ஜாக்குவார் தங்கம் எப்போது கடைகளை கொளுத்துவார்..?


நேற்று முன்தினம் நடைபெற்ற ‘கன்னா பின்னா’ என்கிற படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம்.. வழக்கம்போல திருட்டு விசிடியை ஒழிக்கவேண்டும் என குரல் கொடுத்தவர் “திருட்டு சிடி பாத்தீர்கள் என்றாலோ, விற்றீர்களோ என்றால் கைகள் உடைக்கப்படும், உங்கள் கடைகள் கொளுத்தப்படும்” என ஆவேசமாக முழங்கினார்..

அதன்பின்னர் பேசிய சேரன் தேவையில்லாமல் இலங்கை தமிழர்களை புண்படுத்தும் வகையிலான வார்த்தைகளை கொட்டிவிட்டு, இப்போது அதுகுறித்த கண்டனங்களுக்கு ஆளாகி வருகிறார்.. அது இருக்கட்டும் ஜாக்குவார் தங்கம் சொன்னாரே கைகளை உடைப்பேன்.. கடைகளை கொளுத்துவேன் என்று.. அதை எப்போது செய்வார்..?

ஏனென்றால் அந்த விழாவில் பேசிய சேரனே தமிழ்நாட்டில் 18 ஆயிரம் திருட்டு டிவிடி கடைகள் இருக்கின்றன. சென்னை பர்மா பஜாரில் இருக்கிற அத்தனை கடைகளிலும் திருட்டு டிவிடி விற்கிறார்கள்.. போலீசும் அதை தாண்டித்தான் தினமும் போய்வந்துட்டு இருக்கு என உண்மை நிலவரத்தை கூறியிருந்தது கவனிக்கத்தக்கது. ஆக, இப்போதும் விற்பனை படு ஜோராக நடந்துகொண்டுதான் இருக்கிறது.

அப்படியானால் ஜாக்குவார் மாஸ்டர் பர்மா பஜாரில் உள்ள ஏதாவது இரண்டு கடைகளை சாம்பிளுக்கு கொளுத்தினாலே மற்ற கடைக்காரர்கள் கிடுகிடுவென நடுங்கிவிட மாட்டார்களா என்னா..? அதேபோல ஒரு கடையில் திருட்டு டிவிடி வாங்கும் சாதாரண பொதுஜனத்தை பின் தொடர்ந்து சென்று, அவர் வீட்டில் அந்தப்படத்தை பார்க்கும்போது, உடனே அவரின் கைகளை உடைத்தால் இன்னும் அதை கேள்விப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள திருட்டு டிவிடியில் படம் பார்க்கும் அதனை பேரும் பயப்படுபவார்களே..

இல்லை பொது ஜனத்தின் வீடு வரை தொடர்ந்து செல்வது சிரமமாக இருந்தால், பஜாரில் அவர் திருட்டு டிவிடி வாங்கும்போதே கைகளை உடைத்தால் கூட சரிதான். அதை விட்டுவிட்டு வருடக்கணக்காக கீறல் விழுந்த ரெக்கார்டாக விழா மேடைதோறும் இதையே புலம்பிக்கொண்டு இருந்தால் நன்றாகவா இருக்கிறது..?

திருட்டு டிவிடி தயாரிப்பவர்கள் சிந்திக்கமாட்டார்கள்.. ஆனால் இனிமேல் ஜாக்குவார் தங்கத்தை விழாவுக்கு அழைப்பவர்களாவது சிந்திக்கலாம் இல்லையா..?

Leave a Response