பெங்களூரு நூலகம் சூறை, பண்பாட்டு அழிவுச் செயல் – பழ.நெடுமாறன் கடும்கண்டனம்

பெங்களூரில் தமிழ் நூலகம் சேதப்படுத்தப்பட்டதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

பெங்களூரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் திருக்குறள் மன்றத்தின் தமிழ் நூலகத்தை சமூக விரோதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பூட்டை உடைத்துத் திறந்து, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை தெருவில் வீசிச் சென்றுள்ளனர். இந்த நிகழ்வு தமிழர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நூலகம் சூறையாடப்பட்டிருப்பது தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட பண்பாட்டு அழிவுச் செயலாகும். இதற்குக் காரணமான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு முன்வர வேண்டும்.

திருக்குறள் மன்றத்தைப் புதுப்பிக்கவும், சேதமான நூல்களைச் சீர்படுத்தவும் தேவையான உதவிகளைச் செய்ய தமிழர்கள் முன் வர வேண்டும் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

 

Leave a Response