திமுக, அதிமுக வினர் தமிழ்மக்களை ஏமாற்றுகின்றனர் – சீமான் தாக்கு

நெல்லை மாவட்டம் தென்காசி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகிலும், அம்பாசமுத்திரம் தொகுதி வேட்பாளர் தென்னரசை ஆதரித்து அம்பாசமுத்திரத்திலும் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.கவும் மாறி மாறி ஆட்சி செய்துள்ளன. ஆனால், இந்த கட்சிகளின் ஆட்சியால் பொதுமக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை. இரு கட்சிகளுக்கு மாற்றாக ஆட்சி அமைக்க நாம் தமிழர் கட்சி தேர்தலில் களம் புகுந்துள்ளது.

234 தொகுதிகளிலும் சீமான் எப்படி வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார்? என சில அரசியல் கட்சி தலைவர்கள் ஆச்சரியமாக கேட்கிறார்களாம். எனக்கு தமிழகம் முழுவதும் தமிழ்ச் சொந்தங்கள் இருக்கின்றனர். உடன் பிறப்புகள் ஆதரவு கொடுக்கின்றனர். அவர்கள் ஆதரவோடு தேர்தலில் போட்டியிடுகிறோம்.

இலங்கையில் தமிழ்ச் சொந்தங்கள் படுகொலை செய்யப்பட்டபோது எந்த அரசியல் கட்சியும் தட்டிக் கேட்கவில்லை. தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து செய்யாத திட்டங்களை இனிமேல் திராவிட கட்சிகள் செய்யப்போவதாக கூறுவது ஏமாற்று வேலை. அந்த கட்சிகள் தமிழகத்தை கடனாளியாக்கியதுதான் சாதனை. தமிழகத்தில் தொடர்ந்து பற்றாக்குறை பட்ஜெட்தான் போடப்படுகிறது.

தமிழன் சாதியைப் பற்றி சிந்திப்பான். ஆனால் மொழியைப் பற்றி சிந்திக்க மாட்டான். ஒரு இனத்தின் அடையாளம் மொழி. அதற்கு தமிழர்கள் முக்கியத்துவம் தராதது வேதனை தருகிறது. தமிழனுக்கு ஞாபக மறதியும் அதிகம். அதை பயன்படுத்திக் கொண்டுதான் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மக்களை ஏமாற்றுகின்றன.

கச்சதீவை மீட்போம் என்று கருணாநிதி கூறுகிறார். இலங்கைக்கு கச்சத்தீவை கொடுத்து விட்டு இப்போது மீட்கப் போகிறேன் என ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதி கொடுத்து வருகிறார். ஆட்சிக்கு வந்ததும் அந்த வாக்குறுதியை மறந்து விடுகிறார். தமிழகத்தில் மதுவிலக்கு கேட்டு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றபோது மதுவிலக்கு சாத்தியமில்லை என முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார். தேர்தல் வந்த பின்பு படிப்படியாக மதுக்கடைகளை குறைப்போம் என்கிறார்.

எனவே பொய்யான வாக்குறுதிகளை அளித்து அ.தி.மு.க., தி.மு.க.வினர் இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது. தமிழகம் ஏற்றம் அடைய வேண்டும் என்றால் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் ஒரே வழி.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response