசியல் யாப்பில் தமிழ் மக்களுக்கு ஒரேயொரு பாதுகாப்பாக விளங்கிய 21 ஆவது உறுப்புரிமை இந்த அரசியல் யாப்பில் புறந் தள்ளப்பட்டது.

தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அரசாங்கம் முன்பாக ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தன.அவற்றைப் பரிசீலிக்காமலேயே நிராகரித்தது அரசாங்கம். பல விதங்களில் சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு வழி வகுத்தது.

இதனால், சமஸ்டி அமைப்பின் கீழ் தன்னாட்சி என்ற கோரிக்கைக்குப் பதிலாக வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் தமிழர்களுக்கு இருந்த சுதந்திர நாடு மீண்டும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்

என்ற கோரிக்கை வலுப் பெற்றது. இதுவே, ஆயுதம் ஏந்தியவர்களின் குரலாகவும் ஒலித்தது.

இன்று ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட நிலையில் நாம் மீண்டும் சமஸ்டி அமைப்பின் கீழ் தன்னாட்சிக் கோரிக்கைக்கே தள்ளப்பட்டு விட்டோம்.

இன்றைய கள நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது என்பதை எமது மக்கள் முற்றாக உணர்ந்துள்ளார்களோ என்பதை நானறியேன். போர் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்த பின்னர் வடகிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினருக்கும், கடற்படையினருக்கும், விமானப்படையினருக்கும் இங்கு என்ன வேலை?

முன்னர் தெற்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரம் மீன்பிடிப்பதற்காக இடம்பெயர்ந்து வந்த மீனவ மக்கள் இன்று நிரந்தர வதிவிடங்களை இராணுவத்தினரின் உதவியுடன் முல்லைத்தீவுக் கடற்கரையில் அமைத்து வருவதன் சூட்சுமம் என்ன? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் எமது கனிய வளங்கள் தெற்கிலிருந்து வருபவர்களால் சூறையாடப்பட்டுச் செல்வது எமது மக்களுக்கு இன்னும் புரியவில்லையா? எமது காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. காடுகளின் நடுவே மரங்கள் பல வெட்டப்பட்டு காடுகள் அற்ற நிலையில் பல இடங்கள் மொட்டையாகக் காட்சியளிக்கின்றன.இதன் மர்மம் என்ன?

நாங்கள் தற்போது இராணுவ முகாம்களை மூடிக் கொண்டு வருகிறோம் என அரசாங்கம் கூற அமெரிக்க நிறுவனமொன்று 2009 ஆம் ஆண்டின் பின்னர் 2016 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இராணுவ முகாம்களின் எல்லைகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன எனப் படமெடுத்து வெளியிட்டுள்ளதன் தாற்பரியம் என்ன?

பலாலிக் காணிகள் கையளிக்கப்பட மாட்டாது மாறாகக் கையகப்படுத்தப்படும் எனப் பலாலி இராணுவத் தளபதி கூறியதன் அர்த்தம் என்ன?

காணாமற் போனோர், சிறைகளில் அரசியல் காரணங்களுக்காக வாடுவோர், விடுவிக்கப்பட்ட போதும் உளப் பாதிப்பிற்கு உள்ளானோர், முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு நடைப் பிணங்களாக நடமாடும் எமது மக்கள், இளம் விதவைகள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், தாய்- தந்தையற்ற அநாதைக் குழந்தைகள், பாலியல் துஸ்பிரயோகங்களுக்கும், போதைப் பொருளுக்கும் அடிமையாகியுள்ள இன்றைய எமது இளைய சமூதாயம் என எமது சமூதாயம் சின்னா பின்னமாக்கப்பட்டுச் சிதைந்து வரும் சூழல் எதனை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது?

நாட்டின் எந்தவிடத்திலும் விகாரைகளைக் கட்டலாம்? சிங்கள மக்களைக் குடியேற்றலாம் என ஆட்சிப் பொறுப்பிலுள்ளவர்கள் கூறுவது எதனை எடுத்துக் காட்டுகின்றது? எமது இன்றைய இளைய சமூதாயம்

எவ்வாறாயினும் வெளிநாடுகளில் சென்று குடியமர வேண்டும் என்ற வெறியில் வாழ்ந்து வரும் பாங்கு எதனை வெளிப்படுத்துகின்றது ?

எமது பாரம்பரிய நிலங்களில் சுற்றுலா மையங்கள் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டு வருவது எதனை உணர்த்துகின்றது? என் கணிப்பின்படி நாங்கள் சிறுகச் சிறுக அழிக்கப்பட்டு வருகின்றோம்.

தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரிந்த ஒரு இளம்பெண் சடுதியாக அறிமுகமான ஒரு ஆண் எங்கோ செல்லத் தன்னை அழைக்கிறான் என்றால் அவனை ஏதோ ஒரு சபல புத்தி ஆட்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வான்.

அறுபது வருடங்களுக்கு மேலாக எமக்கு எந்தவிதமான நன்மைகளையும் பெற்றுத் தராத அரசாங்கம் தற்போது முண்டியடித்துக் கொண்டு முதலீடுகளைச் செய்யவும், செயற்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கவும் முன்வந்தால் அதற்கான அடிப்படைக் காரணங்களை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ஆவேசத்துடன் வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Leave a Response