அப்துல்கலாமை முன்னிறுத்தி பாஜக செய்யும் தந்திரம் – அம்பலப்படுத்தும் மணியரசன்

இராமேசுவரத்தில் அப்துல்கலாம் சிலை   திறக்கப்பட்டதையொட்டி
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்  பெ. மணியரசன் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரை….

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் சிறந்த தமிழ் உணர்வாளரும் தமிழருமான அப்துல் கலாம் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நாளான இன்று (27.07.2016) அவர் பிறந்த இராமேசுவரம் மண்ணில் அவரது உருவச் சிலையைத் தில்லியிலிருந்தவாறு தலைமை அமைச்சர் நரேந்திரமோடி திறந்து வைத்துள்ளார்.

இந்திய நகர்ப்புற அமைச்சர் வெங்கையா நாயுடு, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் உள்ளிட்ட நடுவண் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் விழாவில் பங்கேற்று உரையாற்றினர். தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்தன.

வெங்கையா நாயுடு நிறைவுரையாற்றும் போது தான், திறக்கப்பட்டது அப்துல்கலாம் சிலையா அல்லது அப்துல்கலாம் ஆச்சார்யா சிலையா என்ற ஐயம் ஏற்பட்டது.

“இராமேசுவரமும் காசியும் புனித நகரங்கள். இரண்டு நகரங்களும் இரண்டு கர்மவீரர்களுக்கு உரியவை. இராமேசுவரம் அப்துல்கலாம் என்ற கர்மவீரருக்கு உரியது. காசி அதாவது பனாரஸ் – நரேந்திர மோடி என்ற கர்மவீரருக்கு உரியது. காசி நாடாளுமன்றத் தொகுதி மோடியின் தொகுதி.

”இரண்டு கர்மவீரர்களும் வட்டாரம், மதம், மொழி, இனம் ஆகியவற்றைக் கடந்த இந்தியர்கள். இந்தியா ஒரே தேசம்; ஒற்றை உணர்வு கொண்டது என்பவர்கள்.

”இராமர் இராமேசுவரம் வந்து தான் சேதுப்பாலம் கட்டினார். இராமர் காலடிபட்ட மண் இது.

”முழுமை பெற்ற நகரங்களாக வளர்த்திட (அம்ருதா) 500 நகரங்களைத் தேர்ந்தேடுத்தோம். இராமேசுவரம் நகரம் அத்திட்டத்தில் உள்ளது. ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு மேல் இருக்கும் நகரமாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு இராமேசுவரத்திற்கு மட்டும் விதிவிலக்களித்தோம். இராமேசுவரத்தில் ஒரு இலட்சம் மக்கள் தொகை இல்லை. புண்ணிய பூமி என்பதற்காக விலக்களித்தோம்.

”500 நகரங்களின் வளர்ச்சித் திட்டங்கள் எனது அமைச்சகத்தின் கீழ்வரும் இதிலும் விலக்களித்து இராமேசுவரம் வளர்ச்சித் திட்டம் பாதுகாப்புத் துறையின் கீழ் வரும். ஆனால் இராமேசுவரத்தின் வளர்ச்சித்திட்டம் – அப்துல்கலாம் நினைவகம் – கோளரங்கம். அருங்காட்சியகம் – நினைவு மண்டபம் அனைத்தும் இந்தியப் பாதுகாப்புத் துறையின் (இராணுவத்தின்) கீழ் வரும்”.

மேற்கண்ட வெங்கய்யா நாயுடு அவர்களின் கூற்றுகளில்தான் அப்துல் கலாமை இந்துத்துவா – பா.ச.க. அரசு கொண்டாடுவதன் உள்நோக்கம் புரிகிறது.

அப்துல்கலாம் இசுலாமியர். இசுலாமிய வழிபாட்டில் – இசுலாமிய ஆன்மிகத்தில் உறுதியாக இருந்தவர்.

இசுலாம், கிறித்துவம், போன்ற மற்ற மதங்களை இந்துத்துவா தலைமையை ஏற்றுக் கொண்ட அதன் கையடக்கச் சமயங்களாக உட்படுத்த வேண்டும் என்பது தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க.வின் திட்டம். அதற்கு நாடறிந்த – உலகறிந்த இசுலாமியர் ஒருவரின் பெயரை பயன்படுத்திக் கொள்வது இந்துத்துவா ஆற்றல்களின் தந்திரம்.

அப்துல்கலாம், இளைஞர்களிடம் – மாணவர்களிடம் மிகையாக வலியுறுத்திய இந்தியத் தேசியம் – அணு ஆயுத வல்லரசாக இந்தியா உருவாவது என்ற கருத்துகளைப் பேசினார். இவற்றுக்காக, அவர் புகழ் பரப்புவது போல் – சில செயல்கள் செய்து – அதன் வழியாக இந்துத்துவாவைப் பரப்புவதுதான் பா.ச.க. ஆட்சியின் நோக்கம் என்பது அப்துல்கலாம் சிலை திறப்பு விழாவில் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.

தமிழ்நாடு – தமிழ் ஈழம் இரண்டிற்கும் இடையே இராணுவ நிர்வாகத்தில் உள்ள நகரமாக இராமேசுவரத்தை மாற்றுவது இன்னொரு திட்டம் என்று தெரிகிறது.

இந்திய அரசின் தலைமை அமைச்சராக வாச்பாயியும் குசராத் முதலமைச்சராக நரேந்திரமோடியும் இருந்த போது குசராத்தில் இரண்டாயிரம் அப்பாவி இசுலாமிய மக்கள் இந்துத்துவ வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டனர். அந்த கரையை மறைக்க அபோது நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் இசுலாம் மதத்தை சேர்ந்த அப்துகலாமை வேட்பாளராக நிறுத்தியது பா.ச.க. என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவற்றையெல்லாம் நோக்கும் போதுதான், இராமேசுவரத்தில் திறக்கப்பட்டது அப்துல்கலாம் சிலையா அல்லது அப்துல்கலாம் ஆச்சார்யா சிலையா என்ற ஐயம் ஏற்படுகிறது. தமிழ்நாட்டு அரசியலை இந்துத்துவா மேலாதிக்க அரசியலாக மாற்றிட அப்துல்கலாம் புகழைப் பயன்படுத்துகிறார்கள்.

தமிழ்வழியில் பயின்று அறிவியலாளராக வர முடியும் என இளைஞர்களுக்கு நம்பிக்கையளித்த, திருக்குறள் புகழை உலகெங்கும் பரப்பிய, மரண தண்டனையை எதிர்த்த – அப்துல் கலாமின் போற்றத்தக்க கருத்துகளை உள்வாங்கி தமிழின மாணவர்களும் இளைஞர்களும் அப்துல்கலாமைப் போற்றுங்கள். ஆனால், இந்துத்துவா உள் நோக்கத்தோடு அப்துல் கலாமை உருமாற்றும் பா.ச.க.வின் செயல்தந்திரத்தைப் புறந்தள்ளுங்கள்!

Leave a Response