ஆட்சி நாராயணசாமியுடையதுதான், ஆனால் அதிகாரம் கிரண்பேடிக்கு – காங்கிரசு என்ன செய்யப்போகிறது?

டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, முதல்வர் அர்விந்த்கேஜ்ரிவாலுக்கும் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது.

குறிப்பாக, ஐஏஎஸ் அதிகாரி களை கேஜ்ரிவால் தன்னிச்சையாக இடமாற்றம் செய்தார். மேலும் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க (டிடிசிஏ) ஊழல், அரசுப் பேருந்துகளை சிஎன்ஜியில் இயங்குமாறு மாற்றப்பட்டதில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க தனித்தனி குழுக்களை அமைத்தார்.

டெல்லி முதல்வர் தன்னிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுப்பதாகக் கூறி, அதை நஜீப் ஜங் ஏற்க மறுத்தார். இதனால் அரசின் உத்தரவை நடைமுறைப்படுத்த முடியாத சூழல் நிலவியது. இரு தரப்புக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் வலுத்தது.

இதனிடையே, கடந்த 2015-ல் மத்திய அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரி களை நியமிக்கவும், இடமாற்றம் செய்யவும் துணைநிலை ஆளுநருக்கு தான் அதிகாரம் உள்ளது என்று கூறப் பட்டிருந்தது. மத்திய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள அதிகாரிகளிடம் டெல்லி ஊழல் தடுப்பு அமைப்பு (ஏசிபி) விசாரணை நடத்த முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது.

மத்திய அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் துணைநிலை ஆளுநர் அரசுக்கு ஒத்துழைக்க மறுப்பது குறித்தும் மொத்தம் 9 மனுக்களை ஆம் ஆத்மி அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி ஜி.ரோஹினி மற்றும் நீதிபதி ஜெயந்த் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு மொத்தமாக விசாரித்தது.

விசாரணையின்போது, “ஜன நாயக நடைமுறையில், முதல்வர், துணைநிலை ஆளுநர் என 2 அதிகார மையங்கள் இருக்க முடியாது” என டெல்லி அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இதுபோல, “யூனியன் பிரதேச மான டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து கிடையாது. எனவே, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லியில் துணைநிலை ஆளுநருக்குதான் நிர்வகிக்கும் அதிகாரம் உள்ளது” என்று மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களும் கடந்த மே மாதம் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த மனுக்கள் மீது நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 194 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:

டெல்லியின் நிர்வாக தலைவர் துணைநிலை ஆளுநர்தான். அவருக்குதான் அதிகாரம் உள்ளது. அவருடைய ஒப்புதல் இல்லாமல் அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது.

டெல்லி அமைச்சரவையின் முடிவுக்கு துணைநிலை ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்பது ஏற்கத் தக்கதல்ல. ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கவும் இடமாற்றம் செய்ய வும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது.

துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் முதல்வர் கேஜ்ரிவால் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் டிடிசிஏ, சிஎன்ஜி ஊழல் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்களும் சட்டவிரோதமானது. இதுதொடர்பான டெல்லி அரசின் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு புதுச்சேரி ஆட்சியில் அனைத்து நிலைகளிலும் எதிரொலிக்கும். ஏற்கனவே முழு அதிகாரத்தையும் கைக் கொண்டு செயல்படும் ஆளுநர் கிரண்பேடிக்கு இத்தீர்ப்பு எல்லா வகையிலும் உதவக் கூடும். முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை. முழு மாநில தகுதி தான் இதற்குத் தீர்வு. சென்ற ஆட்சியில் ரங்கசாமியின் மாநிலத் தகுதி குறித்த செயல்பாடு பேச்சளவில் இருந்ததே தவிர அதற்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடு எதுவும் இல்லை. தற்போது நாராயணசாமி சிறப்பு மாநிலத் தகுதிக் கோருகிறார். இதைப் பெற அவர் என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. புதுச்சேரியில் இனி ஆளுநர் கிரண்பேடி ஆட்டம் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

முழுமாநிலத்தகுதிக்கான போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி காண்பதே இதற்குச் சரியான தீர்வு எனும்போது அதற்கான செய்ல்திட்டத்தை காங்கிரசுக்கட்சி கையிலெடுக்குமா?

Leave a Response