தமிழ் கலாச்சாரத்தைக் காப்பாற்ற சின்னத்திரை நடிகர்கள் போராட்டம்

தமிழ்த்தொலைக்காட்சிகளில் சீரியல் எனப்படும் நெடுந்தொடர்களுக்குப் பெரிய வரவேற்பு இருக்கிறது. இதனால் எல்லாத் தொலைக்காட்சிகளிலும் சேர்த்து நாளொன்றுக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகின்றன. அவை எல்லாமே தமிழகத்திலேயே எடுக்கப்பட்ட நிலை மாறிவிட்டது. அண்மைக்காலமாக பிறமொழியில் ஒளிபரப்பான தொடர்களை மொழிமாற்றம் (டப்பிங்) செய்து வெளியிடுவது அதிகரித்திருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொடங்கிய இவ்வழக்கம் அப்படியே ஒவ்வொரு தொலைக்காட்சியாகப் பரவி கடைசியாக சன் தொலைக்காட்சியிலும் நாகினி என்கிற மொழிமாற்றுத் தொடர் ஒளிபரப்பாகிறது.

இதனால் தமிழக சின்னத்திரைக்கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பின்மை ஏற்பட்டுவிட்டது. ஒரு நடிகர் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில்,

மொழிமாற்று தொடர்களால் தமிழ் தொலைக்காட்சியை நம்பி வாழும் சின்னத்திரை கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை தடுக்க அறவழி விழிப்புணர்ச்சி போராட்டம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்த சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு முடிவு செய்திருக்கிறது.

இதுகுறித்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், சின்னத்திரை சங்க தலைவர் தளபதி பேசுகையில், அன்று முதல் இன்று வரை சின்னத்திரை சீரியல்களை விரும்பி பார்ப்பதே பெண்கள்தான் அவர்கள் தற்போது இந்தி சீரியல்களில் வரும் பெண்களின் ஆடைகள் முதல் அணிகலன்கள் வரை அனைத்தையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் ரசனை நம் கலாச்சாரத்தைவிட்டு எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது. நம் கலாச்சாரத்தை நாம் தான் காப்பாற்ற வேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில் கையெழுத்து வேட்டையும் நடத்தவிருக்கிறோம். சின்னத்திரை முதல் பெரிய திரை வரை உள்ள அனைத்து சங்கங்களில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் வரை அனைவரிடமும் கையெழுத்து வாங்கி அதை மாண்புமிகு அம்மா அவர்களிடம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம் என்று தலைவர் தளபதி பேசினார்.

அதைத்தொடர்ந்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

சின்னத்திரை சம்பந்தப்பட்ட அனைத்து சங்கங்களுக்கும் தேர்தல் நடந்து புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அந்த நிர்வாகிகள்
ஒன்றிணைந்து தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்புக்காக புதிய நிர்வாகிகளை தேர்வு செய்துள்ளனர் என்பதை மகிழ்வுடன்
தெரிவித்துக்கொள்கிறோம்.

சின்னத்திரை கூட்டமைப்பின் முதல் வேலையாக சின்னத்திரை சம்பந்தப்பட்ட அனைத்து உறுப்பினர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்
அளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கும் மொழி மாற்று தொடர்களை கட்டுப்படுத்த முடிவெடுக்கப்பட்டது. எனவே 14-8- 16 அன்று வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சின்னத்திரையின் அனைத்து சங்கங்களின்அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்கும் அடையாள உண்ணாவிரதம்நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே சின்னத்திரை மற்றும் பெரியத்திரை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், நடிகர் சங்கம் மற்றும்தொழிலாளர்கள் சம்மேளனத்தை சேர்ந்த அனைத்து சங்கங்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க முன் வந்துள்ளனர். அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் தமிழக மக்களிடையே இந்த மொழி மாற்று தொடர்களால் ஏற்பட்டுள்ள அபாயத்தை பற்றிய ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த அனைத்து பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்கள் அனைவரும் உதவுமாறு தாழ்மையுடன்கேட்டுக்கொள்கிறோம்.

நமது ஒற்றுமையே நமது எதிர்காலம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response