என்னஜி’, ‘ஏதுஜி -‘ச்சீ’ – ‘ச்சீ- திசம்பர் 6 கண்டன ஆர்ப்பாட்டப் பேச்சு

பாபர் மசூதியை அதே இடத்தில் இந்திய அரசு கட்டித் தர வேண்டும்!” என, சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் பேசினார்.

1992ஆம் ஆண்டு திசம்பர் 6ஆம் நாள், அயோத்தியில் பாபர் மசூதி அத்வானி தலைமையில் இந்துத்வ வெறியர்களால் இடிக்கப்பட்டது. அந்நாளை, ஒவ்வொரு ஆண்டும் கருப்பு நாளாக இசுலாமியர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அவ்வகையில் இவ்வாண்டு, தமிழகமெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.

சென்னை சேப்பாக்கத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு, த.மு.மு.க. தென் சென்னை மாவட்டத் தலைவர் திரு. முகமது அபுபக்கர் தலைமையேற்றார். வடசென்னை மாவட்டத் தலைவர் திரு. உஸ்மான் முன்னிலை வகித்தார். த.மு.மு.க. தலைவர் திரு. ரிஃபாயி சிறப்புரையாற்ற, தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ. நெடுமாறன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன், தமிழ்நாடு மக்கள் கட்சி சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் அருண்சோரி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசியதாவது:

“1992ஆம் ஆண்டு திசம்பர் 6ஆம் நாளில், பாபர் மசூதியை இடித்துத் தள்ளியக் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும், அந்த இடத்தை பழையபடியே இசுலாமியர்களிடம் ஒப்படைக்க வேண்டும், உச்சநீதிமன்றத்தில் உள்ள அந்த வழக்கை உடனடியாக முடித்துத் தீர்ப்பளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், இந்த ஆர்ப்பாட்டம் இங்கு நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தத் தோழர்களுக்கு எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாபர் மசூதியை இடித்தக் குற்றவாளிகள் யார்? பாரதிய சனதாக் கட்சியினர், சிவசேனை, விசுவ இந்து பரிசித் உள்ளிட்ட ஆரியப் பார்ப்பனிய வெறியர்களே அதனைச் செய்தனர். “பகைவனுக்கு அருள்வாய் நன் நெஞ்சே” என்று பாடினார் பாரதியார். ஆனால், இந்த மதவெறிக் கும்பல், ஆன்மிகத்திற்குத் தேவையான மனித நேயம் – சகிப்புத்தன்மை உள்ளிட்ட அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு, ஆன்மிகத்தை ஒரு வியாபாரமாக நடத்துகின்றனர். தாங்கள் அதிகாரத்திற்கு வர, ஆள் சேர்ப்பதற்கான ஆயுதமாக அவர்கள் இந்து மதத்தைப் பயன்படுத்துகின்றனர்.

1992ஆம் ஆண்டு திசம்பர் 6ஆம் நாள் என்ன நடந்தது? பாரதிய சனதாக் கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி, ஒரு மாதத்திற்கு முன்பே ‘இரத யாத்திரை’ என்ற பெயரில் புறப்பட்டார். அவரை அயோத்தி வரை அனுமதித்தார், காங்கிரசுப் பிரதமர் நரசிம்ம ராவ். அயோத்தியில் ஏதாவது தள்ளு முள்ளு நடைபெற்று, அவரைக் கைது செய்து விடுவார்கள் என நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், நடந்தது என்ன?

400 ஆண்டு காலம் அங்கே எழும்பி நின்றுகொண்டிருந்த பள்ளி வாசலை, அங்குலம் அங்குலமாக ஆரியப் பார்ப்பனிய மதவெறியர்கள் இடித்துத் தள்ளினார்கள். அயோத்தியில் முகாமிட்டிருந்த இந்திய இராணுவம் அதை வேடிக்கைப் பார்த்தது. அதைத் தடுத்திட இராணுவத்திற்கு உத்தரவிட மறுத்தவர், அன்றைய காங்கிரசுப் பிரதமர் நரசிம்ம ராவ். எப்படி பாபர் மசூதியை இடித்ததில், இந்து மதவெறியர்கள் குற்றவாளிகளோ, அதே போல, நரசிம்ம ராவ்வும் குற்றவாளிதான். குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்தான்.

அந்த மசூதியை இடித்து அநீதி இழைத்த அந்த கும்பலுக்குப் பரிசாக, இங்கு பதவிகள் கிடைத்தன. எல்.கே. அத்வானி துணைப் பிரதமர் ஆனார். சாமியார் உமாபாரதி, இன்று நடுவண் நீர் வளத்துறை அமைச்சராக இருக்கிறார். 2002ஆம் ஆண்டு குசராத்தில் இராண்டாயிரம் முஸ்லிம்களைக் கொன்றொழித்த நரேந்திர மோடி, இன்றைக்கு இந்தியாவின் பிரதமராக இருக்கிறார்.

