தேர்தல் அறிக்கையில் ஈழ அகதிகள் முகாம் பற்றி ஒரு வரி கூட இல்லை- வைகோ, திருமா செயலால் ஈழத்தமிழர்கள் அதிர்ச்சி

மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை மதிமுக பொதுச் செயலாளரும் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ சென்னையில் ஏப்ரல் 28 (வியாழக்கிழமை) வெளியிட்டார்.

மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டியக்கத்தை கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கின. இந்தக் கூட்டியக்கம், மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் தேர்தல் அணியாக உருவானது. அப்போதே குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை வெளியிட்டனர்.

பின்னர், மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகளும் இணைந்து பலமான 3-வது அணியை உருவாக்கியுள்ளன. தேமுதிக, தமாகா கட்சிகள் ஏற்கெனவே தங்கள் தேர்தல் அறிக்கையை தனித்தனியாக வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் பிற்பகல் 12.30 மணியளவில் தேர்தல் அறிக்கையை வைகோ வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இவ்வறிக்கை தமிழீழ ஆதரவாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. தமிழீழ ஆதரவாளர் ஒருவர் எழுதியுள்ள குறிப்பு ……

வைகோ அவர்களை தலைவராக கொண்ட மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் பல காலமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் கைதிகள் விடுதலை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது உண்மையில் நல்ல விடயம். பாராட்டப்பட வேண்டியதும்கூட.

ஆனால் சிறப்புமுகாமில் பல வருடங்களாக எந்தவித வழக்கும் இன்றி அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி அகதிகள் விடுதலை குறித்து இந்த தேர்தல் அறிக்கையில் எதுவும் கூறப்படவில்லை.

வைகோ வும் திருமாவளவன் அவர்களும் இந்த சிறப்புமகாம்களை மூட வேண்டும் என பல முறை கோரியிருக்கிறார்கள்.

சிறப்புமுகாம் வாசலிலேயே இதற்காக போராட்டமும் நடத்தியிருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் தமது தேர்தல் அறிக்கையில் இது பற்றி குறிப்பிடாதது அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

எந்த சந்தர்ப்பத்திலும் ஈழத் தமிழர்களை கைவிடமாட்டேன். ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பேன் என்று கூறிவந்த வைகோ அவர்கள் இப்போது யாருக்காக இதனை கைவிட்டுள்ளார்?

அண்மையில்கூட சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதி ஒருவரை தமிழக அரசு பலவந்தமாக இலங்கைக்கு அனுப்ப முற்பட்டபோது கடும் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்த ஒரே தலைவர் வைகோ மட்டுமே.

அப்படியான தலைவர் வைகோ அவர்கள் தமது தேர்தல் அறிக்கையில் சிறப்புமுகாம் பற்றியோ அல்லது ஈழ அகதிகள் பற்றியோ குறிப்பிடாமல் விட்டமைக்கு என்ன காரணம்?

தாங்கள் பதவிக்கு வந்தால் சிறப்புமுகாம்களை மூடுவோம் என தமது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது மட்டுமன்றி அதனை தொடர்ந்து வலியறுத்தி வருபவர் “நாம்தமிழர்” சீமான் ஒருவர் மட்டுமே.

சீமான் ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதால்தான் ஜெயா அம்மையார் வேறு வழியின்றி ஈழ அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை கிடைக்க செய்வேன் என வாக்குறுதி வழங்கினார்.

ஜெயா அம்மையார் ஈழ அகதிகள் பற்றி பேசியதால் இனி தமிழக அரசியல் தலைவர்கள் எல்லோரும் பேசுவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் வைகோ அவர்கள் அதன்பின்பும் பேச மறுப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

இன்றைய தேர்தல் களத்தில் கலைஞர் கருணாநிதி மட்டுமே தமது தேர்தல் அறிக்கையில் ஈழ அகதிகள் பற்றியோ அல்லது ஈழத் தமிழர்கள் பற்றியோ எதுவும் குறிப்பிடாமல் உள்ளார்.

தற்பொது கலைஞர் கருணாநிதி வழியில் வைகோ அவர்களும் ஈழ அகதிகள் பற்றி எதுவும் கூறாமல் கை கழுவி விட்டிருப்பது நம்ப முடியாமல் இருக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response