இந்திய ஒருமைப்பாடு குறித்து காங்கிரஸ், பாசக பேசுவது வெறும் வாய்ப்பேச்சு – பழ.நெடுமாறன் சாடல்

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி ஆகஸ்ட் மாதத்துக்குள் தமிழகத்துக்கு கர்நாடகா வழங்க வேண்டிய நீரில் நிலுவையில் உள்ள 50.052 டிஎம்சி நீரை உடனடியாக காவிரியில் திறந்துவிடுமாறு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 22-ம் தேதி மனு தாக்கல் செய்தது. இம்மனு வருகிற செப்டம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில் தமிழக அரசின் மனுவை எதிர்கொள்வது தொடர்பாக கர்நாடக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை ஆகஸ்ட் 27 அன்று கூட்டியது. பெங்க ளூருவில் உள்ள விதானசவுதாவில் க‌ர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந் திரா, உள்துறை அமைச்சர் பரமேஷ்வர், மத்திய அமைச்சர்கள் அனந்தகுமார், சதானந்த கவுடா, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர்கள் வீரப்ப மொய்லி (காங்கிரஸ்), ஜெகதீஷ் ஷெட்டர் (பாஜக), குமாரசாமி (மஜத) உட்பட பல்வேறு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கு, கர்நாடக விவசாயிகளின் நிலை, அணைகளின் நீர்மட்ட நிலவரம், கர்நாடக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கர்நாடகாவில் வறட்சி நிலவுவதால் தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்கக் கூடாது என காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய அனைத்துக் கட்சி தலைவர்களும் வலியுறுத்தினர்.

பின்னர் முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசும்போது,
பருவமழை பொய்த்ததால் கர்நாடகாவுக்கு குடிநீருக்கே போதிய நீர் இல்லை. இந்நிலையில் தமிழகத்துக்கு பாசனத்துக்கு எப்படி நீர் திறந்துவிட முடியும். கர்நாடகாவில் இக்கட்டான நிலை நிலவுவதால் தமிழகத்துக்கு சுமார் 51 டிஎம்சி நீரை காவிரியில் திறந்துவிட முடியாது. தமிழக அரசின் மனுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்த அனைத்துக்கட்சி யினரின் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்ப‌ட்டுள்ளது என்றார்.

இதையொட்டி தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

தமிழகத்திற்கு காவிரி நீ்ர் அளிக்க முடியாது என கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் இருவரும் முன்னாள் முதலமைச்சர்கள் நால்வரும் கலந்துகொண்டிருக்கின்றனர். முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கு எதிராகவும் நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராகவும் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மழை குறைந்த வறட்சிக் காலத்தில் காவிரி நீரை எவ்வாறு பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் நடுவர் மன்றம் தெளிவான தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. ஆனால் மழையின்மையைக் காரணம் காட்டி தனக்குப் போக மீதம் நீர் இருந்தால்தான் தமிழகத்திற்கு தரமுடியும் என கர்நாடக அனைத்துக் கட்சிகளும் பிடிவாதம் காட்டி வருகின்றன.அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக விளங்க வேண்டிய மத்திய அமைச்சர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்கண்ட தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பது கண்டு தமிழகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

மேலே கண்டவாறு முடிவெடுத்துள்ள கட்சிகள் அனைத்தும் அகில இந்திய கட்சிகளே இவ்வாறு இந்திய அரசியல் சட்டத்திற்கும் உச்சநீதிமன்றத்திற்கும் எதிராக செயல்படும் கர்நாடக மாநிலத்தில் உள்ள தங்கள் கட்சித் தலைமைகளை கண்டிக்கவும் தமிழ்நாட்டிற்கு நியாயமான உரிய நீரை உடனடியாக அளிக்குமாறும் கூற இக்கட்சிகளின் அகில இந்திய தலைவர்கள் முன்வர வேண்டும். இல்லையெனில் தேசிய ஒருமைப்பாடு பற்றி அக்கட்சிகள் கூறுவது வெறும் வாய்ப்பேச்சே என தமிழக மக்கள் கருத நேரிடும் என எச்சரிக்கிறேன்.

Leave a Response