பெங்களூரில் மழை வெள்ளப் பாதிப்புக்கு இதுதான் காரணம் – மேயர் தகவல்

ஜூலை 28 அன்று இரவு முழுவதும் பெய்த பலத்த மழை காரணமாக பெங்களூரு மாநகரின் புறநகர்ப் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், படகு மூலம் பொதுமக்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தால் பெங்களூரின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் மஞ்சுநாத் ரெட்டி தெரிவித்தார்.

பெங்களூரு மாநகராட்சி மாமன்ற அலுவலகத்தில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அண்மையில் பெய்த மழைக்கு பொம்மனஹள்ளி, பிடிஎம் லேஅவுட் தொகுதியில் உள்ள சில பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, தலைமைச் செயலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டோம். அதிகளவு மழை பெய்ததால் மடிவாளா ஏரி நிரம்பி, மக்கள் வசிக்கும் பகுதியில் நீர் புகுந்துள்ளது. மேலும் ஏரி நிலம், ராஜகால்வாய் நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், மக்கள் வசிக்கும் பகுதியில் மழை நீர் புகுந்துள்ளது.

எனவே, ஏரி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் வசிக்கும் பகுதியில் வெள்ளம் புகாமல் இருக்க தேவையான நீண்டகால திட்டத்தையும் உடனடியாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்கும் பணிக்கு முதல்வர் சித்தராமையா ஏற்கெனவே ரூ.800 கோடி நிதி ஒதுக்கிடு செய்துள்ளார். தற்போது மழை வெள்ளப் பாதிப்பை தடுக்க ரூ.36 கோடி நிதியை மாநகராட்சி ஒதுக்கீடு செய்துள்ளது.

மழை நின்றவுடன் வெள்ளப் பாதிப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Response