இந்து மதவெறியர்கள், பாபர் மசூதி என்ற கட்டடத்தை மட்டும் இடிக்கவில்லை. மனித நேயத்தை – மனித உரிமையை இடித்தார்கள். இந்தக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வேண்டும்.

கட்டப் பஞ்சாயத்து போல உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த்து, பாபர் மசூதி வழக்கில். மசூதியை இடித்தவர்கள் இன்று ஆட்சியதிகாரத்தில் இருக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் செய்த பாவத்திற்கு பிராயச் சித்தமாக – பாப்பு மசூதி இருந்த இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைத்து விடுகிறோம் என்று உச்ச் நீதிமன்றத்தில் கூறி வழக்கை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அவர்களுக்கு மனச்சான்று என்ற ஒன்று இருந்தால், உடனடியாக அந்த இடத்தை இசுலாமியர்களிடம் வழங்கி, அரசுச் செலவிலேயே அங்கு மசூதியை பழையபடி எழுப்பி, இந்தச் சிக்கலை உடனே முடிக்க முடியும். ஆனால், அவர்கள் செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடுவார்களா?

தமிழ்நாடு – இந்துத்துவ வெறியர்களிடம் அகப்படாமல் இருக்கிறது. அவர்கள் முன் வைக்கும், இந்துத்வா என்பது வெறும் மதவெறி மட்டுமல்ல. அதனுள் ஆரிய இனவாதம் இருக்கிறது. “நாங்கள் ராமனுக்குப் பிறந்தவர்கள். மற்றவர்கள் எல்லோரும் இழிபிறவிகள்” என்று பொருள்படும் விதமாக, இப்பொழுது ஒரு நடுவண் அமைச்சர் பேசியிருக்கிறார் அல்லவா? அது அவர்களின் ஆரிய இனவாதத்தை வெளிப்படுத்தும் சான்று! இதன் உட்பொருள், இந்த நாடு ஆரிய நாடு என்பதுதான்!

இந்துத்துவாவில் மூன்று கூறுகள் இருக்கின்றன. ஒன்று, மனிதப் பிறப்பிலேயே உயர்வு தாழ்வு கற்பிக்கும் பார்ப்பனிய வர்ணாசிரம தர்மம். இன்னொன்று, ஆரிய இனவாதம்; மற்றொன்று இந்து மதத் தீவிரவாதம்.

இங்கே முழக்கம் எழுப்பிய தோழர்கள், “நாம் மாமன் மச்சான் உறவாக வாழ்ந்தோமடா! எங்களை மதவெறியால் பிரிக்காதே!” எனக் குறிப்பிட்டார்கள். ஆம், இங்கே நாம் தமிழர்களாக, ஒவ்வொருவரும் உறவுப் பெயர் கொண்டு அழைத்து, இணக்கமாக வாழ்ந்து வருகின்றோம். இது தான் இயல்பானது.

இப்பொழுது, ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. அமைப்பினர், தமிழகத்தில் ஒரு புதியவகைப் பண்பாட்டை இறக்குமதி செய்திருக்கிறார்கள். எல்லோரையும், ‘என்னஜி’, ‘ஏதுஜி’ என்று கூப்பிடும்போது ‘ஜி’ போட்டு அழைக்கிறார்கள். அதை என்னவென்று புரியாமல் கிராமங்களிலே அதை ‘ச்சீ’ – ‘ச்சீ’ எனச் சொல்கின்றனர். (சிரிப்பொலி).

நாம் அண்ணன் என்றோ, தம்பி என்றோ, மாமன் என்றோ, ஐயா என்றோ தோழர் என்றோ அழைத்துக் கொள்கிறோம். அவர்கள் ‘ஜி’ போட்டு அழைக்கிறார்கள். நமது பழக்க வழக்கப் பண்பாடுகளைக் கூட அந்நியமயமாக்குகிறார்கள்.

எந்த மதத்தினரும், அவரவர்க்கு உரிய கடவுளை அவர்கள் வழிபட இங்கு உரிமை உண்டு. அதை நாம் தடுக்க முடியாது. அதே நேரத்தில், எந்த மதத்திலும் மதவெறி என்பதை நாம் அனுமதிக்க முடியாது.

தமிழ்நாட்டில் இந்து, இஸ்லாமியர், கிறித்துவர் என்று எந்த மதத்தவராக இருந்தாலும் அவர்கள் தமிழர்கள் என்பதுதான் தமிழ்த் தேசியத்தின் நிலைபாடு! மனிதர்கள் அனைவரும் சமம்; தமிழர்கள் அனைவரும் சமம் என்பதே தமிழ்த்தேசியக் கோட்பாடு!”

இவ்வாறு பெ.மணியரசன் பேசினார்.

 

 

 

Leave a Response