அப்துல்கலாம் பற்றி எழுதுங்கள், வானில் பறக்கலாம் – மாணவர்களுக்கு ரெயின் டிராப்ஸ் நிறுவனம் அழைப்பு


மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர்  அப்துல் கலாம் அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு ரெயின்ட்ராப்ஸ் மற்றும் சத்தியபாமா பல்கலைக்கழகம் இணைந்து, கலாம் குடும்பத்தினர் மற்றும் டாக்டர் அப்துல் கலாம் சர்வதேச தளம் ஆகியோரது உறுதுணையுடன் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழைக் குழந்தைகளை விமானத்தில் அழைத்துச் சென்று இராமேஸ்வரத்தில் உள்ள அவரது மறைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளது.

சென்னையில் ரெயின்ட்ராப்ஸ் என்ற சமூக நிறுவனத்தை 2011ம் ஆண்டு அரவிந்த் ஜெயபால் தோற்றுவித்தார். இந்நிறுவனத்தின்  விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் பல்வேறு சமூக முன்னேற்ற நடவடிக்கைகள் பலராலும் நன்கு அறியப்பட்டது. வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உதவி, பெண்களின் மாண்பைப் போற்றும் சாதனைப் பெண்கள் நிகழ்ச்சி, பசித்தவர்களுக்கு உணவிடும் விருந்தாளி எனும் திட்டம் என ரெயின்ட்ராப்ஸ் பல சமூக பணிகளை ஆற்றி வருகிறது. இந்த நிறுவனத்தின் தூதராக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா உள்ளார்.

டாக்டர்  அப்துல் கலாம் என்ற பெயரைக் கேட்டாலே மனதில் ஒரு ஊக்கமும், புதிய உத்வேகமும் பிறக்கும். மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது வாழ்க்கையும் வார்த்தைகளும் நமக்கு மிகச் சிறந்ததொரு பாடமாகும். அவரது முதலாமாண்டு நினைவு தினத்தில் ரெயின்ட்ராப்ஸ் சென்னையில் உள்ள பல்வேறு காப்பகங்களில் இருந்து குழந்தைகளை விமானம் மூலம் அழைத்துச் சென்று ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தத் திட்டமிட்டுள்ளது. ரெயின்ட்ராப்ஸ் மற்றும் சத்தியபாமா பல்கலைக்கழகம் இணைந்து, கலாம் குடும்பத்தினர் மற்றும் டாக்டர் அப்துல் கலாம் சர்வதேசத் தளம் ஆகியோரது உறுதுணையுடன் சலாம் டு கலாம் என்ற இந்த நிகழ்வை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

இதற்காக தன்னம்பிக்கையூட்டும் போட்டி ஒன்று நடத்தப்படும். “கலாம் உங்கள் ஆதர்ஷ நாயகனாக இருக்கக் காரணம் என்ன? உங்கள் மிகப்பெரிய கனவு என்ன? ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதும் போட்டி வைக்கப்படும்.

இந்தப் போட்டியில் சீர்ஸ் பெண்கள் இல்லம், சேவாலயா, ஆனந்தம், மாற்றம் பவுண்டேசன் ஆகியோருடன் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் இதில் கலந்து கொள்ளலாம். 9 முதல் 12ம் வகுப்பு, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு பயில்பவர்களுக்கு இந்த போட்டி பொருந்தும். விருப்பமுள்ளவர்கள் 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரையை தமிழிலோ  அல்லது ஆங்கிலத்திலோ எழுதி  salam2kalam16@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஜூலை 5ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

போட்டியில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் குழந்தைகள் மற்றும் மாணவ-மாணவியர் அப்துல் கலாம் நினைவு தினமான ஜூலை 27ந்தேதி விமானம் மூலம் மதுரை அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து வாகனம் மூலம் ராமேஸ்வரம் கூட்டிச் செல்லப்படுவர்.

இது தொடர்பாக ரெயின்ட்ராப்ஸ் நிறுவனர் அரவிந்த் ஜெயபால் கூறியதாவது, ரெயின்ட்ராப்ஸ் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி மூலம் அப்துல்கலாம் நினைவிடம் மற்றும் வீட்டைப் பார்க்க வேண்டும் என்ற பல குழந்தைகளின் கனவு நனவாகும். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு விமானத்தில் செல்ல வேண்டும் என்பதே பெரிய கனவு தான். அந்தக் கனவை எங்கள் முயற்சியின் மூலம் நனவாக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப் பயணத்தை அவர்களது வாழ்க்கையில் மறக்க முடியாத வகையில் சிறப்புடையதாக்க முன்னணி பிரபலங்களும் அவர்களுடன் விமானத்தில் பயணிக்கின்றனர். குழந்தைகளை முன்னேற்றப் பாதைக்கு தூண்டவும் அவர்களுக்கு சிறந்ததொரு அனுபவத்தை ஏற்படுத்தித் தருவதுமே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்று அவர் கூறினார்.

மறைந்த கலாமின் குடும்ப உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டில் பங்கெடுத்துள்ளனர்.

Leave a Response