உலக வங்கி உதவியுடன் தொண்டமனாறு தடுப்பணை புனரமைப்பு

தொண்டைமானாறு தடுப்பணை புனரமைப்புப் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. உலக வங்கியின் 399 மில்லியன் ரூபாய் நிதியில் நிறைவேறவுள்ள இந்தப் புனரமைப்பு வேலைகளை  வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்  வியாழக்கிழமை (27.07.2016) தொடங்கி வைத்துள்ளார்.

தொண்டைமானாறு உவர் நீரேரியில் மழைநீரைச் சேமிக்கும் நோக்கிலும், கடல்நீர் ஏரிக்குள் வராமல் தடுக்கும் நோக்கிலும் ஏற்கனவே தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மடைக்கதவுகள் உருக்கினால் ஆனவை என்பதால் துருவேறிப் பழுதடைந்து காணப்படுகின்றன. தற்போது 300 மில்லியன் ரூபா செலவில் துருப்பிடிக்காத கறையில் உருக்கினாலான மடைக்கதவுகளைக் கொண்டதாகத் தடுப்பணை புனரமைக்கப்பட உள்ளது.

தொண்டைமானாறு ஏரியில், தடுப்பணையின் மடைக்கதவுகளை மூடி மழைநீரைச் சேகர்க்கும்போது தாழ்வான வயல்கள் மற்றும் குடியிருப்புப்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துகொள்கிறது.

இதனைத் தடுக்கும் நோக்குடன் இரண்டு இடங்களில் வெள்ளத் தடுப்பணைகளும் கட்டப்பட உள்ளன.

சீமெந்துக் கட்டுமானப் பணிகள் மற்றும் வெள்ளத் தடுப்பணைகளுக்கென 99 மில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளது. வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்புனரமைப்பு வேலைகள் யாவும் இரண்டு வருடங்களில் முடிவடைய உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரன், த.சித்தார்த்தன், ஈ.சரவணபவன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் க.சிவாஜிலிங்கம் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

Leave a Response