கருணாநிதி தமிழிலும் ஜெயலலிதா ஆங்கிலத்திலும் வேட்புமனு தாக்கல்

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை முதல்வர் ஜெயலலிதா ஆங்கிலத்திலும், திமுக தலைவர் கருணாநிதி தமிழிலும் தாக்கல் செய்துள்ளனர். அதில் கருணாநிதி தன்னிடம் கார் உள்ளிட்ட வாகனம் ஏதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா தன் வசம் 9 கார்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் மே மாதம் 16 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தை ஆளும் அதிமுகவின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஏப்ரல் 25 ஆம் நாள் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அவர் தனது வேட்பு மனு விவரங்களை ஆங்கிலத்தில் சமர்ப்பித்துள்ளதோடு, ஆங்கிலத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கருணாநிதி, திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஏப்ரல் 25 அன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

அவர் தனது வேட்பு மனு விவரங்களை தமிழில் சமர்பித்துள்ளதோடு, தமிழிலும் கையெழுத்திட்டுள்ளார்.

Leave a Response