விடுதலைப்புலிகள் அடுத்தடுத்து கைது – தமிழீழத்தில் பதட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதி கேணல் ராமைத் தொடர்ந்து தற்போது சிறப்புத் தளபதி நகுலன், திருகோணமலை மாவட்ட புலனாய்வுத்துறை பொறுப்பாளர் கலையரசன் ஆகியோரையும் இலங்கை போலீசார் திடீரென கைது செய்துள்ளனர்.

2009-ம் ஆண்டு இலங்கை அரசுடனான இறுதி யுத்தத்துக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள், தளபதிகள் பெருமளவில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் புனர்வாழ்வு என்ற பெயரில் முகாம்களில் அடைக்கப்பட்டு சில ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அம்பாறை மாவட்ட தளபதியாக இருந்த கேணல் ராம் நேற்று முன்தினம் திடீரென இலங்கை அரசின் தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் கிளிநொச்சியில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிறப்புத் தளபதியான நகுலனும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் புலிகளின் சார்லஸ் ஆண்டனி படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்தவர். இறுதி யுத்தத்தின் போது அம்பாறை மாவட்டத்தில் கேணல் ராமுடன் இணைந்து செயல்பட்டார். இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு 2013-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

அதன் பின்னர் திருமணம் செய்து வாழ்ந்த நிலையில் திடீரென நகுலனை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோல் திருகோணமலை மாவட்டத்தில் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளராக இருந்த கலையரசனும் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத் தளபதிகள் திடீரென அடுத்தடுத்து கைது செய்யப்படுவது ஈழத் தமிழர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response