கடந்த வருடத்தை எடுத்துக்கொண்டால், இன்றைய இளம் முன்னணி நடிகர்கள் தோற்றார்கள் போங்கள் என்று சொல்லும் வகையில் கமல் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் காட்டிய வேகம் பிரமிக்க வைத்தது. விஸ்வரூபம்-2வை முடித்ததும் உத்தமவில்லன், அதை முடித்தும், தூங்காவனம் என ஒரு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பதற்குள்ளாகாவே அடுத்த படத்தில் நடித்து முடித்தார்..
இந்த வருடமும் அந்த வேகம் தொடரும் என எதிர்பார்ப்புடன் ‘சபாஷ் நாயுடு’ என்கிற படத்தை துவங்கினார்.. படப்பிடிப்பும் கூட வெளிநாட்டில் திட்டமிட்டபடி தொடங்கப்பட்டது. ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை, தொடர்ந்து அந்தப்படம் பல வித காரணங்களால் ஷூட்டிங் தடைபட்டுக்கொண்டே நிற்கிறது.
மே மாதம் அமெரிக்காவிற்கு சென்ற படக் குழுவினர் ஜுன் மாதம் படப்பிடிப்பை ஆரம்பித்தனர். ஆனால் படத்தின் இயக்குனரான டி.கே.ராஜீவ்குமாருக்கு உடல்நலம் சரியில்லாமல் போக, கமலே டைரக்சன் பொறுப்பை கவனித்து வந்தார்.. எப்படியோ வெற்றிகரமாக ஒரு ஷெட்யூல் முடிந்து சென்னை வந்தனர்.
ஆனால் எதிர்பாராத விதமாக கமல்ஹாசனுக்கு காலில் அடிபட்டு தற்போது வரை மருத்துவமனையில் இருக்கிறார். அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பினாலும் சில வாரங்கள் கட்டாய ஓய்வு எடுக்க வேண்டிய சூழ்நிலை.
இது ஒரு பக்கம் இருக்க, படத்தின் படத்தொகுப்பாளர் ஜேம்ஸ் ஜோசப் என்பவரின் மனைவி கேரளாவில் விபத்து ஒன்றில் சிக்கியதால் ஜேம்ஸ், இந்தப் படத்திலிருந்து விலகிவிட்டார். இதனிடையே ஒளிப்பதிவாளர் ஜெயகிருஷ்ணாவிற்கும் கமலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஜெயகிருஷ்ணா நீக்கப்பட்டுள்ளார்.
இவர்களுக்கு மாற்றாக வேறு கலைஞர்களை ஒப்பந்தம் செய்துதான் படப்பிடிப்பை துவங்க வேண்டும். அதுவும் கமல்ஹாசன் முழுமையாக குணம் அடைந்த பிறகே அடுத்த கட்ட வேலைகள் ஆரம்பித்து படப்பிடிப்பு நடைபெறும் என்கிறார்கள். எப்படியோ சபாஷ் நாயுடுவின் சங்கடங்கள் தீர்ந்து நல்லபடியாக திரைக்கு வந்தால் சரி.