16 பவுனுக்கு முக்கால்பவுன் -ராஜபக்சேயின் மோசடி. குமுறும் ஈழத்தமிழர்

அண்மையில் வன்னியில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் ஒரு தொகுதியை வன்னி மக்களுக்கு வழங்கப்படும் நிகழ்வு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு நானும் போயிருந்தேன். அங்கு நடந்த சில விடயங்களை பகிர விரும்புகின்றேன்.

இராணுவம் எங்களை அதிகாலையிலேயே வரச் சொன்னது. நாங்கள் போனோம். இன்று நாங்கள் உள்ள நிலமையில் 16பவுண் தங்கம் எங்களுக்கு கிடைத்தால் பேருதவி என்று அப்பா சொன்னார். அப்பாவும் நானும் போனோம். வீட்டில் உள்ள எல்லாரையும் அழைத்து வரும்படி இராணுவத்தினர் சொன்னார்கள்.

எங்களை அறிவியல் நகரில் முதலில் கொண்டு சென்றார்கள். எங்களை முள்வேலி முகாங்களுக்குள் கொண்டு போய் அடைப்பதுபோல அங்கும் இங்குமாய் அலைத்தார்கள். பலர் களைத்துப் போய்விட்டார்கள். உடைகள் எல்லாம் அழுக்கடைந்தன. ஒருவாறு ரயின் ஊடாக கொழும்பு வந்தோம்.

நாங்கள் அலரிமாளிக்கைக்குள் நுழையும்போது அங்கிருந்த பெரும் திரைகளில் வீடியோ காட்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. அதில் புலிகளை இராணுவத்தினர் அழித்து இராணுவத்தினர் மக்களைப் காப்பாற்றும் பாணியில் அமைந்த ஆவணப்படம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. வன்னியில் நாங்கள் கண்மூடித்தனமான இன அழிப்பு யுத்தத்தினால் பட்ட அவலங்கள் ஏராளம்.

எங்கள் சொந்தங்கள் பலரை காவுகொடுத்தோம். எங்கள் வீட்டில் இரு குடும்பஉறுப்பினர்கள் பாதுகாப்பு வலய செல் தாக்குதலில் உயிரிழந்தார்கள். எங்கள்மீது அவ்வாறு கொடூர அழிப்பு போரை செய்துவிட்டு மக்களை காக்கும் யுத்தம் என்ற போர்வையில் ஒளிபரப்பான ஆவணப்படம் எங்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நாங்கள் உள்ளே வருகைதரும்போது, எங்களின் கைகளில் துண்டுப்பிரசுரம் ஒன்று வழங்கப்பட்டது. அதில் ஜனாதிபதியின் கடந்த கால சாதனைகள் என்று சில விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார்கள். யுத்தத்தை முடித்தவர், சமாதானத்தை தந்தவர், அபிவிருத்தியை தந்தவர் என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தது.

அத்துடன் அந்த துண்டுப் பிரசுரத்தில் வெற்றிலை சின்னத்திற்கு நேரே எங்களை புள்ளடியிடுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. கைகளில் அந்த துண்டுப் பிரசுரங்களை கொடுத்தே உள்ளே எங்களை இருத்தினார்கள். 25பேர் வரையில் மேடையில் அழைக்கப்பட்டு தங்க நகைகள் கையளிக்கப்பட்டன.

ஏனையவர்களுக்கு மேடைக்கு கீழே இராணுவத்தினர் தங்கத்தை வழங்கினார்கள். கைகளில் ஆப்பிட்ட பொதியிடப்பட்ட தங்கத்தை வழங்கினர்கள். யார் எவ்வளவு இழந்தார்கள்? எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று பாக்கவில்லை. நாங்கள் 16 பவுண் நகையை வியாபாரத் தேவை ஒன்றுக்காக தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்தோம்.

ஆனால் எங்களுக்கு முக்கால் பவுண் மாத்திரமே வழங்கப்பட்டது. நிகழ்வுக்கு வந்திருந்த நிறையப் பேருக்கு இவ்வாறு தங்ககங்கள் குறைவாக பகிர்ந்தளிக்கப்பட்டன. அப்படி என்றால் மிகுதி தங்கம் எங்கு என்று யாரைக் கேட்பது? ஜனாதிபதி மகிந்தவோ யுத்தத்தில் தான் பெற்ற வெற்றியை தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தார்.

தங்கம் வழங்குவதை ஊடகங்கள் பலவாறு விமர்சிப்பதாக ஜனாதிபதி சொன்னார். ஏன் இந்த காலப்பகுதியில் வழங்கப்படுகின்றது என்பதற்கும் அவர் விளக்கம் கொடுத்தார். தங்க நகைகளுக்கு உரியவரை தேடிக்கண்டுபிடித்து ஐந்து, 10 வருடமானாலும் அவரின் கைகளில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டாராம். அதன்படி இப்போதுதான் எங்களைத் தேடிக் கண்டுபிடித்தவராம்.

எங்களுக்குள் இருந்தசோகங்களுடன் நாங்கள் வெறும் பிணங்களைப் போல இருந்தோம். 16பவுண் தங்கத்தில் முக்கால் பவுணை கொடுத்துவிட்டார் ஜனாதிபதி மகிந்த. விலை மதிக்க முடியாத எங்கள் தங்க உயிர்களை அவர் தருவாரா? செத்தவர்களையும் சாகவில்லை என்று காணாமல் போனவர்களையும் நாங்கள் தேடிக் கொண்டு தெருத் தெருவாக அலைகிறோம்.

அங்கிருந்த மக்களின் முகங்களில் இப்பிடி எத்தனையோ கேள்விகள். எங்களை சிரியுங்கள், மகிழுங்கள் என்று சொன்னார்கள். சிலர் சிரித்தார்கள். சிரிக்க வேண்டிய மகிழந்து காட்ட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகினோம். நாங்கள் வெளியேறும் போது விட்ட பெருமூச்சும் ஏக்கம் புதைந்த முகங்களும் யாருக்கும் தெரியும்?-யாளிமுகன்

 

Leave a Response